‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்

‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்

Leaping Horse Entertainment, Incredible Productions & DINA Studios ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் மணி தினகரன் மற்றும் எம்.எஸ்.சிவநேசன், வி.பார்கவி ஆகிய மூவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் பரத் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக மலையாள நடிகையான ஆன் ஷீத்தல் நடித்துள்ளார். இவர்களுடன் ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன், அம்மு ராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சுரேஷ் பாலா, இசை – விஷால் சந்திரசேகர், பாடல்கள் – தாமரை, நிரஞ்சன் பாரதி, படத் தொகுப்பு – புவன் சீனிவாசன், மக்கள் தொடர்பு – யுவராஜ், விளம்பர வடிவமைப்பு – தண்டோரா, சபா டிசைன்ஸ், சண்டை இயக்கம் – மிராக்கிள் மைக்கேல்.

‘நாளைய இயக்குநர்’ தொடரின் மூன்றாவது சீசனில் 2-வது இடத்தை வென்ற ஸ்ரீசெந்தில் இப்படத்தினை இயக்கியுள்ளார்.

இன்று பலர் தங்களுடைய குடும்பங்களில் தவறவிடும் பாசம், பந்தம், உறவு அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளைப் பற்றி இப்படம் பேசுகிறது.

சமீபகாலமாக கை பேசி உபயோகத்தினால் ஏற்படும் பிரச்சனைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. உதாரணமாக கை பேசியினால் குடும்பத்திற்குள் பிரச்சனை, பணியிடத்தில் பிரச்சனை என பல வகையான பிரச்சனைகள் தினம்தோறும் தொடர்ந்து வருகிறது.

அப்படிப்பட்ட கை பேசி பிரச்சனைகளில் ஒன்றை தேர்வு செய்து அதன் மூலம் நடக்கக் கூடிய சைபர் க்ரைம் பிரச்சினைகள், அதனைத் தொடர்ந்து நடக்கக் கூடிய தொடர் கொலைகளை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

‘காளிதாஸ்’ என்னும் பரத் ஆதம்பாக்கம் பகுதியின் போலீஸ் இன்ஸ்பெக்டர். காதலித்து மணந்த மனைவியுடன் இருக்கிறார். வீட்டில் மனைவியுடன் நேரத்தைச் செலவழிக்க முடியாத அளவுக்கு வேலையில் மும்முரமாக இருக்கிறார் பரத். இதனால் இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையில் தினம், தினம் சண்டைதான். இந்தப் பிரச்சினைகளுக்கிடையில் ஒரு பொறுப்பான காவல்துறை ஆய்வாளராகத் தனது பணியைத் தொடர்கிறார் பரத்.

இந்த நேரத்தில் ஆதம்பாக்கத்தில் அடுத்தடுத்து மூன்று பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மூவரின் தற்கொலையும், கொலையாகவும் இருக்கக் கூடும் என்பது போலவே தெரிகிறது.

இதனால் துணை கமிஷனரான சுரேஷ் மேனன் இந்த வழக்கின் கூடுதல் அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார். பரத்துடன் இணைந்து இந்தத் தற்கொலை வழக்குகளைத் துப்பறிகிறார் சுரேஷ் மேனன்.

மூன்று பெண்களுக்குமே குழந்தைகள் இல்லை. இதில், இரண்டு பேருக்குக் கணவர்கள் உண்டு என்றாலும் கணவருடன் அவர்களுக்கு தினமும் சண்டை. எந்நேரமும் செல்போனில்தான் வாழ்க்கை.. இப்படியொரு ஒற்றுமை மட்டுமே போலீஸ் கண்களில் சிக்க.. கூடுதலாக ஒரு துப்பு கிடைக்காதா என்று தீவிரமாக ஆராய்கிறார்கள் பரத்தும், சுரேஷ் மேனனும்.

இறுதியில் அதற்கான விடை கிடைக்கிறது. அந்த விடை நிச்சயமாக பார்வையாளர்களால் கொஞ்சமும் யூகிக்க முடியாதது என்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பம்சம்.

