full screen background image

“ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சஷி…” – புகழும் ‘காற்றின் மொழி’ நட்சத்திரங்கள்..!

“ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சஷி…” – புகழும் ‘காற்றின் மொழி’ நட்சத்திரங்கள்..!

‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’  ஆகிய  படங்கள் மூலம் ஹாட்ரிக்  அடித்த நடிகை ஜோதிகா, அடுத்த படத்தின் வெற்றிக்கான முயற்சியில்  ‘துமாரி சுலு’ என்ற  சூப்பர் ஹிட் இந்தி படத்தின் தமிழ்  ரீமேக்கான ‘காற்றின் மொழி’ படத்தில் நடித்திருக்கிறார். 

இந்தப் படத்தில் நடிகர் விதார்த், ஜோதிகாவின் கணவராக நடிக்கிறார். லட்சுமி மஞ்சு மற்றுமொரு  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மற்றும் குமாரவேல், பாஸ்கர், மனோபாலா, மோகன்ராமன், உமா பத்மநாபன்  உட்பட  பலர் நடித்துள்ளனர்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய…  A.H. காஷிஃப் இசையமைதுள்ளார். பாப்ட்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (BOFTA MEDIA WORKS INDIA PVT. LTD.,) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் G.தனஞ்ஜயன், S.விக்ரம்குமார், மற்றும் லலிதா  தனஞ்ஜயன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

‘மொழி’ படத்தின் மூலம் பெரிய வெற்றியை கண்ட அதே இயக்குநர் ராதா மோகன் மற்றும் ஜோதிகா கூட்டணி  ‘காற்றின் மொழி’-யில் மீண்டும் இணைந்து  களமிறங்கியுள்ளனர். இதுவே இந்த படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படம் வரும் நவம்பர் 16-ம் தேதியன்று வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

kaatrin mozhi movie press meet

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் பேசுகையில், “BOFTA-வில் இருக்கும் மாணவர்களுக்கு இந்த படத்தை உதாரணமாக கூறுவேன். ஏனென்றால், இயக்குநர், நடிகர், நடிகைகள் மற்றும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் தயாராக இருந்தால்தான் ஒரு படம் இவ்வளவு வேகமாகவும், இடைவெளி இல்லாமலும் குறுகிய காலத்தில் உருவாக முடியும்.

அதிலும் ஜோதிகாவிடம் நடிக்க கேட்கும்போதே அவர் உடனே ஒப்புக் கொண்டதோடு மட்டுமல்லாமல் படப்பிடிப்புக்கான தேதிகளையும் தாராளமாக கொடுத்தார். அதேபோல அனைத்துக் காட்சிகளையும் ஒரே ‘டேக்’கில் நடித்து முடித்துவிட்டார். இந்த படம் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டதல்ல. குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்…” என்றார்.

எழுத்தாளர் பார்த்திபன் பேசும்போது, “நான் ‘மொழி’ படம் பார்த்துவிட்டு ராதாமோகனின் ரசிகனாக பேசினேன். அவருடைய படத்திற்கு எழுத வாய்ப்பு கிடைத்தது ஆச்சரியமாக இருந்தது. இந்தப் படத்தில் முழுக்க, முழுக்க ஜோதிகாவுடைய ஆதிக்கம்தான். நடிப்பில் ராக்ஷஸி போல நடித்திருக்கிறார்..” என்று பாராட்டினார்.

poornima

ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா பேசும்போது, “ஒவ்வொரு படத்தில் பணியாற்றும்போதும் கொஞ்சம் பயத்தோடுதான் பணியாற்றுவோம். நான் பணியாற்றிய படங்களிலேயே இந்த படத்தில்தான் பிரச்சினையே இல்லாமல் பணியாற்றினேன்.

இந்தப் படத்தில் ஜோதிகா ஏற்றிருக்கும் விஜயலட்சுமி கதாபாத்திரம் நன்றாக பேசப்படும். இந்தப் படத்தில் பிரேம் பை பிரேம் கலர்புல்லாகவே இருக்கும். அந்த அளவுக்கு டிரெஸ் டிஸைனிங்கிற்கு மிக அதிகமான முக்கியத்துவம் கொடுத்தார் இயக்குநர் ராதாமோகன் ஸார்..  

