காப்பான் – சினிமா விமர்சனம்

காப்பான் – சினிமா விமர்சனம்

‘எந்திரன் 2.0’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘கோலமாவு கோகிலா’, ‘வட சென்னை’ ஆகிய படங்களைத் தயாரித்த லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் இந்தக் ‘காப்பான்’ படத்தையும் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் சூர்யா நாயகனாகவும், மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் ஒரு முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் சாயீஷா, ஆர்யா, சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், போமன் இரானி, பிரேம், உமா பத்மநாபன், சுஜாதா, பூர்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – எம்.எஸ்.பிரபு, இசை – ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் – கபிலன், கபிலன் வைரமுத்து, வைரமுத்து, ஞானகரவேல், நடன இயக்கம் – பாபா பாஸ்கர், கணேஷ் ஆச்சார்யா, ஷோபி, படத் தொகுப்பு – ஆண்டனி, மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு, கதை, திரைக்கதை, வசனம் – பட்டுக்கோட்டை பிரபாகர், இயக்கம் – கே.வி.ஆனந்த்.

கே.வி.ஆனந்த், சூர்யா கூட்டணி ‘அயன்’, ‘மாற்றான்’ ஆகிய படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இத்திரைப்படத்தில் இணைந்துள்ளது. இவர்களுடன் லைகா தயாரிப்பு நிறுவனம் இணைந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’, ‘அனேகன்’, ‘கவண்’ என்று வித்தியாசமான கதைக் களங்களின் படைப்புகளை படைத்திருக்கும் இயக்குநர் கே.வி.ஆனந்தின் ஏழாவது படைப்புதான் இந்த ‘காப்பான்’ திரைப்படம்.

இந்தப் படத்தில் பிரபல எழுத்தாளரான பட்டுக்கோட்டை பிரபாகர் முதல்முறையாக இயக்குநர் கே.வி.ஆனந்துடன் இணைந்திருக்கிறார். கதை, திரைக்கதையை இருவரும் இணைந்து எழுத, வசனத்தை மட்டும் பட்டுக்கோட்டை பிரபாகர் தனித்து எழுதியிருக்கிறார்.

‘காப்பான்’ படம் இன்னொரு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்று சொல்லும் அளவுக்கு பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. லண்டன், ஜாவா தீவுகள், மற்றும் ரஷ்யாவில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற நன்னீர் ஏரியான ‘பைகால் ஏரி’ ஆகிய இடங்களில் பல காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள்.

தவிர இந்தியாவில் குலுமனாலி, டெல்லி, ஹைதராபாத், பஞ்சாப், சென்னை, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமருக்கென்று தனியாக இருக்கும் எஸ்.பி.ஜி. எனப்படும் Special Protection Group-ல் ஒரு அதிகாரியாக இருப்பவர் கதிர் என்னும் சூர்யா. இந்த வேலையுடன் கூடவே தன்னுடைய சொந்த ஊரான தஞ்சாவூரில் இருக்கும் தன்னுடைய பூர்வீக நிலத்தில் இயற்கை முறையில் விவசாயமும் செய்து வருகிறார்.

இந்தியாவின் பிரதமரான மோகன்லாலை கொல்வதற்காக பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் குழு முயல்கிறது. டெல்லியில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள வரும் மோகன்லாலை கொல்லப் பார்க்கிறார்கள். இந்தத் திட்டம் தோல்வியடைகிறது. ஆனால் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறையின் அமைச்சரை கொலை செய்து விடுகிறார்கள் தீவிரவாதிகள். இவருடைய மகளான சாயிஷா, மோகன்லாலின் அலுவலகத்தில் அஸிஸ்டெண்ட் பி.ஆர்.ஓ.வாக வேலை பார்க்கிறார்.

உடனேயே பணிக்குத் திரும்பும்படி சூர்யாவுக்கு உத்தரவு வருகிறது. சூர்யாவின் உயரதிகாரியான ஜோஸப் என்னும் சமுத்திரக்கனியின் உத்தரவுப்படி பிரதமர்  லண்டனுக்கு செல்லும்போது பாதுகாப்புக்காக சூர்யாவும் உடன் செல்கிறார். அங்கேயும் பிரதமர் மோகன்லாலை கொல்ல முயற்சிகள் நடக்கிறது. இதை சூர்யா முறியடிக்கிறார்.