மிக இறுக்கமான, திரில்லர் சம்பவங்களைத் தொகுத்து அடுத்து என்ன.. அடுத்து என்ன.. யார் கொலை செய்தது.. என்கிற பரபரப்பை நமக்குள் பற்ற வைத்து பார்வையாளனையும் பரிதவிக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநரான ஸ்ரீசெந்தில்.

பரத்துக்கு மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு பெயர் சொல்லும் கேரக்டர் இந்தப் படத்தில் கிடைத்திருக்கிறது. சினிமா துறையில் இத்தனை வருட இடைவெளியிருந்தாலும் தனது உடலை கச்சிதமாக வைத்திருந்து இந்தப் பாத்திரத்திற்கு அளவெடுக்காமலேயே பொருந்தியிருக்கிறார் பரத். பாராட்டுக்கள்.

போலீஸ் அதிகாரி வேடம் என்பதாலேயோ உண்மைத்தனம் இல்லாத காட்சிகளை அமைக்காமல் மிக, மிக யதார்த்தமான காட்சிகள் கொண்ட திரைக்கதையாக அமைந்துவிட்டதால்… அவரது பாத்திரத்தை ரசிக்க முடிந்திருக்கிறது.

வீட்டில் மனைவியுடன் சண்டை.. மனைவியின் புரிந்து கொள்ளாமையை நினைத்து மருகினாலும்.. பதில் சொல்ல முடியாமல் தவிப்பது.. வேலையில் தீவிரம் காட்ட முடியாமல் வீட்டுப் பிரச்சினையில் சிக்குவது.. என்று இருவித மன நிலையோடு போராடும் சராசரி ஆணாக மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் பரத்.

இனிமேல் இது போன்ற கதையம்சம் உள்ள படங்கள் மட்டுமே தன்னைக் காப்பாற்றும் என்று அவர் நினைத்து செயல்பட்டால் நமக்கும் நல்லது.. அவருக்கும் நல்லது.

நாயகியாக ஆன் ஷீத்தல். கடவுளின் தேசத்தில் இருந்து மற்றுமொரு நல்வரவு. பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்திழுக்கிறார். கணவருடன் போடும் சண்டை காட்சிகளிலும், தனது ஏமாற்றத்தைக் காட்டி, விரக்தியோடு இருக்கும் சராசரி மனைவியாக அனைவருக்கும் இவரைப் பிடித்துப் போகிறது.

ஆதவ் கண்ணதாசனைப் பார்த்தவுடன் மோதலுடன் துவங்கிய நட்பை கணவர் மீதான கோபமே தொடர வைக்கிறது. அந்த சில காட்சிகளில் தனது பாதிப்பை நன்கு உணர வைத்திருக்கிறார் ஷீத்தல். சில, பல முக பாவனைகளில் ‘வாவ்’ என்றும் சொல்ல வைக்கிறார். மிகச் சரியான தேர்வு. ஒரு அறிமுக நடிகையை இது போன்ற பவர்புல்லான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஒரு தைரியம் வேண்டும். இயக்குநருக்கு இதற்காகவும் தனி பாராட்டுக்கள்.

சுரேஷ் மேனன் துணை கமிஷனராக களத்தில் குதிக்கும்போதே ஒரு பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. அதனை கடைசிவரையிலும் மெயின்டெயின் செய்திருக்கிறார்கள். வயதில் மூத்த அதிகாரி என்ற முறையில் அவர் எடுக்கும் சில முடிவுகள்.. சில விசாரணைகள்... வழக்கு விசாரணையை திசை திருப்பும்போது ‘அட’ என்று நம்மையறியாமலேயே சொல்ல வைக்கிறது.

நிமிடத்திற்கு நிமிடம் படத்தில் ஏற்படும் டிவிஸ்ட்டுகளை சுரேஷ் மேனனே உண்டாக்குகிறார். அதோடு தனது ஜூனியர் ஆபீஸரான பரத்திற்கு அவர் கொடுக்கும் அட்வைஸ்களும் சிறப்பு.