லட்சுமி என்ன உடை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வார். அது என் வேலையை ரொம்பவே சுலபமாக்கியது. ஜோதிகாவுக்கு என்ன கலரில் கொடுத்தாலும் அது பெர்பெக்ட்டாக சூட்டாகியது. அவர் இன்னமும் அழகாக படத்தில் தெரிவார்..” என்றார்.

dance master viji sathish

நடன இயக்குநர் விஜி சதீஷ் பேசும்போது “லட்சுமி மஞ்சு இருந்தாலே அந்த இடமே கலகலப்பாக இருக்கும். ராதாமோகனுடன் எனக்கு இது இரண்டாவது படம். ஜோதிகாவுக்கு ‘செனோரீட்டா’ பாடலுக்கு பிறகு நான் நடனம் அமைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜோதிதாகாவுடன்தான் இந்தப் படத்தில் கூட்டணி  என்று இயக்குநர் ராதாமோகன் ஸார் கூறியவுடனேயே அதிர்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. ஜோதிகா மிகவும் திறமையானவர். ஒரு முறை சொல்லிக் கொடுத்தாலே நான்கு மடங்கு நடிக்கக் கூடியவர்…” என்றார்.

IMG_4910

நடிகர் மனோபாலா பேசும்போது “நானும், எம்.எஸ்.பாஸ்கரும் செட் தோசை மாதிரி. தினமும் ஏதாவது ஒரு படத்தின் ஷூட்டிங்கில் ஒன்றாகவே நடித்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் படம் முழுக்க, முழுக்க ஜோதிகாவை சுற்றியே நடக்கும். ஜோதிகாவுடன் நடிக்கும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால், பத்து மடங்கு பாவனை காட்டுவார்.

‘இப்படியொரு அற்புதமான நடிகையை நடிக்க விடுப்பா.. மெதுவா கல்யாணம் பண்ணுப்பா’ என்று சூர்யாவிடமே நான் சொன்னேன். ‘ஒரு மூணு வருஷம் விட்ருங்க ஸார். அப்புறம் அவங்களே வருவாங்க…’ என்றார் சூர்யா. அதேபோல் இன்றைக்கு ஜோதிகா மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.

IMG_4911

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது “இயக்குநர் ராதாமோகனின் அனைத்துப் படங்களிலும் நான் இருப்பேன். அப்படி இல்லாமல் போனால் அதற்கு நான்தான் காரணம். அந்தச் சமயமத்தில் வேறு ஏதாவது படப்பிடிப்பில் நான் மாட்டிக் கொண்டிருப்பேன். அதுதான் காரணமாக இருக்கும்.

ராதாமோகன் அவருடைய படங்களில் எனக்கென்று ஒரு கதாபாத்திரத்தைக் கொடுப்பது எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம். ‘மொழி’க்கு பிறகு இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடிக்கிறேன். அவர் எனக்கு சொந்த தங்கை மாதிரி. அவர் என்னைப் பற்றி மலையாள இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸிடம் நல்லவிதமாகச் சொல்லி காயாங்குளம் கொச்சுண்ணி படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அவருக்கு எனது நன்றிகள்..” என்றார்.

நடிகர் குமரவேல் பேசும்போது, “இந்தப் படத்தில் பணியாற்றிய பெரும்பாலான கலைஞர்களுடன் நான் ஏற்கனவே பணியாற்றியிருக்கிறேன். எனக்கு பெரும்பாலான காட்சிகள் ஜோதிகா மற்றும் லட்சுமி மஞ்சுவுடன்தான் இருந்தது. இருவரும் எளிமையாகவும், சக நடிகரை மதித்து நடந்தார்கள். எனக்கு நடனம் வராது என்று கூறினேன். அதற்கு நடன இயக்குநர் நீங்கள் ஆட வேண்டாம். நடந்தது வந்தால் போதும் என்று சொன்னார். காட்சியைப் பார்த்தபோது பொருத்தமாக இருந்தது…” என்றார்.

