full screen background image

ஜோரா கைய தட்டுங்க – விமர்சனம்

ஜோரா கைய தட்டுங்க – விமர்சனம்

இப்படத்தை வாமா எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த யோகிபாபு,  ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நாயகனாக நடித்த ‘மண்டேலா’, ‘பொம்மை நாயகி’, ‘கோலமாவு கோகிலா’ போன்ற படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

இதன் தொடர்ச்சியாய் இந்த ‘ஜோரா கைய தட்டுங்க’ என்னும் படத்தில் யோகிபாபு நாயகனாக நடித்திருக்கிறார். மேலும், ஹரிஸ் பேரடி, விக்ரம் புகழ் வசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன். சாந்தி ராவ், மேனகா, நைரா, அருவி பாலா, மூர், ‌‌்ரீதர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மது அம்படின் ஒளிப்பதிவில்,  எஸ்.என். அருணகிரியின் இசையில், தேசிய விருது பெற்ற சாபு ஜோசப்பின் எடிட்டிங்கில், ஜித்தன் ரோஷனின் பின்னணி இசை அமைக்கிறார். இயக்குநர் வினீஷ் மில்லினியம் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

ஒரு மேஜிக் செய்யும் மேஜீஸியனாக இருக்கும் யோகி பாபு நீலகிரி மலைப் பகுதியில் வசிக்கிறார். அவருடன் அவருடைய உதவியாளர் கல்கியும் இருக்கிறார். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று மேஜிக்கை காட்டி அதில்தான் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

யோகி பாபுவின் அப்பாவும் ஒரு மேஜிசியனாக இருந்தவர்தான். இது போன்ற ஒரு மேஜிக் நடத்தும் போது ஏற்பட்ட விபத்தில் அவர் இறந்துவிட்டார். அதனால் யோகி பாபு விடாமல் இந்த வித்தையை செய்து பிழைத்து வருகிறார்.

ஓரிடத்தில் இது போன்று மேஜிக் செய்யும்போது ஏற்படும் சிறு சொதப்பலினால் அந்த ஊர் மக்களிடம் தர்ம அடி வாங்கி விடுகிறார்கள் யோகி பாபுவும், கல்கியும். அது பத்தாது என்று போலீசும் யோகி பாபுவை அழைத்துச் சென்று போலீஸ் ஸ்டேஷனில் வைத்த அடிக்கிறார்கள். இதனால் மனம் நொந்துபோன யோகி பாபு தொடர்ந்து இந்த மேஜிக்கை நடத்த வேண்டுமா, வேண்டாமா என்று முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்.

யோகி பாபுவின் மேஜிக்கைப் பார்த்த நாயகி சாந்தி ராவ் ஒருதலையாக யோகி பாபுவை காதலிக்க தொடங்குகிறார். இன்னொரு பக்கம் யோகி பாபுவின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சில ரவுடிகள் யோகிபாபுவுக்கு கடுமையான டார்ச்சர் கொடுத்து வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து யோகிபாபு மேஜிக்கே நடத்த முடியாமல் அளவுக்கு பிரச்சனைகளை சந்திக்க.. திடீரென்று யோகிபாபு வீட்டில் இருந்து காணாமல் போகிறார்.

அதற்கு பிறகு அந்தப் பகுதியில் தொடர்ந்து கொலைகளும் நடக்க போலீஸ் யார் கொலை செய்தது என்று விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள்.

கடைசியாக என்ன நடந்தது?.. காணாமல் போன யோகி பாபு திருப்பி வந்தாரா?.. அந்த ரவுடிகள் என்ன ஆனார்கள்?.. அந்தக் கொலைகளை செய்தது யார்..? என்பதுதான் இந்தப் படத்தின்  திரைக்கதை.

மருந்துக்குக்கூட சிரிக்காத வண்ணம் இந்தப் படத்தில் எப்போதும் உம்மணா மூஞ்சியாகவே நடித்திருக்கிறார் யோகி பாபு. அவருடைய கேரக்டர்ஸ் ஸ்கெட்ச்படி அவருடைய அப்பாவை இழந்த சோகம், மேஜிக்கல் தன்னால் பெரிய அளவுக்கு வர முடியவில்லை என்கின்ற வருத்தம்… இரண்டையும் தன் முகத்தில் அப்பிக் கொண்டு ஒரு சோக மயத்துடனேயே படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார் யோகி பாபு.