“வேலை கொடுத்தவன்கிட்ட பம்முற. வாழ்க்கையையே கொடுத்தவள கண்டுக்க மாட்டேன்ற..” என்று அவர் சொல்லும் வசனம் பரத் போன்ற கணவன்மார்களுக்கானது.

ஆதவ் கண்ணதாசனின் வருகைக்குப் பின்னர் இவர் எப்போது மாட்டுவார் என்கிற எண்ணத்தையே கடைசிவரைக்கும் கொண்டு போயிருக்கிறது. அந்த வயதுக்கேற்ற.. ஏதோ ஒருவித காரணத்துக்காக கொலைத் தூண்டுதலில் இருக்கும் வாலிபனாக மிரட்டியிருக்கிறார் ஆதவ் கண்ணதாசன். பாராட்டுக்கள் தம்பி.

போலீஸ் ஏட்டாக வருபவர் அவ்வப்போது விசாரணைக்குப் போகுமிடங்களிலெல்லாம் அடிக்கும் விட்டுகளும், வசனங்களும் சிற்சில கவனிப்பையும், சிரிப்பையும் கொடுக்கின்றன. அதேபோல் லாக்கப்பில் இருந்து கொண்டு பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசும் ஒரு குற்றவாளியின் நடிப்பும் அழகு.

விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்களை விடவும் பின்னணி இசை அபாரம். ஒரு தேர்ந்த திரில்லிங் அனுபவத்தை நமக்குக் கொடுப்பதைப் போல பின்னணி இசையும் அதற்கான வேலையைச் செய்திருக்கிறது. உதாரணமாக ஆதவ் கண்ணதாசனிடமிருந்து நாயகி தப்பித்து வீட்டுக்குள் ஓடி ஒளியும் காட்சியில் இசை மிகச் சிறப்பு.

சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் ஒரே கிளைமேட்டில் தெரிகிறது. இரவு நேரக் காட்சிகளையும் திகிலாகவே படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். படத்தின் துவக்கத்தில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்ணைக் காட்டும் அந்தக் காட்சியின் படப் பதிவு அபாரம்.. அந்தச் சில நிமிடங்களே படத்தின் தன்மையைப் பற்றிப் பார்வையாளர்களுக்குச் சொல்லி விடுகிறது.

புவன் சீனிவாசனின் இறுக்கமான படத் தொகுப்பில் படத்தின் மர்ம முடிச்சை கொஞ்சம், கொஞ்சமாக அவிழ்க்கும் திரைக்கதை அசத்தல். ஆதவ்-ஆன் ஷீத்தல் இடையிலான நட்பில் கொஞ்சமும் சந்தேகம் வராத அளவுக்கு எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளிலும், இறுதிக் காட்சியில் அதன் பிழையை உணர்த்தும் காட்சியிலும் படத் தொகுப்பாளரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

இயக்குநர் ஸ்ரீசெந்திலுக்கு இது முதல் படம். ஆனால் ஒரு கை தேர்ந்த இயக்குநர் போல் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். ஆண்களின் பணிச் சுமை.. காவலர்கள் சமாளிக்கும் பிரச்சினைகள்.. மனைவிமார்களின் ஏக்கம், எதிர்பார்ப்பு.. இப்போதைய நவீன சூழலில் குடும்பத்தைக் குலைப்பதற்காக நமக்குத் தெரியாமலேயே உருவாகியிருக்கும் பாலியல் குற்றங்கள்.. போன்றவைகளை ஒன்றுபோல அடுக்கடுக்காய் அதே சமயம் ஒரு உளவியல் அக்கறையோடு சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

ஒரு காட்சியை மிஸ் செய்தால்கூட அடுத்தக் காட்சி புரியாது என்கிற அளவுக்கு கச்சிதமான நெருக்கத்தில் திரைக்கதையை அமைத்து.. கொலையாளி யார் என்பதை கடைசிவரையிலும் சஸ்பென்ஸில் கொண்டு சென்று பரபரக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீசெந்தில்.

தமிழ் சினிமா துறைக்கு புதிய, திறமைசாலியான இயக்குநர் ஒருவர் கிடைத்திருக்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்போம்..!