தமிழ்ச் சினிமா ரசிகர்களைவிடவும், சிவகார்த்திகேயனைவிடவும், ஏன் அவரது ரசிகர்களைவிடவும் திரைப்பட விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களுமே நாளை வெளியாகவிருக்கும் ‘காக்கிசட்டை’ படத்தின் ரிசல்ட்டை தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஏனெனில் தொடர்ச்சியாக 4 ஹிட்டுகளை கொடுத்திருக்கும் சிவகார்த்திகேயன் இதிலும் ஹிட்டடித்தால் சிவகார்த்திகேயன் மினிமம் கியாரண்டி நடிகராக விஜய், அஜீத் வரிசையில் நிச்சயம் இடம் பெறுவார் என்பதுதான்..!
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக அறிமுகமான ‘மெரீனா’ படத்தின் தமிழ்நாடு வசூல் மட்டுமே 4 கோடி ரூபாய்.
எழில் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மனம் கொத்திப் பறவை’ 8 கோடி ரூபாயை வசூலித்தது.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர் நீச்சல்’ படம் 12 கோடியை வசூலித்தது.
மீண்டும் பாண்டிராஜின் இயக்கத்தில் விமலுடன் இணைந்து நடித்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படம் 15 கோடியை வசூலித்தது..
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் இதற்கு முந்தைய அனைத்து வசூல் சாதனைகளையும் கடந்து 25 கோடியைத் தொட்டது.
மேற்சொன்ன படங்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு எதிர்பார்ப்பில்லாமல் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள்.
ஆனால், பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு, மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான ‘மான் கராத்தே’ படம் தமிழ்நாட்டில் 18 கோடி ரூபாய்தான் வசூல் செய்தது. படத்தின் பட்ஜெட்டுடன், ஒப்பிடுகையில் ‘மான் கராத்தே’ லாபத்தைத் தரவில்லை என்பது உண்மை.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வசூலை மீண்டும் தர வேண்டிய கட்டாயத்தில் இந்த ‘காக்கி சட்டை’ படம் உள்ளது. ‘இந்தப் படத்தின் வெற்றிதான் சிவகார்த்திகேயனின் உண்மையான வியாபாரத்தை தமிழ்த் திரையுலகத்தில் தீர்மானிக்கும் படமாக அமையும் என்கிறார்கள் திரையுலகப் புள்ளிகள்.
நாளை தமிழகத்தில் மட்டும் 370 தியேட்டர்களில் ‘காக்கிசட்டை’ படம் வெளியாகவுள்ளது. அமெரிக்காவில் 34 தியேட்டர்களிலும், பிரிட்டனில் 34 தியேட்டர்களிலும் வெளியாக உள்ளது.
தனுஷின் தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ தயாரித்த ‘வேலையில்லா பட்டதாரி’ மற்றும் ‘காக்கிசட்டை’ படத்தின் தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் உரிமை 23 கோடி ரூபாய்க்கு ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
‘வேலையில்லா பட்டதாரி’ படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 32 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியது. இதில் 8 கோடி ரூபாய் இந்நிறுவனத்திற்கு லாபமாகவே கிடைத்தது.
ஆனால் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்கு பின்பு ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ நிறுவனம் வெளியிட்ட ‘கயல்’ படம் இவர்களுக்கு மிகப் பெரிய நஷ்டத்தை உண்டாக்கியதால், அந்த நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் ‘காக்கி சட்டை’ படத்தை, ‘கயல்’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கே கொஞ்சம் சலுகை விலையில் வழங்கியுள்ளார்களாம்.
‘காக்கி சட்டை’ படத்தின் தமிழ்நாடு ஏரியா வியாபார நிலவரம் :
சென்னை – வினியோக உரிமை – சரவணன் – ரூ. 2 கோடி
செங்கல்பட்டு – பங்கஜ் மேத்தா – 3 கோடி
மதுரை – அன்புச் செழியன் – 3 கோடி
திருச்சி – நாராயணசாமி – 2.50 கோடி
சேலம் – அசோக் சாம்ராட் – 2 கோடி
நெல்லை – சுப்புராஜ் – 1.25 கோடி
வட ஆற்காடு, தென்னாற்காடு – செந்தில் – 2.10 கோடி
கோவை – சிவக்குமார் – 3.25 கோடி
இதன் மூலம் தமிழ்நாட்டில் தியேட்டர் ரிலீஸின் மொத்த வியாபாரம் 19 கோடியே 10 லட்ச ரூபாய் அளவிற்கு நடைபெற்றுள்ளது என்பது தெரிகிறது.
ஒரு துறையின் தொடர்ச்சியான வளர்ச்சி என்பதே லாபமோ, நஷ்டமோ எது வந்தாலும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் அதைத் தாங்கும் சக்தியுடையவர்களாகவும், அதன் பரிகாரம் கிடைக்கக்கூடியவிதமாகவும் இருக்க வேண்டும். இதுபோல் நஷ்டம் வரும்போது நஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் தயாரிப்பாளர்கள் இருந்தால்தான், தமிழ்ச் சினிமா மென்மேலும் வளரும்..! ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ நிறுவனத்தின் தயாரிப்பாளர்களுக்கு எமது பாராட்டுக்கள்..!
‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளர் இதனை உணர்ந்து கொண்டால் சரி..!
தகவல் உதவி : www.tamilcinemaboxoffice.com