இப்போது சூர்யா மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார். சூர்யாவைத் தன்னுடைய பெர்ஸனல் பாதுகாப்பு அதிகாரியாக வைத்துக் கொள்கிறார் மோகன்லால். இடையில் சாயிஷாவுக்கும், சூர்யாவுக்கும் இடையில் மோதல் அதிகமாகி, கடைசியாக அது காதலாகிறது.

பிரதமர் மோகன்லால் காஷ்மீருக்குச் செல்ல.. “அங்கே அவரை கண்டிப்பாக கொலை செய்வோம்…” என்று தீவிரவாதிகள் சூர்யாவிடம் சொல்கிறார்கள். சொன்னது போலவே செய்தும் காட்டுகிறார்கள். மோகன்லாலுக்கு பிறகு அவரது மகன் ஆர்யா பிரதமராகிறார்.

அம்பானி, அதானி குரூப் போல கண்டம் விட்டு கண்டம் அனைத்துப் பகுதிகளிலும் தொழில் சாம்ராஜ்யத்தை நடத்தும் மதான் குரூப்பின் சேர்மனான பொமன் இரானியின் நிறுவனம், தஞ்சை பகுதியில் கனிம வளச் சுரங்கம் அமைக்க அனுமதி பெற்று வருகிறது.

இதை எதிர்த்து தஞ்சை பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் இறங்குகிறார்கள். அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸாரை கைக்குள் போட்டுக் கொண்டு பொமன் இரானியின் அடியாட்கள் போராட்டத்தை குலைக்கிறார்கள். துப்பாக்கிச் சூடு நடக்கிறது. இதில் பலர் உயிரிழக்கிறார்கள்.

இது பற்றிப் பேச்சுவார்த்தை நடத்த வரும் பொமன் இரானியை பிரதமர் ஆர்யா எச்சரித்து அனுப்ப.. பொமன் கடும் கோபம் கொள்கிறார். இதன் விளைவாக பயிர்களை நாசம் செய்யவே உருவாக்கப்பட்டிருக்கும் விஷப் பூச்சிக்களை லட்சக்கணக்கில் கொண்டு வந்து தஞ்சை பகுதியில் விடுகிறார். இதனால் தஞ்சை பகுதி விவசாய நிலங்களில் இருந்த பயிர்கள் அனைத்தும் நாசமாகின்றன.

இதைச் செய்வது யார் என்பதை கண்டறிய முடியாமல் திகைக்கிறா் சூர்யா. இதே நேரம் ஆர்யாவையும் தீர்த்துக் கட்டவும், அவரது ஆட்சியைக் கவிழ்க்கவும் பொமன் இரானி திட்டமிடுகிறார். இந்தச் சதி வேலையை முறிக்க சூர்யாவும் களத்தில் இறங்குகிறார். கடைசியில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

எஸ்.பி.ஜி. எனப்படும் Special Protection Group இந்தியாவில் பிரதமரை பாதுகாப்பதற்கென்றே அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு பாதுகாப்பு படை. இந்தப் படை தனக்குப் பாதுகாப்பாக இருந்த சீக்கிய ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் கொலைக்கு பிறகு உருவாக்கப்பட்டது.

1985-ல் ஒரு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட தனி சட்டத்தின் மூலம் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பை முதன்முதலில் உருவாக்கியவர் அப்போதைய ஐ.பி.எஸ்.,  அதிகாரியும், தமிழருமான சுப்பிரமணியன்.

பிரதமரின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது இவர்களது பணி. மிரட்டல், பயங்கரவாதிகள் தாக்குதல், இயற்கை பேரிடர் போன்றவற்றில் இருந்து பிரதமரை இவர்கள் பாதுகாக்க வேண்டும். எப்போதும் பிரதமரின் காரைச் சுற்றி 5 எஸ்.பி.ஜி., வீரர்கள் இருப்பார்கள்.

