full screen background image

ஜூங்கா – சினிமா விமர்சனம்

ஜூங்கா – சினிமா விமர்சனம்

விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர் விஜய் சேதுபதியும், ஏ அண்டு பி குரூப் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் மற்றும் ஐசரி கணேஷ், ஆர்.எம்.ராஜேஷ் குமார் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். 

படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன், சாயிஷா இருவரும் நடித்துள்ளனர்.

மேலும், யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன், ராதாரவி, மொட்டை ராஜேந்திரன், வினோத், விஜயா பாட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – டட்லி, இசை – சித்தார்த் விபின், கலை இயக்கம் – சாபு ஜோஸப், சண்டை பயிற்சி – அன்பறிவ், பாடல்கள் – லலிதானந்த், நடன இயக்கம் – ஷ்ரிதர், ராஜூ சுந்தரம், மக்கள் தொடர்பு – யுவராஜ், புகைப்படம் – ராஜ்,

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கோகுல், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

‘ஜூங்கா’ என்னும் விஜய் சேதுபதி பொள்ளாச்சியில் தனது அம்மா சரண்யாவுடனும், பாட்டி விஜயாவுடனும் வாழ்ந்து வருகிறார். பேருந்து நடத்துனராக வேலை பார்த்து வரும் அவரது ஸ்பெஷலாட்டி யாரையாவது ஒரு முறை பார்த்தாலே போதும், அவர்களை அப்படியே தன் நினைவில் வைத்திருப்பார். இதனை வைத்தே பேருந்தில் டிக்கெட் எடுக்காதவர்களை துல்லியமாகக் கண்டறிந்து டிக்கெட் வாங்க வைத்துவிடுவார்.

இவருக்கும் ஒரு காதல். அதே ஊரில் வசித்து வரும் தெலுங்கு பேசும் கல்லூரி மாணவியான மடோனா செபாஸ்டினை காதலித்து வருகிறார். ஒரு சமயம் இதே காதலிக்காக அடிதடியில் இறங்குகிறார் விஜய் சேதுபதி.

இதையறிந்த அவரது தாய் சரண்யா “அடிதடி, வெட்டுக்குத்து வேலையெல்லாம் வேண்டாம்ன்னுதான் சென்னைல இருந்து இங்கே வந்து குடியேறினோம். இங்கேயும் ஆரம்பிச்சிட்டியா?”ன்னு மகனை வார்த்தைகளால் விளாச.. அப்போதுதான் ஜூங்காவுக்கு அவரது குடும்பப் பாரம்பரியமே தெரிய வருகிறது.

அவரது அப்பாவான ரங்காவும், தாத்தாவான லிங்காவும் பெரிய தாதாக்களாக சென்னையில் வாழ்ந்தவர்கள் என்றும் கடைசியில் வாழ்க்கையில் நொடிந்து போய் உயிரைவிட்டார்கள் என்பதையும் தெரிந்து கொள்கிறார் ஜூங்கா.

‘சினிமா பாரடைஸோ’ என்னும் பெரிய சினிமா தியேட்டரே அவர்களுக்குச் சொந்தமாக இருந்தது என்றும் அதனை ஜூங்காவின் அப்பா சொற்ப தொகைக்கு விற்றுவிட்டதாகவும் சரண்யா சொல்ல.. அந்தத் தியேட்டரை திரும்பவும் வாங்குவது என்று முடிவெடுக்கிறார் விஜய் சேதுபதி.

இதற்காக தனது உயிர் நண்பரான யோகிபாபுவை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வரும் ஜூங்கா, சென்னையில் குறுகிய காலத்தில் ஒரு பெரிய தாதாவாக உருவெடுக்கிறார். அடிதடி, வெட்டுக் குத்து, கை, காலை உடைத்தல், எடுத்தல், கொலை செய்தல் என்று எல்லாவற்றுக்கும் ஜி.எஸ்.டி. வரி போட்டு பில் கலெக்சன் செய்யும் அளவுக்கு தாதா தொழிலை பக்காவாக மேற்கொள்கிறார்.

