இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார்.
படத்தில் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷின் தங்கை மகனான வருண் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ராக்கே நடித்துள்ளார். கிருஷ்ணா வில்லனாக நடித்துள்ளார். மேலும் கிட்டி, விசித்ரா, மன்சூரலிகான், திவ்யதர்ஷினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – எஸ்.ஆர்.கதிர், இசை – கார்த்திக், படத் தொகுப்பு – ஆண்டனி, கலை இயக்கம் – குமார் ஞானப்பன், உடைகள் – உத்ரா மேனன், சண்டை இயக்கம் – யானிக் பென், எழுத்து, இயக்கம் – கெளதம் வாசுதேவ் மேனன்.
லண்டனை பூர்வீகமாக்க் கொண்ட வருண் ஒரு சர்வதேச வாடகை கொலையாளி. பணத்தைக் கொடுத்துவிட்டால் போதும், எந்தக் கண்டத்தில், எந்த நாட்டில் இருந்தாலும் பறந்து சென்று வேலையைக் கச்சிதமாக முடித்துவிடுவார்.
அப்படியொரு அஸைன்மெண்ட்டுக்காக சென்னைக்கு வருகிறார் வருண். வந்த இடத்தில் கொடுத்த வேலையை செவ்வனே செய்கிறார். கூடவே நாயகி ராஹேவைப் பார்த்தவுடன் லவ்வாகிறார்.
இன்றைய இளசுகள்போல இவர்களின் காதல் சிக்னல் ஓகே ஆனவுடனேயே படுக்கைவரையிலும் தொடர்பாகிறது. திடீரென்று நாயகி தனது வக்கீல் தொழிலைப் பார்க்கவும், மேற்படிப்பு படிக்கவும் நியூயார்க்குப் பயணப்படுகிறார்.
விமான நிலையத்தில் நாயகியை வழியனுப்ப வந்த வருண், தான் யார் என்பதை நாயகியிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியாகும் நாயகி, தனது காதலை அப்போதே பிரேக் செய்துவிட்டுப் போய்விடுகிறார்.
அமெரிக்காவில் நியூயார்க்கில் மிகப் பெரிய வக்கீல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார் நாயகி. அப்போது மெக்சிகோவை சேர்ந்த பிரபலமான போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனை மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்திக் கொண்டு வந்துள்ளது அமெரிக்க அரசு.
இந்த வழக்கில் அமெரிக்க அரசின் சார்பாக வாதாடுவதற்கு நாயகியை புக் செய்கிறார்கள். ஏற்கெனவே இந்த வழக்கில் வாதாட வந்த வக்கீல்களை தனது அடியாட்களை வைத்து சுட்டுத் தள்ளிவிட்டார் போதை மருந்து டான்.
அதனால் இப்போது நாயகியை பாதுகாக்க வேண்டி தனியார் பாதுகாப்பு ஏஜென்ஸியிடம் உதவி கோருகிறார்கள். இந்த வேலைக்கு இடைத்தரகராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் திவ்யதர்ஷிணி, நாயகியைப் பாதுகாக்கும் அந்தப் பொறுப்பை வருணிடம் ஒப்படைக்கிறார்.
வருண் நாயகியை சென்னைக்கு அழைத்து வந்து பாதுகாக்கிறார். ஆனாலும் பல நாடுகளில் இருந்தும் சர்வதேச கொலையாளிகள் பலர் கூட்டாக நாயகியை கொலை செய்ய சென்னை வந்திறங்குகின்றனர்.
இதன் பின், நாயகியை வருண் காப்பாற்றினாரா..? இல்லையா..? நாயகன்-நாயகி காதல் என்னவானது..? என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.
தனது முதல் படத்திலேயே ஆக்சன் ஹீரோவாக நடித்திருக்கும் வருண் மிகப் பிரயத்தனப்பட்டு, தனது உடலை வருத்திக் கொண்டு நடித்திருப்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.
