full screen background image

ஜூலி-2 – சினிமா விமர்சனம்

ஜூலி-2 – சினிமா விமர்சனம்

TRIUMPH TALKIES LLP நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளரும், இயக்குநரும், முன்னாள் மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் தலைவருமான பக்லஜ் நிகாலனி, விஜய் நாயருடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

ராய் லட்சுமி படத்தின் நாயகி கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும், ரத்தி அக்னிகோத்ரி, ரவி கிஷன், ஆத்திய ஸ்ரீவட்சவா, பங்கஜ் திருப்தி, யூரிசூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – விஜூ ஷா, ஒளிப்பதிவு – சமீர் ரெட்டி, இயக்கம் – தீபக் ஷிவ்தாசனி.

சினிமா என்பதே ஒரு மாயவுலகம்தான். அதில் ஜெயிப்பதென்பது அனைவராலும் முடியாதது. எத்தனையோ திறமைசாலிகளை அது உயர்த்தியிருக்கிறது. எத்தனையோ திறமைசாலிகளை குப்புறத் தள்ளியிருக்கிறது. இந்த சினிமாவுலகம் யாரை, எப்போது, எங்கே நிறுத்தும் என்று யாருக்கும் தெரியாது.

சாதாரண நடிகையாக திரையுலகில் நுழையும் ஒரு பெண்ணை ஒரே படத்தின் மூலம்,  இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே உச்சாணிக் கொம்பில் கொண்டு போய் வைக்கும். அது கொடுக்கும் பணம், புகழ், பெயர்… இதனால் கிடைக்கும் அந்தஸ்து இதையெல்லாம் அனுபவிக்கத்தான் சினிமாவுலகம் என்னும் இந்த மாயவுலகத்திற்குள் கூட்டம், கூட்டமாக பெண்கள் வருகிறார்கள்.

ஒரு சிலருக்கு வாய்ப்புகள் சரியாகவே கிடைத்து, வெற்றிகளை அடைந்து புகழ் உச்சிக்குப் போகிறார்கள். வேறு சிலருக்கு இதற்கு நேரெதிராக நடந்து அவர்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது.

உயரப் பறக்கும் சில சூப்பர் ஸ்டாரிணிகளின் சினிமா வாழ்க்கை ஜொலித்தாலும், அக வாழ்க்கை என்னவோ இருள் சூழ்ந்ததாகத்தான் இருக்கிறது. எத்தனையோ நடிகைகள் திரையுலகில் உயர்வதற்கும், தங்களது இருப்பிடத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் பல இழப்புகளையும் தாண்டித்தான் வந்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது பாலியல் வேட்கை.

‘கேஸ்டிங் கவுச்’ எனப்படும் ‘வாய்ப்புக்காக படுக்கையறை’ என்னும் சொல் சமீப காலமாக இந்திய சினிமாவில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. தயாரிப்பாளர் அல்லது பைனான்ஸியர், அல்லது இயக்குநர்… இவர்களில் ஒருவருக்கோ அல்லது மூவருக்குமோ ‘கம்பெனி’ கொடுத்தால்தான் படத்தின் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்கிற அவலம் நிறைய நடிகைகளுக்கு நடந்திருக்கிறது.

இந்தக் கொடுமையை சந்தித்த நடிகைகள் பலரும் இப்போதுதான் தைரியமாக, பகிரங்கமாக போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியொரு எதிர் நீச்சல் போட்டு வளர்ந்து வந்திருக்கும் ‘ஜூலி’ என்னும் நடிகையின் வாழ்க்கைதான் இந்த ‘ஜூலி-2’ திரைப்படம்.

இப்போது சூப்பர் ஸ்டாரிணியாக இருக்கும் ஜூலி, தற்போது ராஜஸ்தானில் ஒரு ராஜ பரம்பரையில் பிறந்த ‘சிவகாமி’ என்ற பெண்ணின் வாழ்க்கைக் கதையில் ‘சிவகாமி’யாகவே நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் வேளையில் தன் பிறந்த நாளன்று தனது ரசிகர்களை சந்திக்கிறார். அப்போது இதுவரையிலும் வெளியில் சொல்லாத, பலராலும் சொல்ல முடியாத.. தனது வாழ்க்கை ரகசியங்கள் பலவற்றை பகிரங்கமாக அந்த மேடையில் சொல்லி ஒட்டு மொத்த சினிமா துறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்.