ஆனால் இன்னொரு பக்கம் படு கஞ்சனாகவும் உருவெடுக்கிறார். தியேட்டரை விலைக்கு வாங்க வேண்டும் என்பதால் சிறுகச் சிறுக சேமிக்கிறார். அதில் ஒரு ரூபாயைக்கூட செலவழிக்கக் கூடாது என்று திட்டமிட்டு பணத்தைச் சேமிக்கிறார்.

இதில் ஒரு கோடி ரூபாயை சேமித்துவிட்டு அந்தத் தியேட்டரை இப்போது வைத்திருக்கும் செட்டியாரான சுரேஷ் மேனனிடம் சென்று தியேட்டரை திருப்பிக் கேட்கிறார். செட்டியாரோ விஜய் சேதுபதியை அவமானப்படுத்தி அனுப்புகிறார்.

திரும்பி வரும் விஜய் சேதுபதி செட்டியாரை வழிக்கு வரவழைக்க திட்டமிடுகிறார். இதற்காக செட்டியாரின் அழகான மகளான சாயிஷாவை கடத்தத் திட்டமிடுகிறார். சாயிஷா பாரீஸில் படித்து வருவது தெரிந்து அங்கேயே தனது நண்பர் யோகி பாபுவுடன் பயணப்படுகிறார்.

இவர் அங்கே போய் சாயிஷாவை பார்த்து அவரை பாலோ செய்து அவரைக் கடத்த முற்படும்போது, அங்கேயே இருக்கும் சர்வதேச மாபியா கும்பல் சாயிஷாவை கடத்தி வந்து தங்களது தலைவன் ஒருவனை ஜெயிலில் இருந்துவிடுவித்தால் மட்டுமே சாயிஷாவை விடுவிக்க முடியும் என்று பிரான்ஸ் அரசிடம் பேரம் பேசுகிறது.

தன்னை முந்திக் கொண்ட மாபியா கும்பலை விஜய் சேதுபதியும் துரத்துகிறார். விஜய் சேதுபதியை பிரான்ஸ் போலீஸ் துரத்துகிறது. கடைசியாக என்ன ஆகிறது என்பதுதான் இந்த ‘ஜூங்கா’ படத்தின் திரைக்கதை.

தனது முந்தைய இரண்டு படங்களும் வேறுவேறு ஜர்னரில் இருந்தாலும் இந்த மூன்றாவதை விஜய் சேதுபதிக்காகவே ஸ்பெஷலாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கோகுல்.

ஜூங்கா என்ற சாமர்த்தியமான கேரக்டர் ஸ்கெட்ச் கொண்ட இந்தக் கதாபாத்திரத்திற்குள் விஜய் சேதுபதி தன்னைப் பொருத்திக் கொண்டிருக்கிறார்.

இதற்கு உதவியாக மகா கஞ்சன் என்கிற அந்த கேரக்டர் ஸ்கெட்ச்சும் இருந்திருக்கிறது. டார்க் காமெடியோ அல்லது பீல் குட் காமெடியோ அதனை வெளிப்படுத்தும் இடங்கள் குறைவாக இருந்தாலும் வெளிப்பட்ட இடங்களும் நிறைவாகவே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக சாயிஷா பாரீஸில் இருப்பதாக தெரிய வர.. விஜய்யும், யோகிபாபுவும் பாரீஸ் கார்னர் வந்து நிற்கும் காட்சிதான் முதல் கை தட்டல் பெற்ற காட்சி. பின்பு அவ்வப்போது ஆங்காங்கே சிரிப்பை மூட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. சிரிப்புக்கேற்ற திரைக்கதை அமைக்கப்படாததால் இத்தனைதான் அவராலும் முடிந்திருக்கிறது.