படத்தின் துவக்கத்திலேயே காதலில் விழுந்து, காமத்தில் ஈடுபட்டு.. காதலியைப் பிரியும் தருணத்தில் ஒரு ஆக்சன் காட்சி தொடங்கிவிட.. அப்போதிலிருந்து கடைசிவரையிலும் வருணின் கையும், காலும் பரபரவென்றுதான் இருக்கிறது. காட்சிக்குக் காட்சி ஓடிக் கொண்டேதான் இருக்கிறார்.
ஒவ்வொரு சண்டைக் காட்சியும், ஓவ்வொரு மாதிரியாக கை, கால்களை வைத்தே ஆக்சனை காட்ட வேண்டியவைகளாக வடிவமைக்கப்பட்டிருக்க.. அதை மிக சிறப்பாக கையாண்டிருக்கும் வருண், அனைத்து சண்டைக் காட்சிகளுக்கும் தனது வேக, வேகமான ஆக்சன்களால் உயிர் கொடுத்திருக்கிறார்.
மற்றபடி, காதல் காட்சிகளில் ரசிகர்களை கவர்வதைப் போன்ற காதல் விளையாட்டுக்களைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் வருண். அதை தனது அடுத்தடுத்த படங்களில், வித்தியாசமான இயக்குநர்களின் இயக்கத்தில் செய்வார் என்று நம்பிக்கை கொள்ளலாம்.
நாயகியாக நடித்திருக்கும் ராஹே கேமிராவுக்கு ஏற்ற முகம். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகியாகவே தெரிகிறார். பல காட்சிகளில் இவருக்காகவே குளோஸப் ஷாட்ஸ் வைத்து நம்மை கிறங்கடித்துள்ளார் இயக்குநர் கெளதம் மேனன்.
பல காட்சிகளில் நடிப்பினை தனது கண்களின் மூலமாகவே காட்சிப்படுத்தியிருக்கும் ராஹேவுக்கு இதுதான் முதல் படம் என்பதை நம்மால் நம்ப முடியவில்லை. காதல், குரோதம், விரோதம், பயம், பாசம் என்று விதம்விதமான எமோஷன்களை அழகுபட கொடுத்து அசத்தியிருக்கிறார். கடைசியில், ‘பூ ஒன்று புயலானது’ பாணியில் துப்பாக்கியைக் கையில் தூக்கி ‘கன் பைட் காஞ்சனா’வாகவும் மாறியிருக்கிறார். பாராட்டுக்கள்.
நாயகனாகவே தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணா திடீரென்று வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார். காருக்குள் அமர்ந்தபடியே தனது பால்ய வயது கதைகளைப் பேசும்போதும், வருணை எதிர்த்து சண்டையிடும்போதும் ஒரு அசத்தல் வில்லனை அடையாளம் காட்டியிருக்கிறார் கிருஷ்ணா. துப்பாக்கியால் ஏமாந்துபோன நிலையில் தன் தலையில் அடித்துக் கொண்டே வருத்தப்படும் கிருஷ்ணாவின் அந்த நடிப்பு ஏ ஒன்.
வருண் சம்பந்தப்பட்ட சர்வதேச கூலிப் படையின் ஒருங்கிணைப்பாளராக டிடியை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்த்து. ஆனாலும் கடைசிவரையிலும் திடீர், திடீரென்று காட்சிகளுக்குள் புகுந்து திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்.
இறுதிக் காட்சியில் வந்தாலும் கிட்டியின் அனுபவ நடிப்பு, அந்த 20 நிமிடங்களை அசுரத்தனமாக நகர்த்தியிருக்கிறது. தனது தேர்ந்த நடிப்பின் மூலமாக தான் நல்லவனா, கெட்டவனா என்பதை கண்டுபிடிக்க முடியாத வகையில் பேசி நடித்திருக்கும் கிட்டியின் நடிப்பு சிம்ப்ளி சூப்பர்ப்..!
தம்பதியிகளாக நடித்திருக்கும் மன்சூர் அலிகானும், விசித்ராவும் ஒரு காட்சியில் மட்டுமே வந்து போயிருக்கிறார்கள். மன்சூரலிகான் அடிக்கும் விட்டுகள் சிரிக்க வைத்ததென்றால், விசித்ரா தனது தாலியறுந்த கோபத்தைக் காட்டும் காட்சி உணர்ச்சிகரமானது..!