“என்னுடைய தந்தை யாரென்றே எனக்குத் தெரியாது. அவரை நான் பார்த்ததுகூட இல்லை. என் தாய் மற்றும் வளர்ப்புத் தந்தையுடன் வாழ்ந்தேன். என்னுடைய 13-வது வயதில் என்னுடைய தாய் மாமனால் நான் கற்பழிக்கப்பட்டேன். தொடர்ந்து இந்த திரைத்துறைக்குள்ளே நுழைவதற்காக நான் நிறையவே இழந்தேன். இத்தனை இழப்புகளுக்கு பின்புதான் சூப்பர் ஸ்டாரிணியாக உங்கள் முன் நிற்கிறேன்..” என்கிறார் ஜூலி. ரசிகர்களும், நண்பர்களும் உறைந்து போகிறார்கள்.

இதற்கு அடுத்த நாள் தன்னுடைய பெண் மேலாளரான ரத்தி அக்னிகோத்திரியுடன் ஒரு ஜூவல்லரி கடைக்குச் செல்கிறார் ஜூலி. அங்கே திடீரென்று வரும் சில துப்பாக்கி ஏந்திய முகமூடி மனிதர்கள், நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு போகிறபோக்கில் ஜூலியையும் சுட்டுவிட்டுத் தப்பித்துப் போகிறார்கள்.

ஜூலி ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். கோமாவில் ஆழ்ந்திருக்கும் ஜூலியை விசாரிக்க முடியாத சூழல். போலீஸ் உதவி கமிஷனர் ஸ்ரீவத்சவா இந்தக் கேஸை விசாரிக்கிறார்.

கிடைத்த துப்புக்களை வைத்து திருடர்களை விரட்டிப் பிடிக்கிறார். அவர்களை விசாரித்ததில் ஜூலியை கொலை செய்வதுதான் அவர்களது நோக்கம் என்றும், கொள்ளையடிப்பது அவர்களது இரண்டாம்பட்சமான நடிவடிக்கைகள்தான் என்பதையும் அறிகிறார்.

இதனால் ஜூலியை விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகும் ஸ்ரீவத்சவா, ஜூலிக்கு இதுநாள்வரையிலும் எல்லாமுமாக இருக்கும் ரத்தியிடம் ஜூலி பற்றி விசாரிக்கிறார்.

இப்போது ரத்தி ஜூலியின் கடந்த கால வாழ்க்கையைச் சொல்கிறார். இங்கேயிருந்துதான் கதை வேறு பக்கம் திரும்புகிறது.

ஜூலி தான் ஒரு சினிமா நடிகையாக வேண்டும் என்கிற கனவுடன் தனது புகைப்படங்களை எடுத்துக் கொண்டு சினிமா கம்பெனிகளில் ஏறி, இறங்கிக் கொண்டிருக்கிறார். அனைவருமே அவரைத்தான் கேட்கிறார்களே ஒழிய, வாய்ப்புத் தரவில்லை.

இப்படியொரு சூழலில் ஜூலியின் வளர்ப்புத் தந்தை சினிமா துறையில் இருக்கும் தனது நண்பருடன் இணக்கமாக போகும்படி ஜூலியை கட்டாயப்படுத்துகிறார். இதை ஜூலி ஏற்க மறுக்க, அவளை மட்டும் வீட்டைவிட்டு வெளியில் அனுப்புகிறார்.

ஜூலியின் அம்மாவுக்கு மேலும் இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால் அவளால் ஜூலிக்கு ஆதரவு தர முடியவில்லை. ஜூலி தனது குடும்பத் தோழியான ரத்தியுடன் வந்து ஐக்கியமாகிறார். ஏற்கெனவே பல தடவை, பல கம்பெனிகளுக்கு படையெடுத்து தனக்கு நடிக்க சான்ஸ் கேட்டுக் கொண்டிருந்த ஜூலியை, இப்போது வேறொரு கம்பெனிக்கு அழைத்துச் செல்கிறார் ரத்தி.

அங்கே ஜூலிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. பெரும் மகிழ்வோடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது அந்தப் படத்திற்கு பைனான்ஸ் செய்திருக்கும் நபர் தன்னுடன் பாரீஸுக்கு வந்து ‘கம்பெனி’ கொடுக்கும்படி ஜூலியை அழைக்கிறார். அந்தப் படத்தின் இயக்குநர் இதை எதிர்த்து பைனான்ஸியருக்கு பதிலடி கொடுக்க.. கோபமாகும் பைனான்ஸியர் படத்தையே நிறுத்திவிடுகிறார்.

பட்டென்று உயரப் போய், சட்டென்று கீழே விழுந்த கதையாய் ஜூலியின் வாழ்க்கை மாறுகிறது. கொஞ்ச நாட்களில் கையிருப்புப் பணம் முற்றிலும் கரைந்து போக.. இப்போதுதான் நிழல் உலகத்தை காண்கிறாள் ஜூலி. இனிமேலும் இப்படியே வைராக்கியமாக இருந்தால் எதுவுமே நடக்காது என்பதை யோசித்த ஜூலி சட்டென்று தன் பாதையை மாற்றிக் கொள்ள முடிவெடுக்கிறாள்.

