“கீர்த்தி சுரேஷுக்கு பதிலாக காஜல் அகர்வால்…” – கவலை வேண்டாம் ஜீவா..!

“கீர்த்தி சுரேஷுக்கு பதிலாக காஜல் அகர்வால்…” – கவலை வேண்டாம் ஜீவா..!

'கவலை வேண்டாம்' என்பதை கோட்பாடாகக் கொண்டு படம் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனம் தற்போது தயாரிப்பில் இருக்கும் 'கோ 2' படத்தை தொடர்ந்து ஜீவா, பாபி சிம்ஹா இணைந்து நடிக்கும் 'கவலை வேண்டாம்' படத்தையும் தயாரிக்க உள்ளனர். 'யாமிருக்க பயமே' படத்தின் இயக்குநர் டி.கே. இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.  

தற்போது இந்தப் படத்தின் ஹீரோயினாக காஜல் அகர்வால் புக் செய்யப்பட்டுள்ளாராம்.

இதைப் பற்றி இயக்குநர் டி.கே. கூறும்போது, “ஜீவா சாரும் சரி, காஜல் அகர்வாலும் சரி நான் இயக்குனர் கே வி ஆனந்த் அவர்களிடம் உதவியாளராக பணிபுரியும்போதே எனக்கு நல்ல பழக்கம். கதை கரு உருவானதுடன் ஜீவா சார்தான் கதாநாயகன் என்று முடிவெடுத்துக் கொண்டாலும், முழுக் கதை முடிவடையும்வரை கதாநாயகி தேர்வு குறித்து முடிவு செய்யவில்லை.

இந்தப் படத்தின் நாயகி எல்லோருக்கும் பிடிக்கும்வகையில், நான் எதிர்பார்க்கும் நடிப்பை  உடல் மொழியாலும், உணர்வாலும் வெளிப்படுத்த வேண்டியவராக வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். கதாநாயகனுக்கு இணையாக நடிக்க வேண்டிய பல காட்சிகள் இருப்பதால் மக்களிடையே நன்கு அறிமுகமான ஒரு நாயகிதான்  இதில் நடிக்க முடியும் என்கிற நிர்பந்தத்தை உருவாக்கியது. கதையைக்  கேட்டவுடன் காஜல் அகர்வால்  உற்சாகமாக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். வெகுவிரைவில்  படப்பிடிப்பு துவங்க உள்ளது..” என  உவகை பொங்கக் கூறினார்  டிகே.

முதலில் இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இதில் நடிக்க ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளிவந்தன. ஜீவாவுடன் போட்டோ ஷூட்டில்கூட கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். அதை கீர்த்தியும் ஒத்துக் கொண்ட நிலையில் இப்போது திடீரென காஜல் அகர்வாலை ஹீரோயினாக புக் செய்துள்ளனர்.

'யான்' படத்தின் மூலம் பல கோடிகளை இழந்து நஷ்டத்தைச் சம்பாதித்திருக்கும் ஆர்,எஸ்.இன்போடைன்மெண்ட் நிறுவனத்தின் தற்போதைய நிலைமையைப் பொறுத்தவரையில் கீர்த்தி சுரேஷைவிட மூன்று மடங்கு சம்பளம் கேட்கும் காஜல் அகர்வாலை புக் செய்தது நிச்சயம் ஆச்சரியமான விஷயம்தான்..!

காரணம் என்னவோ..?