பிரதமர் எங்காவது சென்றால், அங்கு சுற்றுப்புறத்தில் பாதுகாப்பு நன்றாக இருக்கிறது என்று இவர்கள் கூறினால்தான், பிரதமர் காரைவிட்டு இறங்க முடியும். இந்த 5 பேரும் புல்லட் புரூப் ஜாக்கெட் அணிந்திருப்பார்கள். பிரதமர் இருக்கும் இடத்தில் ஏதாவது குண்டு வெடித்தாலோ அல்லது கலவரம் ஏற்பட்டாலோ பிரதமரைச் சுற்றி சுவர் போல நின்று அவரைக் காப்பாற்றுவார்கள்.

இவர்களில் ஒருவர் எப்போதும் கையில் ஒரு கறுப்பு பை ஒன்றை வைத்திருப்பார். இதில் ஒரு எலக்ட்ரானிக் பாதுகாப்பு கருவி இருக்கும். ஏதாவது நெருக்கடி என்றால் இந்த கருவி இயக்கப்பட்டு, பிரதமரைச் சுற்றி எலக்ட்ரானிக் சுவரை ஏற்படுத்தி விடும். எந்த ரிமோட் கருவியையும் இந்த சுவர் செயல் இழக்க செய்து விடும்.

இப்படிப்பட்ட ஹை டெக்கான ஒரு S.P.G. அதிகாரியாகத்தான் சூர்யா, இந்தப் படத்தில் ‘கதிர்’  என்கிற வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஒரு பக்கம் விவசாயி கதாபாத்திரம். இன்னொரு பக்கம் எஸ்.பி.ஜி. அதிகாரியாகவும் மிடுக்கான தோரணையில் வலம் வருகிறார் சூர்யா. விவசாயத்தின் அருமை, பெருமைகளைப் பேசும் விவசாயி பாத்திரத்தில் மிக எளிதாக இயற்கை விவசாயம் பற்றி எடுத்துரைக்கிறார். இதில் நடிப்பெல்லாம் தேவையே இல்லை என்பதால் மிக இயல்பாக இருக்கிறார்.

அதே சமயம் எஸ்.பி.ஜி. அதிகாரியாக பிரதமரைக் காப்பாற்றும் ஒரு அதிகாரியாக பரபரப்பான சூழலைக் கையாளும் திறன் படைத்தவராக வேகம் காட்டியிருக்கிறார் சூர்யா. லண்டனில் நடைபெறும் சண்டை காட்சிகளிலும், காஷ்மீரில் குண்டு வெடிப்பு நடக்கும் காட்சிகளிலும், ஆர்யாவைக் காப்பாற்ற தப்பித்து ஓடும் காட்சிகளிலும் மின்னல் வேக சண்டை காட்சிகளில் அவரது உடல் ஒத்துழைக்க.. முழுமையான ஆக்சன் ஹீரோவாகவே மாறிவிட்டார் சூர்யா.  பொமன் இரானியுடன் விவசாயத்தைப் பற்றி ஆக்ரோஷமாக பேசும் காட்சியிலும் மனதைக் கவர்ந்திழுக்கிறார் சூர்யா.  ஒரு நாயகனால் என்னென்னெ செய்ய முடியுமோ அது அத்தனையையும் முழுமையாக இந்தப் படத்தில் செய்து காண்பித்திருக்கிறார் சூர்யா.

பிரதமராக நடித்திருக்கும் மோகன்லாலுக்கு அவரது குரல் மட்டுமே அன்னியத்தன்மையைக் காட்டினாலும் நடிப்பில் ஒரு சுடராக பிரகாசிக்கிறார். “நம்ம ரெண்டு பேர் சண்டைக்கு பாகிஸ்தான் மக்கள் என்ன பாவம் செய்தார்கள்.. அவர்களை ஏன் சம்பந்தமில்லாமல் நாம் கொலை செய்ய வேண்டும்..?” என்று கேட்டு பொமன் இரானியை வெளியேற்றும் காட்சியில் லாலேட்டனை ரொம்பவே பிடித்துப் போகிறது.