ஏற்கெனவே சினிமா வாய்ப்புக்காக போன இடத்தில் தன்னைப் படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரை தேடிச் சென்று பார்க்கிறாள். அவருடன் விரும்பி உறவு வைத்துக் கொள்கிறாள். இதையடுத்து அடுத்தடுத்து படங்கள் ஜூலிக்கு கிடைக்கின்றன. ஓவர் நைட்டில் ஹீரோயினாகிறாள் ஜூலி.

நடிப்பு கேரியரின் ஒரு கட்டத்தில் அப்போதைய பெரிய ஸ்டாரான ரவிக்குமார் என்னும் ரவி கிஷனுடன் நடிக்க ஒப்பந்தமாகிறாள் ஜூலி. ரவி கிஷன் பேசிப் பேசியே ஜூலியை மடக்குகிறார். அவருடன் ஒன்றிணையும் ஜூலி உண்மையாகவே ரவியை காதலிக்கிறாள். ஆனால் ரவியோ தன் ‘வேலை’யை மட்டும் முடித்துவிட்டு, துபாயை சேர்ந்த ஒரு சர்வதேச கிரிமினல் மூலமாக ஜூலியை மடக்கி தந்திரமாக அவளைத் தன்னிடமிருந்து தள்ளிப் போக வைக்கிறார்.

எதேச்சையாக துபாயில் ஒரு கலை நிகழ்ச்சிக்காக போன இடத்தில் அந்த துபாய் பெரும் புள்ளியை சந்திக்கும் ஜூலி, ரவி கிஷன்தான் தன்னைத் திட்டமிட்டு வெளியேற்றியிருக்கிறார் என்பதை அறிந்து வேதனையடைகிறாள். ஆனாலும் இந்தத் தகவலை அறிந்து கொள்ள அவளும் அந்தத் துபாய் புள்ளிக்கு ‘சேவை’ செய்ய வேண்டியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து ஜூலி திரும்பவும் திரையுலகில் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு கிரிக்கெட் பிளேயருடன் மீண்டும் ஒரு காதல் பிறக்கிறது. இந்தக் காதலும் வழக்கம்போல படுக்கையில் வந்து முடிகிறது.

ஜூலியுடன் படுக்கையிலேயே கிரிக்கெட் ‘விளையாடிப்’ பழகும் அந்த கிரிக்கெட் வீரன், கடைசியாக “டக்ளஸ் லீக் வொர்த் அடிப்படையில் நாம் இருவரும் பிரிந்துவிடுவோம். சேர்வது என்பது முடியாது” என்று சொல்ல ஜூலிக்கு இது இன்னொரு காதல் தோல்வியாகிறது.

“இந்த நேரத்தில்தான் சிவகாமியின் வாழ்க்கை சரிதக் கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இப்போது ஜூலி தொடர்ச்சியாக அதில் நடித்து வந்தாள்…” என்கிறார் ரத்தி.

ஜூலியை அந்தக் கும்பல் குறி வைத்த காரணத்தை தேடி ஸ்ரீவத்சவா அலைய.. அது ராஜஸ்தானத்து அரண்மனையில், ‘சிவகாமி’ படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளரின் சமஸ்தானத்தில் போய் முடிகிறது. ஜூலியை கொலை செய்ய முயன்றது யார்..? எதற்காக முயன்றார்கள்..? ஜூலியின் கதி என்ன ஆனது..? என்பதுதான் ’ஜூலி-2’ படத்தின் திரைக்கதை.

2004-ம் ஆண்டு நேகா தூபியா நடிப்பில் இதே இயக்குநரான தீபக் ஷிவ்தாசனியின் இயக்கத்தில் வெளியான ‘ஜூலி’ படத்தின் அடுத்த பாகம்தான் இது. ஆனால் முதல் பாகத்திற்கு சம்பந்தமேயில்லாத முற்றிலும் வேறுபட்ட கதையில் இந்த ‘ஜூலி-2’ திரைப்படம் வெளிவந்திருக்கிறது.

ஜூலி கேரக்டரில் லட்சுமி ராய் வாழ்ந்திருக்கிறார். இன்னொரு மொழியில் சொல்லப் போனால் ‘காட்டியிருக்கிறார்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் அறிமுகமான லட்சுமி ராய், தமிழில் நடிப்பில் பெயர் சொல்லும் அளவுக்கு நடித்ததில்லை. ஆனால் ‘மங்காத்தா’, ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ போன்ற ஹிட்டித்த படங்களில் இருந்திருக்கிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு ரவுண்ட் அடித்தவர், இப்போது இந்த ‘ஜூலி-2’ படம் மூலமாக பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

பாலிவுட்டில் கவர்ச்சியில் கலக்கினால் மட்டுமே தன் வயதுக்கு ஒரு ரவுண்டாவது வர முடியும் என்று நினைத்துதான் இந்தப் படத்தை லட்சுமி ராய் ஒத்துக் கொண்டிருக்கிறார் போலும்..!

