மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி என்ற நிறுவனத்தின் சார்பில் டாக்டர் வி.ஜெயப்பிரகாஷ் தயாரித்துள்ள படம் ‘உலகம்மை’.
மறைந்த தமிழ் எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் பிரபலமான நாவலான ‘ஒரு கோட்டுக்கு வெளியே’-வை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் கௌரி கிஷன் மற்றும் வெற்றி மித்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த ‘உலகம்மை’ படத்திற்கு ‘இசை ஞானி’ இளையராஜா இசையமைத்துள்ளார்.
சமூக வாழ்வியல் திரைப்படமான ‘உலகம்மை’யின் முக்கிய அம்சங்களில் இளையராஜா இசையமைத்த மூன்று பாடல்களும் பின்னணி இசையும் அடங்கும். டாக்டர் குபேந்திரன் வசனம் எழுதியுள்ளார். கே.வி.மணி ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் அர்ஸ் படத் தொகுப்பாளராகவும், வீர சிங்கம் கலை இயக்குநராகவும் பங்காற்றியுள்ளனர். பாடல் வரிகளை இளையராஜா, முத்துலிங்கம், சரவணன் ஆகியோர் எழுதியுள்ளனர். ரெட் டிராகன் கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
‘சாதி சனம்’, ‘காதல் எஃப்எம்’ மற்றும் ‘குச்சி ஐஸ்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் விஜய் பிரகாஷ் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் விஜய் பிரகாஷ் பேசும்போது, “இந்தப் படத்தின் கதை 1970-களின் பின்னணியில் திருநெல்வேலி பகுதிகளை களமாகக் கொண்டு நடக்கிறது.
நான் மாணவராக இருந்த காலத்திலிருந்தே சு.சமுத்திரத்தின் கதைகளால் ஈர்க்கப்பட்டேன். அதுவும் ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, அதை திரைப்படமாக எடுக்க நான் விரும்பினேன். சமுத்திரம் அவர்கள் காலமாகிவிட்டதால், அவருடைய மனைவியிடம் இருந்து உரிமையைப் பெற்றுள்ளோம்…” என்றார்.
‘உலகம்மை’ என்ற கிராமத்துப் பெண்ணைச் சுற்றித்தான் இந்தப் படத்தின் கதை நகர்கிறது. மாரிமுத்து நாடார் மற்றும் பலவேச நாடார் ‘உலகம்மை’ மற்றும் அவரது தந்தை மாயாண்டி நாடாரை பழிவாங்குகிறார்கள். அந்தக் காலத்தில் நிலவிய சாதி அமைப்பை உலகம்மை எப்படி எதிர்க்கிறாள் என்பதைத்தான் இந்தப் படம் சித்தரிக்கிறதாம்.
தமிழ்த் திரையுலகில் ஒரு புதுமையான முயற்சியாக, இந்த ‘உலகம்மை’ திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜா உருவாக்கியுள்ள மெய்சிலிர்க்க வைக்கும் பின்னணி இசை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணி இசையை பிரபல இயக்குநர்-நடிகரான கே.பாக்யராஜ் வெளியிட்டார்.
படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், வரும் ஏப்ரல் மாதம் உலகம்மையை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.









