full screen background image

“என் முகத்தையெல்லாம் ரசிகர்கள் ஏத்துக்குவாங்களா..?” – சரண்யாவிடம் உருகிய விஜய் சேதுபதி..!

“என் முகத்தையெல்லாம் ரசிகர்கள் ஏத்துக்குவாங்களா..?” – சரண்யாவிடம் உருகிய விஜய் சேதுபதி..!

விஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ஜுங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் பிரபல தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, ஏ.எம்.ரத்னம், நந்தகோபால், கதிரேசன், டி.சிவா, காரகட்ட பிரசாத், சி.வி.குமார், கருணாமூர்த்தி, இயக்குநர்கள் சீனு ராமசாமி, அறிவழகன், சாய் ரமணி, பிரேம், பாலாஜி தரணிதரன், ஜனநாதன், விநியோகஸ்தர்கள் திருப்பூர் சுப்ரமணியன், அருள்பதி, நடிகர்கள் நாசர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுடன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை சயீஷா, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் கோகுல், ஒளிப்பதிவாளர் டட்லீ, இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத் தொகுப்பாளர் சாபு ஜோசப், கலை இயக்குநர் மோகன், தயாரிப்பாளர் அருண் பாண்டியன், பாடலாசிரியர் லலிதானந்த், நடன இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட படக் குழுவினரும் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி படத்தின் இசைத் தகட்டை வெளியிட, படக் குழுவினரும் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

jungaa movie audio function stills

விழாவின் தொடக்கத்தில் ‘லோலிக்ரியா..’ எனத் தொடங்கும் பாடலுக்கு சிறுவர்களும், சிறுமிகளும் மேடையில் நடனமாடினர். பின்னர் படத்தின் டிரைலர் மற்றும் நான்கு பாடல் காட்சிகள் திரையிடப்பட்டன.

விழாவினை தொகுத்து வழங்கிய நடிகர் மா.கா.பா.ஆனந்த் மற்றும் நடிகை பிரியங்கா என இருவரும் படக் குழுவினரை மேடையில் ஏற்றி, ‘ஜுங்கா’வில் பணியாற்றிய அனுபவங்களை கேள்வியாக கேட்க, அதில் பணியாற்றியவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், “ஜுங்கா’ என்றால் என்ன என்பதற்கு விளக்கவுரையாக படத்தில் ஒரு காட்சியை வைத்திருக்கிறோம். அதனால் இப்போது அதைப் பற்றி விரிவாக சொல்ல முடியாது.

vijay sethupathy

இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இது டான் படமாக இருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு அப்ரோச் இருக்கிறது. எல்லா டான் படமும் ஒரே மாதிரியாக  இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் டான் கேரக்டருக்கும் ஒரு லட்சியம் இருக்கிறது. இந்த டான் கேரக்டர் கஞ்சத்தனமானவர் இல்லை. ஆனால், சிக்கனமானவர். தேவையில்லாமல் செலவு செய்பவரில்லை. அதாவது இந்த சப்ஜெக்டில்தான் நான் சிக்கனமானவராக நடித்திருக்கிறேன். ஆனால் படத்தின் பட்ஜெட் மற்றும்  பிற விசயங்களை பிரம்மாண்டமாகவே எடுத்திருக்கிறோம்.

இந்தப் படத்தில் பஞ்ச் டயலாக் இருக்கா.. இல்லையா..? என்று என்னிடம் கேட்பதைவிட ரசிகர்களைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். ஏனெனில் அதை ரசிகர்கள்தான் படத்திலிருந்து தேர்தெடுக்கிறார்கள். நாங்கள் அதனை வெறும் வசனமாக நினைத்துதான் பேசுகிறோம்.

படத்தில் என்னுடன் யோகி பாபு நடித்திருக்கிறார். அவருடைய ஒன் லைன் பஞ்ச் என்னோட ஃபேவரைட். எந்த சூழலாக இருந்தாலும் அதனை எளிதாக கையாளக் கூடிய திறமையை நன்றாக கற்றுக் கொண்டிருக்கிறார் யோகி…” என்றார்.

gokul

படத்தின் இயக்குநர் கோகுலிடம் “இது ‘பாலகுமாரா’ படத்தின் இரண்டாம் பாகமா..?” என கேட்டபோது, “நான் ஏற்கனவே செய்த படத்தை மீண்டும் இயக்குவதில்லை. இது ‘பாலகுமாரா’ படத்தின் இரண்டாம் பாகமில்லை. அதற்கும் மேல்.