தன்னுடைய சினிமா கேரியரிலேயே உச்சக்கட்ட கவர்ச்சியை இந்தப் படத்தில்தான் காண்பித்திருக்கிறார் லட்சுமி ராய். சுருக்கமாய் சொன்னால், இனிமேல் காட்டுவதற்கு லட்சுமி ராயிடம் ஏதுமில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

இரண்டாவது பாடல் காட்சியில் லட்சுமி ராய் ஆடும் ஆட்டமும், போடும் குலுக்கலும் அவரது உடம்பாலேயே தாங்க முடியவில்லை. ரசிகர்களால் எப்படி தாங்க முடியும்..?

லட்சுமி ராயின் எண்ணவோட்டத்திற்கு ஏற்றாற்போல் ஒரு நடிகையின் கதையாகவே இந்தப் படமும் அமைந்துவிட்டதால், இயக்குநரின் விருப்பத்தையும் தாண்டி, தன்னுடைய விருப்பத்திற்கிணங்கவும் கவர்ச்சியில் 90 சதவிகிதம் தள்ளுபடி செய்து நடித்திருக்கிறார் லட்சுமி ராய்.

பிரெஞ்சு கிஸ், உடல் உறவுக் காட்சிகள், போர்னோ டைப் உறவுகள் என்று எதையும் விட்டுவைக்காமல் அத்தனைக்கும் ஆசைப்படு என்பதை போல நடித்திருக்கிறார் லட்சுமி.

அதே சமயம் நடிப்புக்குத் தீனி போடுவது போல சில காட்சிகளும் இருக்கின்றன. போகின்ற இடங்களிலெல்லாம் படுக்க கூப்பிடுகிறார்களே என்கிற வெறுப்புடன் தயாரிப்பாளரை முறைத்துப் பார்த்து உதாசீனப்படுத்தும் முதல் காட்சியிலேயே நடிப்பை கொட்டியிருக்கிறார் லட்சுமி ராய்.

தன்னுடைய வளர்ப்புத் தந்தையுடன் மோதும் போதும், தனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று ரத்தியிடம் புலம்பும் போதும், தன்னுடைய வாழ்க்கை சரிதத்தை மைக்கில் எந்தவித சிம்பதியையும் ஏற்படுத்தாத அளவுக்கு பேசும்போதும் தனக்கும் நடிப்பு நன்றாகவே வரும் என்பதை நிரூபித்திருக்கிறார் லட்சுமி ராய்.

தன்னைச் சுற்றியிருக்கும் அத்தனை ஆண்களும் தன் உடல் மீதே கவனம் வைத்திருக்கின்றனர் என்பதை உணர்ந்து மனம் உடைந்து அழுகும் காட்சியில் படத்தின் பெயரும், தன்மையும் ஒரு நொடிப் பொழுதில் சட்டென நமக்கே மறந்து போகிறது.  

1980-களில் தமிழ், இந்தி சினிமாவில் கதாநாயகியாக கலக்கிய ‘புதிய வார்ப்புகள்’ ரதி, இந்தப் படத்தில் ஜூலியின் வளர்ப்புத் தாயாகவும், அவரை வழி நடத்தும் மேனேஜராகவும் நடித்திருக்கிறார். அவரது அந்த குண்டு முகம் அப்படியே ஸ்கிரீனில் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.  

ஜூலியை முதல்முறையாக ஹோட்டலில் பார்த்து பேசி படுக்கைக்கு நேரடியாக அழைக்கும் அந்தத் தயாரிப்பாளர் அட்டகாசமான நடிப்பைக் கொட்டியிருக்கிறார். மிக யதார்த்தமான டயலாக் டெலிவரியுடன், அட்சரமான உடல் மொழியுடன் வில்லத்தனத்தை தனது முகத்திலேயே காட்டியிருக்கிறார்.

ஜூலி தனது கன்னித் தன்மையை இழக்க அவரிடத்தில் வந்து நிற்கும்போது அவருடைய ரியாக்ஷனும், பேச்சும் அந்த இடத்திலும் நகைச்சுவையை வரவழைத்திருக்கிறது.

