தமிழ்ச் சினிமாவில் தலைப்பு பஞ்சம் எந்த அளவுக்கு ஏற்பட்டுவிட்டது பாருங்கள்..?
சரவணா பிலிம் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு ‘காதல் 2014’ என்று பெயரிட்டுள்ளனர். காதல் என்ற பெயரிலேயே இதுவரையில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வந்தாச்சு.. இனிமேல் இதுபோல் வருடத்தை வைத்துத் துவக்கினால்தான் டைட்டில் கிடைக்கும்..!
இந்தப் படத்தில் ‘முத்துக்கு முத்தாக’, ‘கோரிப்பாளையம்’, ‘மாத்தி யோசி’ ஆகிய படங்களில் நடித்த ஹீரோவாக ஹரீஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமான மணிகண்டன் நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். மற்றும் அப்புக்குட்டி, ‘பசங்க’ சிவகுமார், வேல்முருகன், கம்பம் மீனா, ஷர்மிளா, அழகப்பன், ராஜபாண்டி, ஷிவாணி, சேலம் சின்ன கருப்பு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ரித்தீஷ்கண்ணா
இசை – பைசல்
பாடல்கள் – விவேகா, லலிதானந்த், சுகந்தன்
கலை – சுந்தர்ராஜன்
நடனம் – தினா, ராதிகா, சதீஷ்
எடிட்டிங் – சங்கர்
தயாரிப்பு நிர்வாகம் – ராம்சங்கர்
தயாரிப்பு மேற்பார்வை – ராமமூர்த்தி
இணை தயாரிப்பு – R.L.ஏசுதாஸ், R.Y.சஜீத்
தயாரிப்பு – B.சுதாகர்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சுகந்தன்.
இவர் சேரனிடம் “ஆட்டோகிராப்” படம்வரையிலும் உதவியாளராகப் பணியாற்றியவர். அத்துடன் பாலசேகரன், ஆர்.கண்ணன் ஆகியோரிடமும் இணை இயக்குனராகப் பணியாற்றியவர்.
படம் பற்றி இயக்குனர் சுகந்தனிடம் கேட்டோம்… “காதல் என்பது புனிதமானதுதான்.. ஒவ்வொரு கலாகட்டதிலும் மாறி வந்த காதல் இன்றைய காலகட்டத்தில் அதாவது 2014-ம் ஆண்டில் உருவாகும் காதல் எப்படிப்பட்டது…? மாறி வந்த காதலால் இன்றைய காதலர்கள் சந்திக்கும் நல்லது கெட்டது பற்றிய கதையை கொஞ்சம் கமர்ஷியல் கலந்து உருவாக்கியிருக்கிறோம். படப்பிடிப்பு முழுவதும் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. காதல் 2014 படம் காலம் கடந்து பேசப்படும் படமாக இருக்கும்…” என்றார் இயக்குனர் சுகந்தன்.
படம் காலம் கடந்து நிக்குறது இருக்கட்டும்.. மொதல்ல படத்தை இந்த 2014-ம் வருஷமே கொண்டு வந்திருங்க.. இல்லைன்னா டைட்டில் பொருத்தமே இல்லாமல் போயிரும்..!