இந்தப் படத்தில் பிரம்மாண்டமான காமெடி இருக்கிறது. ஆக்சனும் பிரம்மாண்டமாக இருக்கும். ‘பாலகுமாரா’ யூத் ஆடியன்சுக்காக எடுக்கப்பட்டது. ஆனால் இந்த ‘ஜுங்கா’ ஆல் ஆடியன்சுக்காக எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்தில் ஒரு காட்சியில் நடிக்கும் போது சயீஷா அளித்த ஒத்துழைப்பை மறக்க முடியாது. மைனஸ் 9 டிகிரி குளிரில் காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, குளிர் தாங்க முடியாமல் தவித்தார். அவரது உதடுகள் நீல நிறமாக மாறியது. அவரது அம்மா பதறினார். நாங்களும் உடனே மருத்துவ உதவிக்காக அவரை அனுப்பி வைத்தோம். ஆனால் அந்த கார் திரும்பவும் படப்பிடிப்பு தளத்திற்கே வந்தது. ‘இன்னும் சில ஷாட்கள் தான் மீதமிருக்கிறது. அதை நடித்துவிட்டு மருத்துவ உதவியைப் பெற்றுக் கொள்கிறேன்’ என்றார் சாயிஷா. இதை என்னால் மறக்க முடியாது…” என்றார்.

saayeesha

படத்தின் நடித்த அனுபவத்தைப் பற்றி சாயீஷாவிடம் கேட்டபோது, “நான் இப்போதுதான் தமிழ் பேசுவதற்கு கற்றுக் கொண்டு வருகிறேன். விரைவில் தமிழில் பேசுவேன்.

வெளிநாட்டில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது விஜய் சேதுபதி சார், இயக்குநர் கோகுல், தயாரிப்பாளர் அருண் பாண்டியன், ஒளிப்பதிவாளர் டட்லீ ஆகியோரின் உதவி மறக்க முடியாது…” என்றார்.

arun pandian

தயாரிப்பாளர் அருண் பாண்டியன் பேசும்போது, “நடிகர் விஜய் சேதுபதி எதையும் எதிர்பார்க்காதவர். இவரை போன்ற ஒரு மனிதரை என்னுடைய நாற்பது ஆண்டு கால திரையுலக பயணத்தில் கண்டதில்லை. படத்தைப் பற்றி இயக்குநர் என்னிடம் என்ன சொன்னாரோ அதை அப்படியே எடுத்துக் கொடுத்திருக்கிறார். பெரிய பட்ஜெட்டில் உருவான படம்…” என்றார்.

saranya ponvannan

நடிகை சரண்யா பொன்வண்ணன் பேசும்போது, “நடிகர் விஜய் சேதுபதியுடன் நான் ‘தென்மேற்கு பருவக் காற்று’ படத்தில் நடிக்கும்போது, என்னிடம் வந்து ‘இந்த முகமெல்லாம் ரசிகர்களுக்கு பிடிக்குமா அம்மா…?’ என கேட்பார். அப்போது ‘உனக்கென்னப்பா குறை. பார்க்க லட்சணமாக இருக்கிறாய். பெரிய ஆளா வருவாய்’ என்று வாழ்த்தினேன். ஆனால் இன்று அவருடைய தயாரிப்பில் நடித்து, அவரிடமிருந்து சம்பளத்தை வாங்கியிருக்கிறேன்.

ஒரு தாய் தன்னுடைய மகனின் வளர்ச்சியை எப்படி பெருமிதமாக பார்த்து கர்வப்பட்டு கொள்வாரோ, அதேபோல் விஜய் சேதுபதியின் வளர்ச்சியை நான் பார்க்கிறேன். அவர் மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்…” என்றார்.

Our Score