அஸிஸ்டெண்ட் கமிஷனராக நடித்திருக்கும் ஸ்ரீவத்சவா போலீஸ் யூனிபார்மே போடாமல் கச்சிதமாக நடித்திருக்கிறார். இயக்குநரை விசாரிக்க வந்த இடத்தில் தயாரிப்பு நிர்வாகி வந்து லந்து செய்து கிண்டலடிக்க.. அவனை ஓங்கி ஒரு அறை அறைந்துவிட்டுப் போகுமிடத்தில் ‘சபாஷ்’ என்று கை தட்டவும் வைத்திருக்கிறார்.

ரவிக்குமார் என்னும் சூப்பர் ஸ்டாராக நடித்திருக்கும் ரவி கிஷனும், கிரிக்கெட் பிளேயராக நடித்த தேவ் கில்லும் தங்களது கேரக்டருக்கு பாதகம் செய்யாமல் நடித்திருக்கிறார்கள். ரவி கிஷன் படம் எது பற்றியது என்று தெரிந்தும், தனக்கும், இந்தப் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதை உணர்ந்தும் நடித்திருக்கிறார்.  

ராய் லட்சுமியின் அழகை, கிளாமரை… சிந்தாமல் சிதறாமல் அப்படியே கேமராவில் அள்ளி தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சமீர் ரெட்டி. பாடல் காட்சிகளை சொட்டுச் சொட்டாய் ரசனையாய் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.  துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ஒளிப்பதிவாளரின் வர்ணஜாலத்தால், படம் மிகப் பெரிய பட்ஜெட் படம் போலவே காட்சியளிக்கிறது.

திரைக்கதை, சில காட்சியமைப்புகள், பல கேமிரா கோணங்கள், இயக்கம் என்று பலவற்றிலும் இந்தப் படம் பாலிவுட் படங்களிலேயே வித்தியாசமானது என்பதை காட்ட முனைந்திருக்கிறது.

இதேபோல், இன்றைய இளசுகளுக்கு ஏற்றவாறு துள்ளலான இசையை வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் விஜூ ஷா. ‘கபி ஜோக்டா லக்டா ஹை’ என்கிற பாடலிலும் ‘கர்மா கர்மா’ என்கிற பாடலிலும் நடனத்தில் கொளுத்தியிருக்கிறார்கள். ஆட்டமும், பாடலும், இசையும், ஒளிப்பதிவும், இயக்கமும் படு ஜோர்..!

கலை இயக்குநரின் கைவண்ணமும் பாராட்டுக்குரியது. ஜூலியின் வீடு, படப்பிடிப்புத் தளங்கள், பாடல் காட்சிகளில் இருந்த வண்ணங்கள், ராஜஸ்தானத்து அரண்மனை என்று பலவற்றிலும் கலை இயக்கம் சிறப்பாகவே இருந்தது. இதேபோல் உடை வடிவமைப்பாளரையும் வெகுவாகப் பாராட்ட வேண்டும். ‘ஆள் பாதி; ஆடை பாதி’ என்பார்களே அதேபோல், லட்சுமி ராய் அணிந்திருந்த ஆடைகளே குறைவு என்றாலும் அதையே ரசனையாக வடிவமைத்திருக்கிறார்கள்.

“இந்தப் படம் ஒரு இந்திய திரைப்பட நடிகையின் உண்மையான வாழ்க்கைக் கதை. அவர் யாரென்று நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்…” என்று கடைசியாக நடைபெற்ற ‘ஜூலி-2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கண் சிமிட்டி சொல்லிவிட்டுப் போனார் நடிகை லட்சுமி ராய்.

படத்தைப் பார்க்கத் துவங்கிய 10-வது நிமிடத்திலேயே அது புரிந்துவிட்டது. நடிகை நக்மாவை இமிடேட் செய்துதான் லட்சுமி ராய், ‘ஜூலி’ கேரக்டரில் நடிக்கிறார் என்பது.

இது நக்மாவின் சொந்தக் கதையா என்று தெரியாது. சொந்தக் கதை என்றால் நிச்சயமாக நக்மா லட்சுமி ராயை சும்மாவிட மாட்டார். ஏனென்றால் படத்தில் ஜூலி தன் தாய் மாமனால் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார். மேலும், ஜூலியின் பல படுக்கையறை காதல், கசாமுசாக்களும் அப்பட்டமாய் காட்டப்பட்டுள்ளது. இது நிச்சயமாக நக்மாவால் ஏற்க முடியாததாகத்தான் இருக்கும். காரணம், நக்மா இப்போது அகில இந்திய காங்கிரஸ் என்னும் தேசியக் கட்சியில் தேசிய அளவில் பொறுப்பில் இருப்பவர்.

