ஸ்பிரிட் மீட்யா மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியார் தயாரித்துள்ள திரைப்படம் ‘காந்தா’.
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
மலையாள நடிகர்கள் பலரும் கமர்சியல் திரைப்படமாக இருந்தாலும் சரி… அதில் தங்களுடைய கதாப்பாத்திரத்திற்கு நடிப்பதற்கான ஸ்கோப் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்கிறார்கள்.
அந்த வகையில் இப்போதும் ‘நடிப்பு அரக்கன்’ என்று தமிழர்களால் பட்டம் சுட்டப்பட்டு உச்சத்தில் இருக்கும் பகத் பாசிலுக்கு போட்டியாக, துல்கர் சல்மானும் நடிப்பை மட்டுமே மையமாக வைத்து உருவான இந்தப் படத்தைத் தயாரித்து நடித்திருக்கிறார்.
படம் தமிழ் சினிமாவின் துவக்க காலத்தில் 1960-க்கு முன்பாக நடக்கும் கதையில் காட்சி அளிக்கிறது. முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையில் இத்திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரை உலகில் ‘ஐயா’ என்று மரியாதையாக அழைக்கப்படுபவர் சமுத்திரக்கனி. மிகப் பெரிய இயக்குநர். சாதனையாளர். அவருடைய கண்டுபிடிப்புதான் துல்கர் சல்மான்.
சின்ன வயதிலேயே தன்னால் கண்டெடுக்கப்பட்ட துல்கரை படிக்க வைத்து, வளர்த்து, ஆளாக்கியவர் கனி. தன்னுடைய படங்களிலும் துல்கரை நடிக்க வைத்து செம்மைப்படுத்தி, சீர்படுத்தி, அவருடைய நடிப்பு திறமையை வெளிக்கொணர்ந்து இப்போது ‘நடிப்பு சக்கரவர்த்தி’ என்கின்ற பெயர் கிடைக்கும் அளவுக்கு வளர்த்து விட்டிருக்கிறார் இந்த ‘ஐயா’ என்ற சமுத்திரக்கனி.
இப்பொழுது அவர்கள் இருவருக்கும் இடையில் பேச்சு வார்த்தை இல்லை. நட்பும் இல்லை. துல்கர் மீது கொலை வெறியில் இருக்கிறார் சமுத்திரகனி. கனி இயக்கிய ஒரு படத்தில் நடிக்கும் பொழுது அந்தப் படம் பற்றியும், ஐயா பற்றியும் துல்கர் கமெண்ட் அடித்திருக்கிறார்.
தான் இப்போது கொஞ்சம் வளர்ந்த நடிகர்.. ‘நடிப்பு சக்கரவர்த்தி’ என்று அழைக்கப்படுபவன் என்பதை அவரிடமே சொல்லிக் காட்டியவிதத்திலும் அப்செட்டாகி போயிருக்கும் ‘ஐயா’, இதன் பின்பு துல்கருடன் பணியாற்றாமல் மற்றவர்களிடம் பணியாற்றி வருகிறார்.
இந்த நேரத்தில் ஐயாவின் ஆஸ்தான தயாரிப்பாளர், மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கும் பொறுப்பை ஐயாவிடம் ஒப்படைக்கிறார். ஆனால், “இந்தப் படத்தின் நாயகனாக துல்கர் நடித்தால் மட்டுமே பைனான்ஸ் பணம் கிடைக்கும். இல்லாவிட்டால் நானும் படம் எடுக்க முடியாது. நீங்களும் இப்போது படம் இயக்க முடியாது” என்கிறார் தயாரிப்பாளர்.
வேறு வழி இல்லாமல் சகித்துக் கொண்டு இந்த ப்ராஜெக்ட்டுக்கு ஓகே சொல்கிறார் சமுத்திரக்கனி. ஆனால் முதல் நாள் படப்பிடிப்பிலேயே ‘நடிப்பு சக்கரவர்த்தி’ தன்னுடைய வேலையை காட்ட டென்ஷன் ஆகிறார் இயக்குநர். ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு வசனத்திலும் துல்கரின் தலையீடு அதிகமாகிக் கொண்டே போக… சொல்ல முடியாத கோபத்தில் ஆத்திரத்தில் அமர்ந்து இருக்கிறார் இயக்குநர்.