தன்னுடைய அலட்சியமான நடிப்பு, வசன உச்சரிப்பு, அப்பாவித்தனமான பேச்சு இதையெல்லாம் வைத்துதான் தனது கேரக்டர் மீதான ஈர்ப்பை தியேட்டர் ரசிகர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி.

இவருடைய கஞ்சத்தனத்தை பிரதானப்படுத்தியே திரைக்கதையில் பல காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதால் கதையோடு ஒன்றாமல் போய்விட்ட உணர்வும் அடிக்கடி வருகிறது.

ஒரு சம்பவம் செய்யச் சொல்லி வருபவர்களிடத்திலேயே காசு வாங்கி டீ குடிப்பது, மதியச் சாப்பாட்டிற்கு அவர்களிடத்திலேயே காசை பிடுங்குவது.. கொடுத்த பணத்தை சில்லரையாக மாற்றித் தரும்படி வம்படி செய்வது..

கொலை செய்யப் போகுமிடத்தில் துப்பாக்கிக் குண்டைக்கூட வீணாக்க வேண்டாம் என்று நினைத்து அவனை வெளியே தூக்கியெறிந்து கொல்லச் சொல்வது.. மதியச் சாப்பாட்டிற்கு அவன் வீட்டிலிருந்தே சாப்பாடை எடுத்து வரச் செய்வது.. ஜீப்பில் ஆட்களை ஏற்றியபடியே சென்று காசு வசூலிப்பது…

பாரீஸுக்கு சிக்கனமாக போய்ச் சேர வேண்டும் என்று நினைத்து வெண்கல வாளியில் கட்டுச் சோத்தைக் கட்டிக் கொண்டு செல்வது.. எக்னாமிக் கிளாஸில் மாறி, மாறி பயணித்து பாரீஸ் போய் சேர்வது.. அங்கே சோத்துக்காக ரொட்டியையே மூணு வேளையும் வாங்கிக் கொடுத்து யோகி பாபுவை வெறுப்பேற்றுவது.. என்று கொஞ்சம் நகைச்சுவை வரும் அளவுக்கு திரைக்கதை எழுதி அதில் அசத்தலாக நடித்திருக்கிறார்கள் விஜய் சேதுபதி அண்ட் கோ..!

முதற்பாதியில் காதலியாக வரும் மடோனா செபாஸ்டியன் ரசிகர்களுக்கு நிறையவே ஏக்கத்தைக் கொடுக்கிறார். தெலுங்கு மாடலாடும் பெண்ணாக, அந்தத் தெலுங்கு பாஷையையே ஒரு சவுந்தர்ய லஹரியாக உச்சரிக்கும் பாணியில் சொக்க வைக்கிறார் மடோனா. ஒரு பாடல் காட்சியிலும் அசத்தலாக நடனமாடிவிட்டுப் போக.. ஏக்கப் பெருமூச்சு ரசிகர்களுக்கு..! இவரை விட்டுப் பிரியும் கதையை விஜய் சேதுபதி சொல்லும் அழகு ரொம்பவே ரசிக்க வைத்திருக்கிறது.

நடன மங்கை சாயிஷாவின் அழகும், நளினமும், நடிப்பும், நடனமும் இன்னொரு பக்கம் நடிகைகளின் ரசிகர்களுக்கு பிடித்துத்தான் போகிறது. ஒளிப்பதிவாளரின் புண்ணியத்தில் சாயிஷாவின் அழகை இத்தனை அழகாக வேறெந்தப் படத்திலும் காட்டவில்லை. எல்லாப் புகழும் ஒளிப்பதிவாளருக்கே..!

அதிகமாக நடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால் இருக்கும் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார் சாயிஷா. அடுத்தடுத்து படங்கள் புக் ஆவதற்கான ரகசியம் இவருடைய நடிப்பும், நடனமும் என்றால் அதில் மிகையில்லை.