ஆனால், உண்மையில் நக்மாவின் திரையுலக வாழ்க்கையில் பெரிதும் ஒத்துப் போகிறது இத்திரைப்படம். நக்மாவின் தாயும், தந்தையும் நக்மா சிறு வயதில் குழந்தையாக இருந்தபோதே பிரிந்துவிட்டார்கள். நக்மாவின் தந்தையான அரவிந்த் பிரதாப்சிங் மொரார்ஜி ஜவுளி, விவசாயம், மருந்து தயாரிப்பு, ஏற்றுமதி, இறக்குமதி என்று பல தொழில்களைச் செய்து வந்த குஜராத்தின் மிகப் பெரிய செல்வந்தவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

1969-ல் நக்மாவின் தாயும், தந்தையும் திருமணம் செய்ய… 1970-ல் நக்மா பிறக்க.. 1973-ல் நக்மாவின் தாயும், தந்தையும் முறைப்படி விவகாரத்து வாங்கி பிரிந்திருக்கிறார்கள். இதன் பிறகு 1975-ல் சந்தன் சஹானா என்ற மும்பையைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார் நக்மாவின் தாயான சீமா. இவர் மூலமாக நக்மாவுக்கு ஒரு தம்பியும், ஜோதிகா மற்றும் ரோஷிணி என்ற இரண்டு தங்கைகளும் உண்டு.

இதேபோல் நக்மாவின் தந்தையான மொரார்ஜியும் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனியே போக அவர் மூலமாக நக்மாவுக்கு இரண்டு தம்பிகளும் உண்டு.

2005-ம் ஆண்டு நக்மாவின் தந்தை மொரார்ஜி இறந்த பின்பு அவரது குடும்பச் சொத்துக்களை பிரித்ததில் நக்மாவுக்கு மட்டுமே 250 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் கிடைத்ததாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின.

படத்தில் நக்மாவின் தாய் இன்னொருவரை திருமணம் செய்திருக்க அவர் மூலமாக இரண்டு பெண் குழந்தைகள் இருப்பது போலவும் காட்டியிருக்கிறார்கள்.

நக்மா 1990-ல் ‘Baghi A Rebel For Love’ என்ற ஹிந்திப் படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்துதான் திரையுலகத்தில் கால் பதித்தார். இதன் பின்பு மின்னல் வேகத்தில் தெலுங்கு, தமிழ் என்று வலம் வர ஆரம்பித்தார்.

தமிழில் அவர் நடிக்கத் துவங்கியவுடனேயே நடிகர் சரத்குமாருடன் மிக நெருங்கிய நட்பில் இருந்தது கன்னியாகுமரிவரையிலும் தெரிந்த விஷயம். நக்மாவுக்காகவே சரத்குமார் தனது மனைவி சாயாவை விவகாரத்து செய்துவிட்டு காத்திருக்கிறார் என்றும் விரைவில் நக்மாவை திருமணம் செய்யப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் திடீரென்று நக்மா சென்னையை மறந்துவிட்டு மும்பைக்கே திரும்பிச் சென்று செட்டிலானார்.

நக்மாவின் தங்கையான ஜோதிகா அடுத்து தமிழ்த் திரையுலகை கலக்கிக் கொண்டிருந்த நேரத்தில், நக்மா சென்னைக்கே வராமல் இருந்தது அவருக்கு விடுக்கப்பட்ட ஆசிட் வீச்சு மிரட்டலால்தான் என்று எழுதாத தமிழ் மீடியாக்களே கிடையாது. இதுவும் இந்த ‘ஜூலி-2’ படத்தில் பதிவாகியிருக்கிறது.

சரத்குமார் வேடத்திற்கு படத்தில் ‘ரவிக்குமார்’ என்று பெயர். இந்தக் கேரக்டரில் போஜ்பூரியின் சூப்பர் ஸ்டார் நடிகரான ரவி கிஷனை நடிக்க வைத்திருக்கிறார்கள்.

இதில் இன்னொரு சுவாரஸ்யம். நக்மாவின் நிஜ வாழ்க்கையில் கடைசியான அவரது காதலாக இருந்து வந்த போஜ்பூரி நடிகர் ரவி கிஷனையே முதல் காதலனான சரத்குமாரின் கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறார்கள். என்னவொரு திட்டமிடல்..? சூப்பர் இயக்குநரே..!

‘இன்னும் நான்கு மணி நேரத்தில் ஊரை காலி செய்யாவிட்டால் முகத்தில் ஆசிடை ஊற்றிவிடுவேன்’ என்கிற மிரட்டலால்தான் படத்தில் ரவி கிஷனை விட்டு விலகுகிறார் ஜூலி. இங்கே சென்னையில் நக்மாவின் வாழ்க்கையில் என்ன நடந்ததோ… யாருக்குத் தெரியும்..?

சரத்குமாருடனான காதல் தோல்வியில் முடிய… மும்பைக்கு போய் செட்டிலான நக்மா கொஞ்ச நாட்களிலேயே மீண்டும் மீடியாக்களில் பெரிதாக அடிபட்டார் நக்மா. அது அப்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியுடன் அவருக்கு ஏற்பட்ட இன்னொரு காதலால்.