லண்டனில் தாய் நாடு பற்றிய கதையைச் சொல்லும்விதமும், காஷ்மீரில் பள்ளிக்கூட குழந்தைகள் பாடிய பாடலைப் பற்றி எடுத்துச் சொல்லும் காட்சியிலும் ஒரு பிரதமர் இப்படிகூட இருக்கலாமே என்கிற ஏக்கத்தை நமக்குள் காட்டுகிறார் மோகன்லால்.

ஆனால், இவரது கேரக்டர் ஸ்கெட்சை அடியோடு சிதைப்பது மாதிரி இவரே டபுள் மீனிங் டயலாக் பேசுவதை போல வசனத்தை எழுதியிருக்கும் வசனகர்த்தாவையும், அதை அனுமதித்த இயக்குநர் கே.வி.ஆனந்தையும் மன்னிக்கவே முடியாது. அதிலும் சமுத்திரக்கனி, ஆர்யா, சூர்யா, சாயிஷா என்று அனைவருமே டபுள் மீனிங்கில் பேசியிருப்பது கேவலமானது. இந்தக் காட்சிகளை நீக்கியிருக்கலாம்.

சாயிஷா அழகுப் பதுமையாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். காதல் காட்சிகளுக்காக பயன்பட்டிருக்கிறார். கூடவே திரைக்கதையை நகர்த்தவும் தன்னால் முடிந்ததைச் செய்திருக்கிறார். ஜோஸப்பாக சமுத்திரக்கனி.. நண்பனின் துரோகத்தால் உயிரை விடுகிறார். பிரேம், துரோகியாகவே நடித்திருக்கிறார்.

சில காட்சிகள் என்றாலும் உமா பத்மபநானுக்கு லாலேட்டனுக்கு ஜோடி போட்ட ஒரேயொரு திருப்தியைக் கொடுத்திருக்கிறது. ஆர்யா வாரிசு பிரதமராக அதே சமயம் பொறுப்பில்லாத, விளையாட்டுத்தனமான பிரதமராக நடித்திருக்கிறார். தன் நிஜ மனைவி சாயிஷாவிடம் சூர்யாவை காதலிக்கச் சொல்லும் காட்சியில் தியேட்டரில் சிரிப்பலை எழுகிறது. ரசிகர்களின் மனோபாவத்தைப் புரிந்து கொள்ளாத இயக்குநராக இருந்திருக்கிறாரே கே.வி.ஆனந்த் ஸார்..?

கார்பரேட் முதலாளியாக நடித்திருக்கும் பொமன் இரானிக்கு இது முதல் தமிழ்ப் படம் என்றாலும் டப்பிங்கில் பேசி சரிக்கட்டிவிட்டார்கள். ஆனால் நடிப்புக்கான ஸ்கோப் இருந்தும் அதை வரவழைக்காதது இயக்குநரின் தவறுதான்.

எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவில் அனைத்துக் காட்சிகளும் அழகாகப் படமாகியுள்ளன. கோவையின் விவசாய நிலங்களின் அழகு.. லண்டன் நகரக் காட்சிகள்.. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகள்.. ஓடுகின்ற டிரெயினில் நடக்கும் சண்டை காட்சிகள்.. டெல்லியில் இரவு நேரத்தில் நடுத் தெருவில் நடைபெறும் துப்பாக்கிச் சண்டை.. கடைசியாக புகழ் பெற்ற பைகால் ஏரியில் படமாக்கப்பட்டிருக்கும் பாடல் காட்சி என்று அத்தனையிலும் தன்னுடைய திறமையைக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். அவருக்கு நமது பாராட்டுக்கள்.

இதேபோல் சிறப்பான வகையில் சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் சண்டை இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள். படத் தொகுப்பாளர் ஆண்டனி இன்னும் கொஞ்சம் பொறுமையாகப் படத்தைப் பார்த்துவிட்டு தேவையில்லாத காட்சிகளை நீக்கியிருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். இரட்டை அர்த்த வசனக் காட்சிகள் மற்றும் லண்டனில் நடக்கும் பிரதமரின் கூட்டம் தொடர்பான காட்சிகளின் நீளத்தையும் குறைத்து நீக்கியிருந்தால் நலம்.

ஹாரிஸ் ஜெயராஜின்  இசையில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. ஆனால் அனைத்தும் கதையின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தும்விதமாகவே அமைந்திருக்கின்றன.

