full screen background image

காவியத்தலைவன் – திரை முன்னோட்டம்

காவியத்தலைவன் – திரை முன்னோட்டம்

‘வெயில்’, ‘அங்காடி தெரு’, ‘அரவான்’ படங்களை தொடர்ந்து வசந்தபாலன் இயக்கும் புதிய படம் ‘காவியத்தலைவன்’.

’தமிழ்ப்படம்’, ’வ’, ’காதலில் சொதப்புவது எப்படி?’ படங்களைத் தொடர்ந்து ynot studios நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகாந்த் மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார்.

‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமாகி தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக இருக்கும் சித்தார்த் கதாநாயனாக நடிக்கிறார். தமிழில் ‘காதலில் சொதப்புவது எப்படி’. ‘உதயம்’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘ஜிகர்தண்டா’ திரைப்படங்களைத் தொடர்ந்து சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் அடுத்தத் திரைப்படம் இந்த ‘காவியத்தலைவன்’.

‘காளை’, ‘முனி’, ‘சக்கரக்கட்டி’, ‘பரதேசி’ படங்களில் நடித்த வேதிகா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக பிரபல இந்தி இயக்குனர் ராம்கோபால்வர்மாவின் ‘சத்யா 2’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அனைக்கா சோட்டி நடிக்கிறார்.

இந்தப் படத்தின் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் மலையாள திரையுலகின் முன்னணி கதாநாயகனாக இருக்கும் பிருத்விராஜ் சுகுமாரன் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே தமிழில் ‘மொழி’, ‘கனா கண்டேன்’, ‘ராவணன்’, ‘பாரிஜாதம்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘கண்ணாமூச்சி ஏனடா’ ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நாசர், தம்பி ராமையா, சிங்கம்புலி, பொன்வண்ணன், மன்சூர் அலிகான், பாபு ஆண்டனி, கரிகாலன், குயிலி, இயக்குனர் டி.பி.கஜேந்திரன், கிஷோர், கொட்டாச்சி, ‘அழகி’ ஜார்ஜ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

‘ஆஸ்கர் நாயகன்’ இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்தின் கதையைக் கேட்டவுடன், இது நாட்டுப்புற இசைக்கும் கர்நாடக இசைக்கும் முக்கியத்துவமுள்ள படமாக இருக்குமென நினைத்து இசையமைக்க சம்மதித்ததோடு, இதுவரையிலும் இல்லாத அளவுக்கு ஒரு தனித்துவமான இசையையும் வழங்கியுள்ளார்.

‘பில்லா’, ‘போக்கிரி’, ‘எங்கேயும் காதல்’, ‘மதராசப் பட்டிணம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘வேட்டை’, ‘தாண்டவம்’, ‘தலைவா’, மற்றும் இந்தித் திரைப்படங்களான ‘தூம்’, ‘வாண்டட்’, ‘வாரணாசி’ போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘யாரடி நீ மோகினி’, ‘தெய்வத்திருமகள்’ போன்ற திரைப்படங்களுக்கு கலை இயக்குநராக பணிபுரிந்த கலை இயக்குனர் சந்தானம் இப்படத்தில் கலை இயக்குநராகப் பணிபுரிகிறார்.

‘அங்காடி தெரு’, ‘நான் கடவுள்’, ‘நீர்ப்பறவை’, ‘கடல்’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன்தான் இந்தப் படத்துக்கும் உரையாடலை எழுதியுள்ளார்.

தேசிய விருது பெற்ற எடிட்டர் கே.எல்.பிரவின் இப்படத்தின் படத்தொகுப்பு செய்துள்ளார்.

பாடல்களை காவியக் கவிஞர் வாலி, பா.விஜய், நா.முத்துக்குமார் ஆகியோர் எழுதியுள்ளனர். மறைந்த கவிஞர் வாலி அவர்கள் எழுதிய கடைசி பாடல் இடம் பெற்ற திரைப்படம் இந்த ‘காவியத்தலைவன்’தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் நடன அமைப்பை பிரபல நடன இயக்குனர்களான ரகுராம், சிவசங்கர், ராஜீசுந்தரம், சின்னி பிரகாஷ் ஆகியோர் அமைத்துள்ளனர்.

ஸ்டண்ட் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் தியாகராஜன் அமைத்துள்ளார்.

நிரஞ்சனி அகத்தியன், பெருமாள் செல்வம் ஆகியோர் ஆடை வடிவமைப்பை கவனிக்க, தேசிய விருது பெற்ற பிரபல மலையாள ஒப்பனை கலைஞர் ‘பட்டணம்’ ரஷீத் ஒப்பனை கலையை மேற்கொண்டுள்ளார்.

இணை தயாரிப்பாளராக சுந்தர்ராஜூம், மக்கள் தொடர்பாளராக நிகில் முருகனும், தயாரிப்பு மேற்பார்வையாளராக முத்துராமலிங்கமும், தயாரிப்பு நிர்வாகத்தை சுந்தரும் கவனிக்கிறார்கள். புகைப்பட கலைஞர் R.S. ராஜா.

காரைக்குடி, தென்காசி, வாரணாசி, சென்னை போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னால், தமிழ்நாட்டில் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்த நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் இந்தியச் சுதந்திரப் போராட்டமும் ஒரு முக்கியப் பகுதியாக வைக்கப்பட்டுள்ளது.

காவியமான இந்தக் ‘காவியத்தலைவன்’ திரைப்படம் வரும் மே மாதம் திரைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score