காதலை மூன்று வகைப்படுத்தி தற்காலத்திய இளைஞர், இளைஞிகளுக்காக உருவாகியிருக்கும் படம் “காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை காதலர் தினம்” என்ற திரைப்படம்.
இந்தப் படத்தில் சரவணன், அபிநயா அன்பழகன், ஸ்ரீபவி, ஐஸ்வர்யா பாஸ்கரன், ரமேஷ் கண்ணா, கும்கி அஸ்வின், நடேசன், தெனாலி, சன் டிவி அகல்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஆதிஷ் உத்ரியன் இசையையும், து.மகிபாலன் ஒளிப்பதிவையும், லட்சுமணன் படத் தொகுப்பையும், சரவணன் சண்டை பயிற்சியையும், சுரேஷ் நடன பயிற்சியையும் கவனித்துள்ளனர்.
கலை இயக்கம், உடைகள், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு. இயக்கம் என எட்டு பொறுப்புகளை ஏற்றுள்ளார் இயக்குநர் கெளரி சங்கர்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் கெளரி சங்கர் பேசும்போது, “இந்தப் படத்தில் இன்றைய காதலை மூன்று வகைப்படுத்தியிருக்கிறேன். புரிந்த காதல், புரியாத காதல், புதிரான காதல் என்பதுதான் அது.
புரிந்த காதல் சுகமானது. புரியாத காதல் சுமையானது. புதிரான காதலோ முடிவில்லாதது. இதற்காக ஒவ்வொரு காதலுக்கும் ஒவ்வொரு ஜோடிகளை நடிக்க வைத்திருக்கிறேன்.
இன்றைய இளைய சமுதாயம், இந்த சமூகத்தில் காதலுக்காக தங்களது வாழ்க்கையை தொலைக்கிறார்களா?.. அல்லது தொடர்கிறார்களா?.. என்பதை சுவையான திரைக்கதையில் விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறேன்” என்றார்.









