full screen background image

கூலிப்படைகளின் வரலாறுதான் ‘காவல்’ திரைப்படத்தின் கதை..!

கூலிப்படைகளின் வரலாறுதான் ‘காவல்’ திரைப்படத்தின் கதை..!

விமல், ‘புன்னகை பூ’ கீதா, சமுத்திரக்கனி நடிக்கும் ‘காவல்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய அறிமுக இயக்குநர் நாகேந்திரன் இந்தப் படம் பற்றியும் தன்னைப் பற்றியும் படத்தின் கதைக் கரு பற்றியும் விரிவாகவே பேசினார்.

அவருடைய பேச்சில் இருந்து சில பகுதிகள் :

“இந்தப் படத்திற்கு முதலில் ‘நீயெல்லாம் நல்லா வருவடா’ என்றுதான் டைட்டில் வைத்திருந்தேன். இந்த டைட்டில் சமுத்திரக்கனிக்கு மட்டும் பிடிக்கவேயில்லை. கடைசிவரையிலும் இந்த டைட்டில் மேல கோபத்துலேயே இருந்தான். உன்னை நீயே வாழ்த்திக்கிற மாதிரியிருக்குடான்னு அப்ப்ப்ப சொல்லிக்கிட்டேயிருந்தான்.

இந்தப் படத்தை முழுசும் முடிச்சு பல இயக்குநர்களுக்கும், போலீஸ் உயரதிகாரிகளுக்கும் போட்டுக் காட்டினோம். அவங்களெல்லாம் படத்தைப் பார்த்துட்டு சொன்ன ஒரேயொரு விஷயம். ‘படத்தின் டைட்டிலுக்கும் கதைக்கும் சம்பந்தமேயில்லையே..? எதற்கு இந்த டைட்டிலை வைச்சிருக்கீங்க..?’ன்னு கேட்டாங்க. அதுனாலதான் மறுபடியும் நல்லா யோசிச்சு ‘காவல்’ன்னு பெயர் மாத்தி வைச்சிருக்கோம்.

கதைக் கரு என்னன்னா, தந்தையோ, தாயோ அரசு உயரதிகாரியாக இருந்தால் அந்தப் பதவியின் அதிகாரத்தை அவர்களின் பிள்ளைகள் முறைகேடாக தங்களுக்குச் சாதகமாக தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான்..!

படத்துல தமிழ் நல்லா பேசத் தெரிந்த பொண்ணுதான் ஹீரோயினா நடிக்கணும்னு நினைச்சுத்தான் மலேசியா போனப்ப பார்த்து சந்தித்த இந்த கீதாவை ஹீரோயினாக்கினேன்.

இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க வைப்பதற்காக சமுத்திரக்கனியிடம் சென்றேன். சாப்பாடெல்லாம் வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்த பின்பு எதுக்கு வந்த என்றான். நான் ஒரு கதை வைச்சிருக்கேன். அதுல நீ நடிக்கணும் என்றேன். யாரு நீ டைரக்டரு..? நான் அதுல நடிக்கணும். போடா போய் வேலைய பாரு என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.

அடுத்து மறுபடியும் சில நாட்கள் கழித்துச் சென்றேன். இந்த முறையும் அதே போல பேசியே திருப்பி அனுப்பிட்டான். அப்படியும் நான் விடலை.. மூன்றாவது முறையாகவும் அவனைப் பார்க்கப் போனேன். இங்க பாரு.. முதல்ல கதையைக் கேளு.. அப்புறமா நீ நடிக்கிறியா இல்லையான்னு சொல்லுன்னு சொல்லிட்டு கதைக் கருவை பத்தி சொன்னேன்.

மதுரைல நட்புக்காக கொலை பண்றாங்க.. நெல்லை, தூத்துக்குடில சாதிக்காக கொலை பண்றாங்க. திருச்சில ரவுடியிஸத்துக்காக கொலை பண்றாங்க. கோயம்புத்தூர்ல தொழிலுக்காக கொலை பண்றாங்க. கடலூர் பக்கம் அரசியலுக்காக கொலை பண்றாங்க. சென்னைல மட்டும்தான் பணத்துக்காக கொலை பண்றாங்கன்னு ஆரம்பிச்சேன். இதைக் கேட்டவுடனேயே கனி ரொம்ப சுவாரசியப்பட்டு என் கேரக்டரை முழுசா சொல்லுன்னு சொல்லிக் கேட்டுட்டு இதுல கண்டிப்பா நான் நடிக்கிறேன்னு சொல்லி நடிச்சான்.

நான் அடிப்படையில் எம்.பில். ஆராய்ச்சி முடிச்சிருக்கேன். என்னுடைய டாக்டரேட் ஆராய்ச்சி பட்டமே ரவுடிகளை பற்றியதுதான். அப்போதான் கூலிப்படைகளை பற்றி அதிகம் கேள்விப்பட்டேன். இந்தச் சென்னைல முக்கால்வாசி பேர் வந்தேறிகள்தான். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து குடியேறியவர்கள்தான்.

சென்னையில் இதுவரையிலும் நடைபெற்ற கொலைகளில் முக்கால்வாசி கூலிப்படைகளால் செய்யப்பட்டவைகள்தான். செத்தவனுக்கு ஏன் செத்தோம்ன்னு தெரியாது. கொன்னவங்களுக்கும் ஏன் கொன்னோம்னும் தெரியாது. இப்படித்தான் இந்தக் கூலிப்படை கலாச்சாரம் பரவியிருக்கு. இந்த கான்செப்ட்டும் படத்துல ஒரு முக்கியமான விஷயமா இருக்கு..” என்றார்.

நிகழ்ச்சியில் எடிட்டர் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், அறிமுக வில்லன் நடிகர் தேவ், ஹீரோ விமல், ஹீரோயின் கீதா, நடிகர் சமுத்திரக்கனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Our Score