‘ஜோக்கர்’ திரைப்படம் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இதன் இயக்குநர் ராஜு முருகன், ‘ஜோக்கர்’ படத்தை வேற்று மொழிகளிலும் ரீமேக் செய்ய ஆசை இருப்பதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசும்போது, “இந்த ஜோக்கர் திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் ஆசை எனக்கு இருக்கிறது. தெலுங்கிலும் என்னை ரீமேக் செய்ய சொல்லி கேட்கிறார்கள். தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அதற்க்கான சரியான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. எந்த மொழியில் ஜோக்கரை ரீமேக் செய்வது என்பது பற்றி இனிமேல்தான் முடிவு செய்ய வேண்டும் அதற்கான விஷயங்கள் அமையும்போதுதான் அதை செய்ய முடியும்.
இப்போது நான் என்னுடைய அடுத்த படத்திற்கான கதையை எழுதி கொண்டு இருக்கிறேன். அடுத்த படத்திற்கான கதை முற்றிலும் வேறு ஒரு களத்தில் பயணிக்கும் ஒரு கதையாக இருக்கும்.’ குக்கூ’ ஒரு அழகான காதல் கதை, ‘ஜோக்கர்’ சமூக அவலங்களை பற்றி பேசும் ஒரு படம். என்னுடைய அடுத்த படம் இதில் இருந்து முற்றிலும் வேறு களத்தில் இருக்கும். அந்த கதையை நான் இப்போதுதான் எழுதி வருகிறேன், முழுவதையும் எழுதி முடித்த பின்னர்தான் அதை பற்றி கூற முடியும்.
நிறைய தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து என்னை படம் இயக்க சொல்லி கேட்கிறார்கள். எல்லாம் முடிவானதும் அதை பற்றி சொல்கிறேன்.
நான் என்னுடைய இயக்குநர் லிங்குசாமி அவர்களிடமிருந்து நிறைய கற்றுள்ளேன். ஜோக்கர் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் லிங்குசாமி ராஜு முருகன் ‘என்னிடமிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை.. நான்தான் அவரிடமிருந்து கற்றுள்ளேன்’ என்று கூறியது அவருடைய பெருந்தன்மையாகும்.
‘ஜோக்கரை’ பார்த்துவிட்டு யாரும் எனக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே போல் எனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை. நான் விரும்பும் தலைவர்கள் பலர் படத்தை பார்த்துவிட்டு என்னை பாரட்டினர்.
நான் பெரிதும் மதிக்கக் கூடிய விரும்பக் கூடிய தலைவரான திரு. நல்லகண்ணு அய்யா ‘ஜோக்கரை’ பார்த்துவிட்டு எனக்கு அழகான ஒரு பரிசை அளித்தார் அதில் அழகான ஒரு வாசகம் இருந்தது.. “விதைத்து கொண்டே இருப்போம்.. முளைத்தால் மரம்; இல்லையென்றால் உரம்…’
அதே போல் இன்றைய காலகட்டத்து இளைஞர்களுக்கு முன் மாதிரியாக இருக்கக் கூடிய சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் படத்தை பார்த்துவிட்டு ‘இது சமூக அவலங்களுக்கு எதிரான சரியான படம்..’ என்றார்.
சமூக தளத்தில் இயங்கி கொண்டிருக்கக் கூடிய திருமாவளவன் அவர்கள் படத்தை பார்த்துவிட்டு பெரிதும் பாராட்டினர். அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினியும் படத்தை பார்த்துவிட்டு ‘ரொம்ப ரொம்ப தில்லான படம்; ரொம்ப நல்ல பண்ணிருக்கீங்க.. நிச்சயம் நாம் சந்திப்போம்..’ என்றார். நானும் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்..” என்று சொல்லி முடித்தார்..