அப்போதே கங்குலிக்கு கல்யாணமாகி குழந்தைகளும் இருந்தன. இருந்தாலும் இந்த காதல் ஜோடிகள் ஊர், ஊராய் போய் போட்டிகள் நடைபெறும் இடங்களிலெல்லாம் காலரியில் அமர்ந்து… மைதானத்தில் இருந்து கேலரிக்கும், கேலரியில் இருந்து மைதானத்திற்கும் பிளையிங் கிஸ் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்து கொண்டிருந்தது.

முத்தாய்ப்பாக நக்மாவும், சவுரவ் கங்குலியும் காளஹஸ்தி கோவிலுக்கு ஒன்றாக வந்து வேண்டுதல் நடத்தியபோது, இந்தியாவின் ஒட்டு மொத்த மீடியாவுலகமும் இதனை நேரடி ஒளிபரப்பு செய்தன.

இதற்காக வங்க மொழி மீடியாக்கள் கங்குலியை நார், நாராய் கிழித்தன. கங்குலியின் மனைவியான டோனா பெரிதும் அமைதி காத்தார். தினமும் கொல்கத்தா காளி கோவிலுக்கு போய் பூஜை செய்து தனது கணவரைத் திருப்பிக் கொடு என்று வேண்டிக் கொண்டிருந்தார்.

அவருடைய வேண்டுதலும் பலித்தது. இரண்டே மாதத்தில் பேக் டூ தி பெவிலியனாக ஆறு மாதங்கள் கழித்து தனது கொல்கத்தா வீட்டிற்கு நக்மாவைத் தேடிப் போகும்போது எடுத்துச் சென்ற அதே இரண்டு சூட்கேஸ்களோடு நல்ல பையனாக திரும்பவும் வந்து சேர்ந்தார் சவுரவ் கங்குலி.

இந்த ‘ஜூலி-2’ படத்திலும் இதேபோல் கிரிக்கெட் பிளேயர் தேவ், ஜூலியை பந்தாடுகிறார். படுக்கையிலும் ஜூலியுடன் கிரிக்கெட் விளையாடுகிறார். வெறித்தனமாய் முத்தமிட்டு வெறியூட்டுகிறார். ஆனால் கடைசியில், ‘உன்கூட நான் வெளில வந்தால் என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?’ என்று சொல்லிக் கை கழுவிவிட்டு போகிறார். இது நக்மாவின் வாழ்க்கையில் அப்படியே உல்டாவாகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறோம்.

நக்மாதான் கங்குலியைவிட்டு விலகினார் என்கிறது மும்பை மீடியா வட்டாரம்.

கங்குலியும், நக்மாவும் மும்பையில் ஒரே பிளாட்டில் தங்கியிருந்தார்கள். டோனா கங்குலியின் அழுகையைத் தாங்கிக் கொள்ள முடியாத கொல்கத்தாவின் முகர்ஜிக்களும், டாட்டாக்களும் மும்பையின் பெரிய, பெரிய ஆட்களுக்கு போன் போட்டு அழுத்தம் கொடுக்க..

மும்பை வாலாக்களே நக்மாவுக்கு அட்வைஸ் மேல் அட்வைஸ் செய்து, ‘ஒரு நல்ல குடும்பத்தைக் கெடுத்திராதம்மா’ என்று நைச்சியமாகவும், சில போன் கால்கள் மூலமாக மிரட்டலாகவும் அழுத்தம் கொடுத்ததினால்தான் நக்மா தானாகவே கங்குலியைவிட்டு விலகியதாக அப்போதைய மும்பை பத்திரிகைகள் பக்கம், பக்கமாக எழுதித் தள்ளின.

அதுவரையிலுமான நக்மாவின் சினிமா வாழ்க்கையை ஸ்கிரீனில் காட்டியவர்கள் கடைசியாக போஜ்பூரியின் சூப்பர் ஸ்டாரான ரவி கிஷனின் வாழ்க்கையிலும் நக்மா புகுந்து அங்கே ஆளே இல்லாத கிரவுண்டில் அவருடன் கோலிக் குண்டு விளையாடியதை மட்டும் தொடாமல் போயிருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை.

‘அதுதான் சரத்குமார் கேரக்டரில் அவரையே நடிக்க வைத்துவிட்டோமே. இது போதாதா?’ என்று நினைத்துவிட்டார்கள் போலும்.. பரவாயில்லை. இத்தோடு விட்டார்களே என்று நாமும் சந்தோஷப்பட வேண்டியதுதான்.