உணர்வைத் தூண்டி எழுப்பும் அளவுக்கான நடிப்பெல்லாம் இல்லாமல் இயக்குநர் சொல்லிக் கொடுத்ததுக்கு ஏற்ப ஓரளவுக்கான நடிப்பை மட்டுமே காண்பித்திருக்கிறார் யோகி பாபு.

இவருடைய உதவியாளராக நடித்த கல்கி நம்மை சிரிக்க வைக்க பெரும் முயற்சி செய்தும் தோல்வி அடைந்துவிட்டார்.

யோகி பாபுவுடன் எந்த ஒரு பெரிய நடிகையும் நடிக்க வரலையோ என்னவோ… சாந்தி ராவ் என்கின்ற ஒரு அழகியை.. அதுவும் குண்டு அழகியை கொண்டு வந்து நடிக்க வைத்திருக்கிறார்கள். அவரும் தன்னால் முடிந்த அளவுக்கு நடிப்பை காண்பித்து இருக்கிறார். பாடல் காட்சிகளில் மிக அழகாக அவரையும் காண்பித்திருக்கிறார்கள். அதற்காகவே நமது பாராட்டுக்கள்.

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வசந்தி தன்னுடைய கொடூர முகத்தை காட்ட நினைத்தவர்… அவருடைய முகத்தில் அந்த அளவுக்கு குருரம் வராமல் போய் சாதாரணமான ஒரு இன்ஸ்பெக்டராகவே தெரிகிறார்.

டி.எஸ்.பி.யாக நடித்திருக்கும் ஹரீஷ் பெரடி சிரித்தபடியே கழுத்தை அறுக்கும் கச்சிதமான வேலையை வசந்தியிடம் காட்டும்போது அவருடைய நடிப்பு ரசிக்கப்படுகிறது.

ரவுடிகளாக நடித்திருக்கும் ஸ்ரீதர், மூர், அருவி பாலா மூன்று பேருமே கடைசி வரையிலும் படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு வழி அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு மேதை மது அம்பட்டின் ஒளிப்பதிவு ஒரு சின்ன பட்ஜெட் படத்திற்கு எப்படி இருக்க வேண்டுமோ அப்படி அழகாக இருக்கிறது. யோகி பாபு வீட்டிற்குள் எடுக்கப்பட்ட அத்தனை காட்சிகளும் அழகு மது அம்புட்டு மிகவும் பிடித்தமானது இருட்டு. அதனால் அந்த இருட்டை எவ்வளவு அழகாக காட்ட முடியுமோ… அவ்வளவு அழகாக தன்னுடைய கேமராவில் பதிவாக்கி இருக்கிறார் மதுஅம்பட்.

பாடல்கள் அனைத்தும் கேட்கும்படியாகத்தான் இருக்கின்றன. ஜித்தின் கே.ரோஷித்தின் பின்னணி இசையும் படத்தின் சஸ்பென்ஸ், திரில்லரை கூட்டுவதற்கு முனைந்திருக்கிறது.

ஷாபு ஜோசப்பின் படத் தொகுப்பு இந்தப் படத்தின் மேஜிக் காட்சிகளை கொஞ்சம் ரசிப்பது போல் மாற்றி அமைத்திருக்கிறது.

கலை இயக்குனரை வெகுவாகப் பாராட்ட வேண்டும். யோகிபாபுவின் வீட்டை வடிவமைத்தவிதமும், திரையில் நாம் பார்ப்பதற்கு மிக எளிதான மேஜிக் காட்சிகளை சொல்லிக் கொடுத்திருக்கும் விதமும் பாராட்டுக்குரியது.

படத்தில் மிகப் பெரிய பிரச்சனையே இயக்கம் என்பது மிகவும் இலகுவாக இருப்பதுதான். இதை விட சிறந்த இயக்கத்தை இயக்குநர் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவரால் கொடுக்க முடியாததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இதைவிட சிறப்பான இயக்கத்தை கொடுத்திருந்தால் இந்தப் படம் நிச்சயமாக பேசப்பட்டிருக்கும். சொல்லப்பட்டிருக்கும். பகிரப்பட்டிருக்கும்.

இயக்கம் என்பது கொஞ்சம் சொதப்பினாலும் படம் மொத்தமும் பாதிக்கப்படும். அந்த வகையில் இந்த படத்திற்கு மிகப் பெரிய எதிரியே இயக்குநர்தான். குறைந்த திறன் உடைய இயக்குதலால் இந்தப் படத்தை ஆஹா.. ஓஹோ… என்று நம்மால் சொல்ல முடியவில்லை.

RATING : 2.5 / 5

Our Score