இது போன்ற திருடன்-போலீஸ் கதைகளில் கதையை நகர்த்தும்விதமாக வேண்டுமானால் பாடல் காட்சிகளை அமைத்துக் கொள்ளலாம். ச்சும்மா பொழுதுபோக்குக்காக இனிமேல் இவைகளை திணித்தால் அது வேலைக்கு ஆகாது என்பதை இப்போதைய இயக்குநர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

‘சிறுக்கி சீனிக்கட்டி’ பாடல் கேட்க வைக்கிறது. மற்றபடி  ‘விண்ணில் விண்மீன் ஆயிரம்’,  ‘ஹேய் அமிகோ’,  ‘குறிலே குறிலே’,  ‘மச்சான் இங்க வந்தீரா’ ஆகிய பாடல்கள் நேரத்தைச் சாப்பிட்டிருக்கின்றன.

தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவிதமான கார்ப்பரேட் சதிகளைப் பற்றி எடுத்துரைத்து சமூகக் கருத்துக்களைச் சொல்லியிருக்கும் இயக்குநர் கே.வி.ஆனந்த், இந்தப் படத்தில் ஒட்டு மொத்த இந்தியாவையும் ஆட்டிப் படைக்கும் ஒரு பெரிய நிறுவனத்தைக் குறி வைத்திருக்கிறார்.

விவசாயமே முக்கியம்.. கனிம வளமோ, எண்ணெய் எடுப்பதோ முக்கியமில்லை. அந்த மண் மட்டுமே விவசாயத்திற்கு உகந்தது. வேறு இடம் இல்லை. மக்களுக்கு வேறு தொழில் தெரியாது.. பணத்தை வைத்து அவர்களால் எதுவும் செய்ய முடியாது.. என்றெல்லாம் விவசாயத்திற்கு ஆதரவாக பெரும் குரல் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

கூடவே இயற்கை விவசாயம், தஞ்சை மீத்தேன் போராட்டம், பூச்சிகளை வைத்து நாடுகள் நடத்தும் உயிரியல் யுத்தம் என்று பலவற்றையும் கலந்து கொடுத்திருக்கிறார்.

இன்னொரு பக்கம் அளவுக்கு அதிகமான தேச பக்தியை இதில் ஊட்டியிருக்கிறார். பாகிஸ்தானுடனான மோதலில் இரண்டு நாடுகளுமே ஷோ காட்டுகிறோம் என்பதை இந்திய பிரதமரே ஒப்புக் கொள்வதைப் போல ஒரு வசனத்தை வைத்திருக்கிறார் இயக்குநர்.

இப்படி எல்லாவற்றையும் ஒன்றாகக் கொடுத்ததினால் இது சற்று ஓவர் டோஸாகி நாம் எந்தப் பக்கம் சாய்வது என்கிற குழப்பத்தில் நம்மைக் கொண்டு போய்விட்டுவிட்டது.

தொடர்ந்து வரும் டிவிஸ்ட்டுகளும், அடுக்கடுக்கான வேகமான காட்சிகளும் படத்தை அசுர வேகத்தில் கொண்டு சென்றிருப்பதால் படம் என்ன சொல்ல வருகிறது என்பதையே புரியாமல் “படம் முடிஞ்சிருச்சு..” என்று சொல்லி எழுந்து போக வைத்திருக்கிறார்கள். இது இயக்குநரின் தவறுதான்.

ஒன்று விவசாயி கதிரின் வாழ்க்கைக் கதையாகவே இதைக் கொண்டு சென்றிருக்கலாம். அல்லது பிரதமரின் தனி பாதுகாப்பு அதிகாரியான கதிரின் பணியில் ஏற்படும் பிரச்சினைகளாகக் கதையைக் கொண்டு போயிருக்கலாம். இரண்டையும் கலந்து கொடுத்திருப்பதால் பார்வையாளனுக்கு ஒரு சலிப்பையும், அலுப்பையும் கொடுத்திருப்பதுதான் மிச்சம்.

அடுத்தப் படத்தில் இயக்குநர் கே.வி.ஆனந்த் திருத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம்..!

Our Score