இந்த நேரத்தில் அதே திரைப்படத்தில் நடிக்கும் ‘குமாரி’ என்ற பாக்யஸ்ரீ தான் இயக்குநரின் தேர்வு என்பதால் துவக்கத்தில் இயக்குநருக்கு ஆதரவாகவே பேசி வருகிறார். ஆனால், நாளாக நாளாக துல்கரின் ஆளுமைக்கு உட்பட்டு மதி மயங்குகிறார் பாக்யஸ்ரீ.
தன்னுடைய வளர்ப்பாக இருந்த பாக்யஸ்ரீயும் தன்னுடைய எதிரியின் கட்டுப்பாட்டிற்குள் போய்விட்டதால், சமுத்திரக்கனி மிகுந்த கோபத்திலும், அடக்க மாட்டாத ஆத்திரத்திலும் இருக்கிறார்.
இந்த நேரத்தில் அந்த ஸ்டுடியோவிற்குள் நடந்த ஒரு கொலை சம்பவம் படக் குழுவினர் அத்தனை பேரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அந்தக் கொலையை செய்தது யார் என்று போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்க… கொஞ்சம் கொஞ்சமாக இயக்குநர், நடிகர், நடிகை மூன்று பேருக்கும் இடையில் நடந்த நீயா, நானா போராட்டம் வெளியாகிறது. அது என்ன என்பதுதான் இந்த திரைப்படம்.
துல்கரின் நடிப்பைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இந்தப் படத்தில் அவர் தன்னுடைய நடிப்பை வெகுவாக மெருகேற்றி இருக்கிறார். ஒரு அலட்சியம், ஈகோ மிகுதியாக இருக்கும் ஒரு மனிதன் தன்னை வளர்த்த இயக்குநராகவே இருந்தாலும் தான் இப்போது ஒரு ‘நடிப்பு சக்கரவர்த்தி’ என்பதை தன்னுடைய கண்களாலேயே காட்டுகின்ற அந்தக் குரூர நடிப்பு, நிச்சயமாக இயக்குநரையும் தாண்டி நம்மையும் கோபப்பட வைக்கிறது.
வேண்டுமென்றே வசனத்தை மாற்றுவதும், கேமரா கோணங்களை மாற்றுவதும், எதிர்பாராத நடிப்பை செய்யும் துல்கரின் அந்த மேனரிசங்கள் அனைத்துமே ‘ஆகா’ ‘ஓகோ’ ரகம்தான்..!
இடைவேளைக்குப் பின்பு கொலை, போலீஸ், வழக்கு, விசாரணை என்று மேலும் விரிய.. அந்த காட்சிகளில் தன்னுடைய இயலாமை, கோபம், ஈகோ… எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக வைத்துக் கொண்டு தன்னுடைய சிறந்த நடிப்பை காண்பித்திருக்கிறார் துல்கர்.
இயக்குநர் ‘ஐயா’வாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி தன்னுடைய இயல்பான நடிப்பிலேயே அனைத்துவிதமான நவரசங்களையும் காட்டிவிடுவார். இந்தப் படத்தில் அது போலவே செய்திருக்கிறார்.
ஒரு காட்சியில் துல்கரை அடிப்பதற்காக சேரை தூக்கி வீசுகின்றபோது அவர் காட்டுகின்ற அந்த வெறுப்பும், கடுப்பும் நாமாக இருந்தாலும் அதைத்தானே செய்வோம் என்று சொல்ல வைத்திருக்கிறது. அந்த அளவுக்கு தத்ரூபமான ஒரு மூத்த இயக்குநரின் நடிப்பை காண்பித்து இருக்கிறார் சமுத்திரகனி.