IMG_4904

இசையமைப்பாளர் A.H.காஷிப் பேசும்போது, “சுமார் நான்கு வருட கால போராட்டத்திற்கு பிறகு இப்போதுதான் இந்தத் துறைக்கு வந்துள்ளேன். தனி ஆல்பம் மூலம் பிரபலமானேன். அதைக் கேட்டுத்தான் இந்த வாய்ப்பை தனஞ்செயன் கொடுத்தார். பின்னணி இசை சில நாட்களுக்கு முன்புதான் முடிந்தது. இப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் நன்றாக வந்திருக்கிறது…” என்றார்.

lakshmi manchu

நடிகை லட்சுமி மஞ்சு பேசும்போது, “தமிழ் படத்தில் நடித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே இங்குதான். என் அப்பா இங்கேதான் பிரசாத் ஸ்டூடியோவில் நடித்துக் கொண்டிருப்பார். அவருக்கு மதியச் சாப்பாடு கொண்டு வரும்போது நானும்கூட வருவேன். அதே இடத்தில் இன்றைக்கு நானும் ஒரு படத்தில் நடித்து அது பற்றிப் பேசுவதற்காக வந்திருக்கிறேன் என்று நினைக்கும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.

இந்தப் படத்தில் நடிப்பதைப் பற்றிக் கேட்டால் என்னால் கூற முடியாது. நடித்த அனுபவமே இல்லாமல் முழுக்க, முழுக்க வேடிக்கையாகத்தான் இருந்தது. ஜோதிகாவின் மிகப் பெரிய ரசிகை. இருப்பினும், ஜோதிகாவின் நடிப்பைப் பார்த்து எனக்குப் பொறாமையாக இருக்கிறது. இப்படத்தில் என்னைத் தவிர யாரும் நன்றாக இருந்திருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு என்னுடைய கதாபாத்திரம் நன்றாக அமைந்திருக்கும்…” என்றார்.

actor vidharth

நடிகர் விதார்த் பேசும்போது, “தனஞ்செயன் ஸார் ஒரு நாள் என்னிடம் ‘ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கிறார். உங்களுக்கு அந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது.. நடிக்கிறீர்களா..?” என்று கேட்டார். ராதாமோகன் இயக்கத்தில் நடிப்பதற்கு கனவோடு இருந்தேன். அதனால் சட்டென்று ஒத்துக் கொண்டேன்.

அதேபோல என் அம்மாவிற்கும், என் மனைவிக்கும் ரொம்பவே பிடித்த நடிகை ஜோதிகா. ஆகையால் உடனே ஒப்புக் கொண்டேன். ஆனால், ராதாமோகன் என் கதாபாத்திரத்தைக் கூறும்போதே ஏன் நான் ஒப்புக் கொண்டேன் என்று பயந்தேன். அந்தளவுக்கு என் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

மேலும், குமரவேலிடம் ராதாமோகன் எப்படிப்பட்டவர்? கோபப்படுவாரா? என்றெல்லாம் முன் கூட்டியே கேட்டேன். அவரோ, அப்படியெல்லாம் கிடையாது. ராதாமோகன் சுத்தத் தங்கம் என்றார். இருந்தும் கொஞ்சம் பயத்துடனே படப்பிடிப்பிற்கு சென்றேன்.

அங்கு ஜோதிகாவின் நடிப்பைப் பார்த்ததும் எனக்கிருந்த பயம் இன்னும் கொஞ்சம் அதிகமாகிவிட்டது. அவருக்கு ஈடுகொடுத்து எப்படி நடிப்பது என்று யோசித்தேன். இப்படி ஒரு நடிகையை நான் பார்த்ததேயில்லை. ஆனால் முதல் ‘டேக்’கிலேயே சரியாக வந்தது.