யோகிபாபு படம் முழுவதும் வியாபித்திருந்தாலும் சிற்சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார் என்பது ரசிகர்களுக்கு சோகமான விஷயம். டைமிங்கான இடங்களில் நகைச்சுவையைத் தெறிக்கவிட வேண்டிய இடத்தில் அது கிடைக்காமல் போனது வசனகர்த்தாவாலா.. அல்லது இயக்குநராலா என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

இன்னொரு பக்கம் சரண்யாவும், விஜயா பாட்டியும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். சென்னை பாஷையை அதன் நீள, அகலம், உயரம் குறையாமல் அளவோடு ஏற்ற இறக்கத்தோடு பேசியிருக்கிறார் சரண்யா. ஹோட்டல் அறையை 14 லட்சம் ரூபாயில் புக் செய்திருப்பதும், புகை குண்டை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருப்பதையும் விஜய் சேதுபதியிடம் சொல்லும் அந்த நீளமான வசனக் காட்சியில் சரண்யாவின் நடிப்பு மிக, மிக யதார்த்தம்.

இதற்குச் சற்றும் குறைவில்லாமல் அலப்பறையைக் கொடுத்திருக்கிறார் விஜயா பாட்டி. சுரேஷ் மேனன் வீட்டில் செய்யும் கலாட்டாவும், சாயிஷாவைத் தூக்கவில்லை என்பது தெரிந்து பம்முவதும், பின்பு சாயிஷா மீண்டும் தான் சிக்கலில் இருப்பதாகச் சொன்னதும் பந்தா காட்டுவதும், இந்தப் பாட்டிக்கு விஜய் சேதுபதியைவிடவும் அதிகக் கைதட்டல் கிடைத்திருக்கிறது.

சுரேஷ் மேனனுக்கு ஒரு கம்பீரமான தொழிலதிபர் வேடம். அதைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். இளையவேள் ராதாரவியின் நடிப்பையும் குறிப்பி்ட்டே ஆக வேண்டும். லோக்கல் டான்களின் சங்கத் தலைவராக வீற்றிருக்கும் அவரது பாடி லாங்குவேஜூம், மேக்கப்பும், வசன உச்சரிப்பும், நடிப்பும் அந்தக் கேரக்டருக்கே ஒரு கெத்தைக் கொடுத்திருக்கிறது.

இந்த டான் ஜூங்காவின் கதையை முதலில் இருந்து கடைசிவரையிலும் வரிசைக்கிரமமாக கேட்டுக் கொண்டே வரும் இன்ஸ்பெக்டர் வினோத்தும், கான்ஸ்டபிள் மொட்டை ராஜேந்திரனும் காமெடி போலீஸாகவே காட்டப்பட்டிருப்பதுதுதான் இந்தப் படம் காமெடி படம் என்பதை நிரூபிக்கிறது.

ஒளிப்பதிவாளர் டட்லீயின் ஒளிப்பதிவு திறமைக்கு நன்றாகவே தீனி போட்டிருக்கிறது பிரான்ஸ் நாடு. அந்த நாட்டின் அழகழகு பிரதேசங்களில் பயணம் செய்திருக்கும் கேமிரா அதனை அழகாக பதிவு செய்து காண்பித்திருக்கிறது. குறிப்பாக சாயிஷாவை விஜய் சேதுபதி கடத்திக் கொண்டு வரும் காட்சியில் இருக்கும் இடமும், அதன் ஹெலிகாப்டர் பார்வையும்.. வாழ்நாளில் ஒரு முறையேனும் அந்தப் பக்கம் போயிட்டு வந்திரணுமப்பா என்கிற ஏக்கத்தைக் கொடுக்கிறது.