இந்தப் படம் முழுக்கவே சமுத்திரக்கனிக்கும், துல்கர் சல்மானுக்கு இடையில் நடக்கும் ஈகோ பிராப்ளம்தான். ஒரு தனி மனிதனின் மிகுதியான எண்ணம் அவருடைய வாழ்க்கையை நிச்சயமாக ஒருநாள் புரட்டிப் போடும். இப்படி புரட்டிப் போடும்போதும் இந்த வீழ்ச்சி நம்முடைய ஈகோ பேச்சுக்களால் மட்டுமே நிகழ்ந்தது என்பதை புரிந்து கொண்டால் அவன், தான் இருக்கப் போகின்ற காலத்தில் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்.
ஆனால் இந்த படத்தில் கடைசிவரையிலும் ஈகோவை விட்டுக் கொடுக்காமல் போய் தான் பெறாத பிள்ளை என்ற ஸ்தானத்தில் துல்கரை வைத்திருக்கும் சமுத்திரக்கனி, அந்த கடைசி காட்சிகளில் நம்முடைய மனதை உருக்கிவிட்டார்.
“இந்தப் பொண்ண எங்கய்யா புடிச்சீங்க..?” என்று கேட்கும் அளவுக்கு நடிகை குமாரியாக வாழ்ந்திருக்கிறார் நடிகை பாக்யஸ்ரீ. இந்தப் படத்தில் இவருடைய நடிப்பை அட்டகாசம் என்றே சொல்லலாம். அதிலும் அவர் அறிமுகமாகும் முதல் காட்சியில் கேமரா அவரை நமக்கு காட்டியவிதம் அழகோ அழகு!
படம் நெடுகிலும் தன்னுடைய அழகான நடிப்பை தன்னுடைய அழகான முகத்தினாலும், உடல் மொழியினாலும் வித்தியாசமாக காட்டி அவர் வருகின்ற காட்சிகளில் எல்லாம் நம்முடைய கண் பார்வையை திரையைவிட்டு அகல விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அசப்பில் பார்த்தால் ருக்மணி வசந்த் போலவே இருக்கும் இவரது தோற்றமும், நடிப்பும் நிச்சயம் இவரை இன்னும் ஒரு மிகப் பெரிய ரவுண்டுக்கு கொண்டு வரச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
துல்கரின் மாமனாராக நடித்த நிழல்கள் ரவி, மனைவியாக நடித்திருக்கும் காயத்ரி, “அண்ணா”, “அண்ணா” என்று சொல்லிக் கொண்டே வரும் இணை இயக்குநரான கஜேஸ் நாகேஷ் மற்றும் பலரும் இந்தப் படத்தில் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கொலை வழக்கை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ராணா டக்குபதி ஒரு சில காட்சிகளில் கொஞ்சம் எல்லை மீறி போர்ஸான நடிப்பை காட்டி இருந்தாலும், போலீஸூக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதை அவர் நிரூபிக்கும் இடங்களில் எல்லாம் பாராட்டை பெறுகிறார்.
சின்னச் சின்ன கேரக்டர்கள் என்றாலும் கவனிக்க வைக்கும்விதமாக நடிக்க வைக்கப்பட்டிருக்கும் வையாபுரி, பக்ஸ் மற்றும் ஸ்டூடியோவின் உரிமையாளராக நடித்த ரவீந்திர விஜய்… இவர்களின் நடிப்பும் குறிப்பிடத்தக்கதுதான்.
இசையமைப்பாளர் ஜான் சந்தரின் இசையில் பாடல் வரிகள் மிக எளிதாக நம் காதில் விழும்படியாக இசையமைத்திருந்தாலும் திடீர், திடீரென்று பாடல் காட்சிகள் வந்து… சீரியசான காட்சிகளின் இடையிடையே வந்து செல்வது பெரும் தொல்லையாகவும் இருக்கிறது.