பெயர் சொல்லாமல், பூடகமாகச் சொல்லி, யூகமாக நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள் என்று பேசி தன்னுடைய படத்துக்கு ஓசியில் விளம்பரம் சம்பாதித்திருக்கிறார் லட்சுமி ராய். இந்தக் குயுக்தி புத்தியை தன் சொந்த வாழ்க்கையிலும் காண்பித்து நன்றாக இருக்க லட்சுமி ராயை பெரிதும் வாழ்த்துகிறோம்.

“சரி.. நக்மாவின் வாழ்க்கையைக் காட்டியாகிவிட்டது. மேடம்.. உங்க.. அதாவது ராய் லட்சுமி என்னும் லட்சுமி ராயின் வாழ்க்கை வரலாற்றை ஜூலி-3-யாக எடுப்பீர்களா…?” என்ற கேள்விக்கு லட்சுமி ராயிடம் பதிலை எதிர்பார்க்கிறோம்.

ஏனெனில் தமிழில் தனது முதல் படமான ‘கற்க கசடற’ படத்திலிருந்தே நக்மா போலவே சர்ச்சையைக் கிளப்பி வந்த லட்சுமி ராய், தனக்கு இதுவரையிலும் ஐந்து காதலர்கள் வந்து அனைவருமே ஓடிப் போய்விட்டார்கள் என்று கடைசியான பத்திரிகையாளர் சந்திப்பில் மனம் குமைந்து பேட்டியளித்திருந்தார்.

நக்மாவுக்காவது மூன்று காதல்கள்.. ஆனால், லட்சுமி ராய்க்கு ஐந்து காதல்கள்.. என்று இருக்கும்போது இதனையே ‘ஜூலி-3’ படத்தில் வைத்தால் எத்தனை சுவையான திரைக்கதைகள் கிடைக்கும்..?

இயக்குநர் தீபக் ஷிவதாசனி இதனை மனதில் கொண்டு அடுத்த பாகத்தை லட்சுமி ராயின் வாழ்க்கைக் கதையிலிருந்து திரைக்கதை அமைத்து உருவாக்கினால் நன்றாகவே வசூலை அள்ளலாம்.

ஒரு வாழ்க்கை சரிதக் கதையில் பார்வையாளர்களைக் கவரும் அளவுக்கு கிசுகிசுக்களின் அடிப்படையில் திரைக்கதையை அமைத்துவிட்டு மீதி பாதியில் கொலை, சஸ்பென்ஸாக கொண்டு சென்றிருக்கிறார்.

ஜூலியின் மரணத்திற்கு யார் காரணம் என்கிற அந்த டிவிஸ்ட்டும், அதை உதவி கமிஷனர் கண்டுபிடிக்கும் ஸ்டைலும் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை என்பது மட்டும் உண்மை. இருந்தாலும், கடைசிவரையிலும் படத்தை கவனமாக பார்க்க வைத்துவிட்டார் இயக்குநர்.

இந்தப் படம் எந்தவிதத்திலும் நடிகை என்பதாலோ பெண் என்பதாலோ ஜூலி மீதான ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தாது என்பது மட்டும் உண்மை. ஏனெனில் தானே விரும்பி படுக்கையை பகிர்ந்து கொண்டுதான் ஜூலி, தனது பட வாய்ப்புகளை பெற்று சூப்பர் ஸ்டாரினியாகிறார். பின்பு இதில் என்ன பச்சாபதம் அவர் மீது வர வேண்டியிருக்கிறது..?

பெண்களுக்கு இந்த உலகத்தில் வாழ்வதற்கு இந்த ஒரு துறைதான் இருக்கிறதா..? அல்லது சினிமாவில் அனைத்துத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் இப்படியா இருக்கிறார்கள்..? ஒரு துறையில் ஐந்து சதவிகிதம்பேராவது இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இது உலக நியதி.

தவறுக்கு ஒத்துப் போக விரும்பாதவர்கள் ஒதுங்கிப் போய் நல்லவர்களை தேடி அவர்கள் மூலமாக வாழ்க்கையைத் தேடுவதுதான் சிறந்தது. ஜூலிக்கு இந்த அறிவுரையைச் சொல்ல யாருமில்லை என்றால் அதற்கு இந்தச் பொதுவுலகமும், சினிமாவுலகமும் எந்தவித பொறுப்பும் ஏற்க முடியாது.

திரைப்பட துறையில் நுழைய விரும்பும் பெண்களுக்கு இங்கே இப்படியும் ஒரு சூழல் இருக்கிறது என்பதை காட்டுவதாகவே, இந்தப் படத்தை எடுத்துக் கொண்டால், இயக்குநர் தீபக்கிற்கு நிச்சயமாக நாம் ஒரு நன்றியை சொல்லியாக வேண்டும்.

Our Score