அதேபோல படப்பிடிப்பைத் தவிர்த்து ஜோதிகா நம்மிடம் எப்படி பழகுவார்..? என்ற சந்தேகமும் எனக்குள் இருந்தது. ஆனால், அவரோ என்னை ‘ஜோ’ என்றே கூப்பிடுங்கள் என்று மிகவும் எளிமையாக பழகினார். இந்தப் படத்தில் நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்றால் அதற்கு ‘ஜோ’தான் காரணம்.

ஜோதிகாவிற்கு இப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும். அடுத்த படத்தில் சிறிய வேடமென்றாலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். இந்தப் படத்தில் நான் மிகவும் சிரமப்பட்டு நடனமாடியிருக்கிறேன்…” என்றார்.

jyothika

படத்தின் நாயகியான ஜோதிகா பேசும்போது, “ஒரு ரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத்தான் இருக்கும். ஆனால் நான் அந்த படத்தை பார்க்கவில்லை. கதையோடு சேர்ந்துதான் பயணித்து நடித்தேன். ஆனால் இப்படம் ஒரிஜினல் படத்தை போல இருக்காது.

‘மொழி’ படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராதாமோகனுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதே நேர்மறையான உணர்வு. அந்தப் படத்தில் நடித்த முதல் காட்சி போலவே இந்த படத்திலும் முதல் காட்சியும் நீளமாக அமைந்தது. முக்கியமான காட்சிகள் அனைத்தும் ஒரு மணி நேரத்திலேயே முடிந்தது.

லட்சுமி மஞ்சு கூறியது போலவே, இந்த படத்தில் நடித்த அனுபவமே இல்லை. எப்போதும் கமல் ஸார் நடிக்கும்போதுதான் நான் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருப்பேன். அதேபோல எம்.எஸ்.பாஸ்கரையும் வியந்து பார்த்தேன். ஒரே ‘டேக்’கில் நடித்துவிடுவார். கிளிசரின் இல்லாமலேயே அழுவார். விதார்த் எனக்குப் போட்டியாக சிறப்பாக நடித்திருக்கிறார். மனோபாலாவுடன் நடிக்கும் காட்சிகளில் சிரித்து, சிரித்து வயிறு வலியே எடுத்தது. குமரவேல் மிகவும் இயல்பாக நடிப்பார்.

தேஜஸ் உடனான காட்சிகளில் மிகவும் ரசித்து நடித்தேன். குழந்தைகள் என்றாலே மொபைல் போனில் விளையாடுவார்கள். ஆனால் தேஜஸ் ஒருமுறை கூட விளையாடி நான் பார்த்ததே இல்லை. எல்லோருடனும் பேசிக் கொண்டிருப்பான். பிறந்த நாள் என்றாலே SMS மூலம் வாழ்த்து தெரிவிக்கும் இந்த காலத்தில், எல்லோருடனும் இணைந்து பேசுவான். இவனைப் பார்த்த பிறகு என் பிள்ளைகளுக்கும் இவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.

என் அம்மாவும், நான் அம்மாவாக அழைக்கும் என் மாமியாரையும்தான் நான் மாதிரியாக கருதுவேன். என் மாமா சிவகுமார் என்னுடைய எல்லா படங்களையும் திரை அரங்கத்திற்கு சென்றுதான் பார்ப்பார். நான் நடித்த எல்லா படங்களுமே அவருக்கு பிடிக்கும்.

இப்படத்தில் கணவன், மனைவி உறவு அருமையாக அமைந்திருக்கிறது. இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சூர்யா, அஜித் மற்றும் மாதவன் இவர்களுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக, இருந்தது…” என்றார்.

director radha mohan

இயக்குநர் ராதாமோகன் பேசும்போது, “இந்தப் படத்தில் என்னுடைய வேலையை அனைவரும் சுலபமாக்கிக் கொடுத்தார்கள். அனைவரும் அவர்களுடைய முதல் படத்தில் நடித்தது போல நடித்துக் கொடுத்தார்கள். இப்படத்திற்கு A.H.காஷிப் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தில் இருந்து வந்தவர். பார்த்திபன் நன்றாக வசனம் எழுதியிருக்கிறார். இந்த ‘காற்றின் மொழி’ படம் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக இருக்கும்…” என்றார்.

 

Our Score