இந்த இடத்தில்தான் பாடல்கள் வரவேண்டும் என்ற ஒரு கோட்பாடு தமிழ் சினிமாவில் இருக்கிறது. அதை மீறிய வகையில் சீரான திரைக்கதையை நம் பார்ப்பதற்கு இந்தப் படத்தில் பாடல் காட்சிகள் இடையூறாக இருக்கின்றன.
டானி சஞ்சய் லோபஸின் ஒளிப்பதிவு இந்தப் படத்தை வேறுவிதமாக நமக்கு காட்டுகிறது. 1950-களில் நடக்கின்ற படம். கருப்பு வெள்ளையில் படமாக்கப்படும் படம். அக்காலத்திய கேமராவை வைத்து எடுக்கப்படும் படம். அந்தக் காலத்திய நடிகர், நடிகைகள், அவர்கள் ஆடைகள், பேசுகின்ற பேச்சு… இதையெல்லாம் படம் பார்க்கும்போது கொஞ்சமும் நவீனம் எட்டிக்கூட பார்க்காத அளவிற்கு வைத்துக் கொண்டு மிக அழகாக படம் முழுவதையும் படமாக்கி இருக்கிறார்.
அதிலும் முக்கியமான காட்சிகளில் கேமரா கோணத்தை கச்சிதமாக நடிப்பவர்களின் நடிப்பு நமக்கு தெரியும் வகையில் வைத்திருப்பதும் படத்தை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது.
ல்லேவெல்லின் அந்தோணி கொன்சால்வேஸ் என்ற படத் தொகுப்பாளர் இந்த படத்தை நறுக்கிக் கொடுத்திருக்கிறார். ஆனால், இன்னமும் சில காட்சிகளை சுருக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். படத்தின் இடைவேளைக்கு பின்பு நடக்கும் காட்சிகள் கொஞ்சம் நீளமாக இருப்பது போலவே நமக்கும் தோன்றுகிறது. அதிலும் ராணா டக்குபதியின் விசாரணை காட்சிகளின் நீளத்தில் கத்திரியை தாராளமாக போட்டிருக்கலாம்.
புகழ் பெற்ற இரண்டு மனிதர்களுக்கிடையிலான ஈகோதான் திரைப்படம் என்பதால் ஒவ்வொரு காட்சிகளும் அவருடைய ஆளுமை, திறமையை, அவர்கள் எப்படி எல்லாம் வெளிப்படுத்துகிறார்கள் என்பதை திரைக்கதையில் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
இவர்கள் இருவருக்கும் இடையிலான மோதலுக்கு முழு முதற் காரணம் ஈகோதான் என்பதை பார்வையாளர்களால் உணர முடிகிறது. ஆனால், இந்த ஈகோ சண்டையை உடன் இருப்பவர்கள் யாராவது ஒருவராவது வசனம் மூலமாக சொல்லி இருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும். அதை அவர்கள் சொல்லாதவிதத்தில் இவர்கள் இடையில் ஏதோ ஒரு மோதல் இருக்கிறது என்பதாகவே கடைசிவரையிலும் நம்மை பேச வைத்திருக்கிறார்கள்.
‘சாவித்திரி’ படம் போலவே இந்தப் படமும் தெலுங்கு, தமிழ் மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், ‘சாவித்திரி’ படத்தில் அதீத எதிர்பார்ப்பும் அதனுடைய இயக்கமும் வேறுவிதமாக இருந்ததால் அந்தப் படத்தை போலவே இந்த படம் இல்லை என்று தைரியமாக சொல்லலாம்.
ஒரு ஸ்டுடியோ செட்.. சில சினிமா தொழிலாளர்கள்.. முக்கியப் புள்ளிகள்.. இவர்கள் மீது நடக்கும் போலீஸ் விசாரணை என்று இந்தப் படத்தின் திரைக்கதை இதே இடத்தையே சுற்றி சுற்றி வருவதால் நமக்கும் கொஞ்சம் அலுப்பு தட்டி போய் விடுகிறது.
சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. அந்தக் கூட்டு முயற்சியில் அனைவருமே தங்களுடைய பங்களிப்பை தங்களுடைய சுய கௌரவம் பார்க்காமல் செய்து கொடுத்தால்தான் ஒரு திரைப்படம் மிகச் சிறப்பாக வெளிவரும். இந்தக் கருத்தை இயக்குநர் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.
ஆனால் ஹீரோ, இயக்குநர் இடையேயான ஈகோ மோதலை இந்தப் படம் கடைசிவரையில் சொல்லியிருக்கிறது என்பதால் திரைப்படம் சாராத மக்களுக்கு இத்திரைப்படம் நிச்சயமாக புரிந்து கொள்வதற்கு எட்டாக்கனியாகத்தான் இருக்கும்.
மேலும் இந்தப் படம் ஆரம்பமான நேரத்திலேயே தியாகராஜ பாகவதரின் கதையைத்தான் படமாக்குகிறோம் என்று தயாரிப்பு தரப்பில் தகவல்கள் வெளியில் கசியவிடப்பட்டது. இதனால்தான் பாகவதரின் பேரன் இந்தப் படத்தின் மீது உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
ஆனால், படத்தைப் பார்க்கும்போது ஒகு கலையுலக தொழிலாளியை கொலை செய்த குற்றத்திற்காக துல்கர் ஜெயிலுக்குப் போவதுபோல ஒரு நிமிட காட்சியைப் படத்தில் காண்பித்திருக்கிறார்கள். அவ்வளவுதான்..! இது எப்படி பாகவதரின் கதையாகும்..?
மேலும் படத்தில் ஸ்டூடியோவின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான ரவீந்திர விஜய், ஹீரோயின் மீது மையல் கொண்டிருக்கிறார் என்று கதையில் ஒரு டிவிஸ்ட்டை வைத்து அந்த ஸ்டூடியோவுக்கு ‘மாடர்ன் பிக்சர்ஸ்’ என்று பெயர் வைத்து தமிழ்ச் சினிமாவின் லெஜெண்ட்டான ‘மாடர்ன் ஸ்டூடியோஸ்’ உரிமையாளரான சுந்தரம் ஐயாவை தெருவுக்கு இழுத்திருப்பது எந்த வகையில் நியாயம்..?
தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலுமே இந்தப் பெயர் வைக்கப்பட்டிருப்பது அயோக்கியத்தனம். வேண்டுமானால் துல்கரின் சொந்த ஊரான கேரளாவில் இருக்கும் ஸ்டூடியோக்களின் பெயரை வைத்திருக்கலாம். அல்லது தெலுங்கில் கோலோச்சிக் கொண்டிருக்கும் எத்தனையோ ஸ்டூடியோக்களின் பெயரை வைத்திருக்கலாம். ஆனால் இதையெல்லாம் செய்யாமல் தமிழ்நாட்டை கேவலப்படுத்துவதுபோல மாடர்ன் ஸ்டூடியோஸ் பெயரை வைத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
துல்கர் சம்பந்தப்பட்ட படங்களில் தொடர்ச்சியாக இது போன்ற தமிழின விரோத கருத்துக்களும், செயல்களும் வந்து கொண்டிருப்பது சரியல்ல.. சினிமாத் துறை மூலமாக பல தரப்பு மக்களையும் கவர வேண்டும். அதைவிட்டுவிட்டு ஒரு சாராரை அவமானப்படுத்தக் கூடாது. அவனுடைய காசையும் வாங்கிக் கொண்டு அவனையே கிண்டல் செய்வது, கேவலப்படுத்துவதும் மன்னிக்க முடியாத குற்றம்..! இதனாலேயே இந்தப் படத்தை நம்மால் விதந்தோத முடியவில்லை..!
‘நடிப்பு அரக்கன்’ பகத் பாசிலை, ‘நடிப்பு சக்கரவர்த்தி’ துல்கர் சல்மான் வீழ்த்தினாரா…? இல்லையா…? என்பதை படம் பார்க்கும் ரசிகர்கள் சொல்வார்கள்..!
RATING : 3.5 / 5









