பி.ஆர். டாக்கீஸ் கார்ப்பரேஷன் மற்றும் வைட் மூன் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘காவல்துறை உங்கள் நண்பன்’.
படத்தில் சுரேஷ் ரவி மற்றும் ரவீணா ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ‘மைம்’ கோபி, ‘கல்லூரி’ வினோத் மற்றும் சில பிரபல நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இசை – ஆதித்யா சூர்யா, ஒளிப்பதிவு – விஷ்ணுஸ்ரீ, படத் தொகுப்பு – வடிவேல், விமல்ராஜ், கலை இயக்கம் – ராஜேஷ், எழுத்து, இயக்கம் – ஆர்.டி.எம்.
தன்னுடைய தனித்துவமான உச்சரிப்புகளால், பல முன்னணி கதாநாயகிகளுக்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கும் நடிகை ரவீணா ரவிதான், இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
ஏற்கெனவே அவர் நடித்திருந்த ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படம் மிகப் பெரிய அளவுக்கு பேசப்பட்டு, பட விழாக்களில் விருதினையும் அள்ளிச் சென்றது நினைவிருக்கலாம்.
நடிகையாக மாறினாலும் டப்பிங் பணியையும் விடாமல் செய்து வரும் நடிகை ரவீணா ரவி, இந்தாண்டின் மிகப் பெரிய படமாகவும், மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கும் இயக்குநர் ஷங்கரின் ‘2.0’ படத்தில் அதன் நாயகி எமி ஜாக்சனுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.
அது பற்றிப் பேசிய ரவீணா ரவி, “படங்களுக்கு டப்பிங் செய்வதில் சில சவால்கள் உள்ளன. நாம் டப்பிங் பேசும் பெண் கதாபாத்திரங்களின் இயல்புகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் எந்த காட்சிக்கு எப்படி பேச வேண்டும் என்பது நமக்கு கச்சிதமாக தெரியும்.
‘2.0’ படத்தில் ஏமி ஜாக்சனுக்கு டப்பிங் செய்தது மிகப் பெரிய சவாலாக இருந்தது. காரணம், நான் டப்பிங் பேசிய காட்சிகள் அனைத்துமே க்ரீன்மேட் காட்சிகளாகவே இருந்தது. அதன் சூழலை கற்பனை செய்து சரியான உணர்வை கொடுக்க நிறையவே சிரமப்பட்டேன்…” என்றார்.
மேலும் அவர் தற்போது நடித்து வரும் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படம் பற்றிப் பேசிய நடிகை ரவீணா ரவி, “இப்போதைய உலகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துதான் இந்த ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்னும் திரைப்படம் பேசுகிறது. ஆனாலும், ஒரு சாதாரண மனிதனுக்கும், காவல்துறை அதிகாரிக்கும் இடையேயான பிணைப்புதான் படத்தின் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாக இருக்கும்.
இந்தப் படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் என் முதல் படமான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
கதாநாயகனின் மனைவியாக, வேலைக்கு போகும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். என் வாழ்வில் நடக்கும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் என் வாழ்க்கையின் போக்கையே மாற்றுகிறது. உண்மையாக என் வாழ்க்கையில் அத்தகைய சூழ்நிலைகளை நான் அதுவரையிலும் எதிர்கொண்டதில்லை. இதனால் நடிப்பு பயிற்சி மூலம்தான் என்னை தயார் செய்ய வேண்டியிருந்தது…” என்றார்.