வழக்கமான கவுதம் மேனனின் வசன விளையாட்டுக்கள் இந்தப் படத்திலும் இடம் பெற்று காட்சிகளை ருசிகரமாக்கியுள்ளன. லிப் டூ லிப் கிஸ் கொடுக்க வரும்போது “நான் இன்னும் பிரஷ் பண்ணலை…” என்று வருண் சொல்ல.. “நான் மவுத் வாஷ் யூஸ் பண்ணிட்டேன்..” என்று நாயகி சொல்லிவிட்டு வருணை இழுத்து வைத்து கிஸ்ஸடிப்பதெல்லாம் கவுதம் மேனனுக்கு மட்டுமே வரும் காதல் உணர்வு.
தொழில் நுட்ப வல்லுநர்களில் முதல் பாராட்டைப் பெறுகிறார் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கும் சண்டை பயிற்சி இயக்குநர் யானிக் பென். படம் முழுவதும் பல சண்டைக் காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் ஒவ்வொரு சண்டைக் காட்சியையும் ஒவ்வொரு ரகத்தில் வடிவமைத்து அசத்தியிருக்கிறார் யானிக் பென்.
எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு படத்தை ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்குக்கு கொண்டு போயுள்ளது. அதிகமான இரவுக் காட்சிகளை அதிக லைட்டுகள் இல்லாமல் இயற்கை வெளிச்சத்தை வைத்தே படமாக்கியிருப்பது சிறப்பு. சண்டை காட்சிகளில் சண்டை இயக்குநருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அதைப் படமாக்கிய விதத்திற்காகவே ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஷொட்டு..!
கார்த்திக்கின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். அதிலும் பாடல் வரிகள் எப்போதும்போல செந்தமிழில் தீட்டப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
படத் தொகுப்பாளர் ஆண்டனி சண்டை காட்சிகளை எப்படித்தான் தொகுத்தாரோ தெரியவில்லை. இதற்காகவே அவருக்கு தனியாக ஒரு விருதினைத் தரலாம்.
ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் காதலியை காப்பாற்றும் கதாநாயகன் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு. இந்த சின்ன விஷயத்தை வைத்துக் கொண்டு தனது ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆக்ஷன் விருந்தினை வித்தியாசமான வகையில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன். இரண்டரை மணி நேரம் ஆக்ஷன் காட்சிகளில் நம்மை மூழ்கடித்தாலும், நமக்கு மூச்சுத்திணறல் ஏற்படாத வகையில், அதை வரிசை கட்டி திரைக்கதையில் பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார்.
இருந்தாலும் இவ்வளவு சின்ன வயது நாயகியை அமெரிக்க அரசு தனது வழக்கறிஞராகத் தேர்வு செய்துள்ளது என்பது நம்ப முடியாதது. அதோடு அமெரிக்க அரசால் கொடுக்க முடியாத பாதுகாப்பை தனியார் நிறுவனம் கொடுக்கிறது என்பதும் ஏற்க முடியாத திரைக்கதை. வேறுவிதமான திரைக்கதையை நம்பகத்தன்மையோடு கவுதம் மேனன் கொடுத்திருக்கலாம்..!
இப்போது இதன் இரண்டாம் பாகமும் வரும் என்பதுபோல படத்தை முடித்திருக்கிறார். இப்போதுதான் இரண்டாம் பாகம் சீஸனாச்சே..!? அதனால் வைக்கலாம்தான். ராஜா வீட்டுக் கண்ணுக்குட்டியே கைக்குள்ள இருக்கும்போது கவுதம் மேனன் எதுக்கும் கவலைப்பட தேவையில்லைதான்.
கொண்டாங்க.. அதையும் பார்த்திருவோம்..!
‘ஜோஷ்வா : இமை போல் காக்க’ – ஸ்டைலிஷான ஆக்சன் திரைப்படம்!
RATING : 3.5 / 5