கார் சேஸிங் காட்சிகளை திரில்லிங்கான வடிவத்தில் அமைத்திருக்கிறார் சண்டை இயக்குநர் அன்பறிவ். அதேபோல் குடை சண்டை, லோக்கல் சண்டை என்று எல்லாவற்றிலும் விஜய் சேதுபதியின் உருவத்திற்கேற்றாற்போல் காட்சிகளை அமைத்து அவரையும் கஷ்டப்படுத்தாமல், நம்மையும் ஏமாற்றாமல் செய்திருக்கிறார் அன்பறிவ்.

சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் ஒலிக்கின்றன. ஆனால் எதுவும் மனதைத் தொடவில்லை. ‘லோலிக்கிரியா’ பாடலின் உருவாக்கம் வித்தியாசயமாக இருந்தாலும் பாடல் வரிகள் சற்றும் மனதில் நிற்காததால் ஏமாற்றம்தான். மடோனாவின் அழகழகு எக்ஸ்பிரஷன்களால்  முதல் பாடல் கருத்தாய் நம் மனதில் பதிந்தது..!

கண்மூடித்தனமான பிளாக் காமெடி படமாக இருந்தாலும்கூட கொஞ்சம் லாஜிக் இருந்தாக வேண்டும். இந்தப் படத்தில் அது எதைப் பற்றியும் கிஞ்சித்தும் கவலையே படாமல் எப்படி படம் எடுத்தாலும் ஹீரோவுக்காக ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள் என்கிற ரீதியிலேயே திரைக்கதை அமைத்திருப்பது வருத்தத்திற்குரியது.

ஒரு மிகப் பெரிய மாஸ் நடிகருக்காக செய்யப்படும் படம் என்பதையும் மனதில் கொண்டு முதலில் ஓடி வரும் ரசிகர்களை ஏமாற்றாமல் அனுப்ப வேண்டுமே என்றெண்ணி கதை, திரைக்கதையை உட்காந்து செதுக்கியிருக்கலாம். இயக்குநரின் இந்த அலட்சியமே படத்தை விஜய் சேதுபதியின் பெஸ்ட் படங்களில் ஒன்று என்று சொல்லவிடாமல் செய்துவிட்டது.

பணம் சம்பாதிப்பதற்காகவே தாதா தொழில் செய்து, அதிலும் போலீஸுக்கு மாமூல் கொடுத்துவிட்டு கோடிகளில் பணம் சம்பாதிப்பதும், அந்த ஒரு கோடியை வைத்தே தியேட்டரை மீட்க நினைப்பதும், அதிலும் அவ்வளவு பெரிய மைசூர் அரண்மனை வீட்டுக்குள் போய் செட்டியாரிடம் பேரம் பேசுவதெல்லாம் இயக்குநரின் அதிகப்படியான தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.

பிரான்ஸில் போய் இப்படியெல்லாம் மிக அலட்சியமாக போலீஸுக்கு அல்வா கொடுப்பதெல்லாம் ரொம்பவே டூ மச்சான திரைக்கதை. அது ஏன் படம் முழுவதும் விஜய் சேதுபதி கத்திக் கொண்டேயிருக்கிறார் என்று தெரியவில்லை. சாதாரண வசனங்களைக்கூட அவர் கத்திக் கத்தி பேசியிருக்கும்விதம் “ஏம்பா.. என்னப்பா ஆச்சு உனக்கு..?” என்று கேட்கத்தான் வைத்தது.

இடையிடையே பல காட்சிகள் ரொம்பவே நீளமாக இருக்கின்றன. அதையெல்லாம் கச்சிதமாக நறுக்கி இறுக்கியிருந்தால் காட்சிகள் சுவாரஸ்யத்தைக் கொடுத்திருக்கும்.

ஒட்டு மொத்தமாய் விஜய் சேதுபதியின் ரசிகர்களையும் தாண்டி வெகுஜன ரசிகர்களுக்கும் பிடிப்பது போல் இன்னும் நிறைய நகைச்சுவையுடன் எடுத்திருந்தால் படம் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்..!

Our Score