“இவருடைய இரண்டாவது படம் என்னவாக இருக்கும்.. எதைப் பற்றி பேசும்..?” என முதல் படத்தின் வெற்றியிலேயே கவனத்தை ஈர்த்தவர் ‘குக்கூ’ படத்தை இயக்கிய இயக்குநரான ராஜூ முருகன்.
தன் மீதான நம்பிக்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் முயற்சியில் இப்போது அரசியல் பேசும் ஒரு படத்தை எடுத்து வருகிறார் ராஜூ முருகன். படத்தின் பெயர் ‘ஜோக்கர்’. படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட்டு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவரை சந்தித்தோம்.
“இது சமூகத்தை பற்றிய படம். இன்றைய இந்தியாவில் மக்களின் வாழ்க்கைத் தரம், டிஜிட்டல் மயம் வளர்ச்சின்னு மாறியிருந்தாலும் மக்களோட போராட்டங்களும் அதிகமாயிடுச்சு. அது பற்றி பேசும் கதைதான் இது. பொதுவா நமக்காக போராட முன் வருபவர்கள் எல்லோருமே ஆரம்பத்தில் ஜோக்கர்களாகத்தான் பார்க்கப்படுவார்கள். பாரதியார் உட்பட நிறைய பேர் அதற்கு உதாரணம். அப்படியொரு அர்த்தத்தில் விளைந்ததுதான் இந்த ‘ஜோக்கர்’ டைட்டில். நாம் யாரையெல்லாம் காமெடியன்களாக பார்க்கிறோமோ அவர்களெல்லாம் நிச்சயமாக காமெடியன்கள் இல்லை. அப்போ உண்மையான ஜோக்கர்கள் யார் என்பதை கண்டுபிடித்துச் சொல்லும் படம்தான் இது.
நான் பத்திரிகையாளன், எழுத்தாளன், இயக்குநர் என்ற பாதையில் வந்தவன் என்றாலும் அடிப்படையில் என்னிடம் அரசியல் ஆர்வம் நிறைய இருக்கு. அரசியல் என்றால் கட்சி சம்பந்தப்பட்டு, இயக்கம் சம்பந்தப்பட்டே பார்த்து பழகிட்டோம். அரசியல் பார்வை என்பது அதுவல்ல.
மக்களின் வாழ்க்கை, அவர்களின் துண்பங்கள்தான் அரசியல். அப்படியான அரசியலுக்குள்தான் நாம் இருக்கிறோம். இருபது வருடங்களுக்கு முன்புவரையிலும் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவோம்னு நாம நினைச்சிருக்கவே மாட்டோம். ஆனால் இன்றைக்கு நகரத்தில் தொடங்கி கிராமங்கள்வரை வாட்டர் கேனை காசு கொடுத்து வாங்குறோம். உலக மயமாக்கல் நவீன இந்தியான்னு சொல்லிட்டு இருக்கும் நேரத்தில் நாடு முழுவதிலும் வறுமை பரவியிருக்கு. எல்லா வசதிகளும் கிடைத்துவிட்டது போன்ற மாயையை ஏற்படுத்தி சிந்தனை அளவிலும், பொருளாதார அளவிலும் நம் மக்கள் பின் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இதெல்லாம் சேர்ந்ததுதான் அரசியல். சமூகத்திற்காக பேசுகிறவன், மக்களுக்காக யோசிக்கிறவன் எல்லாருமே அரசியல்வாதிகள்தான். அதைப் பற்றிப் பேசும் படம்தான் இந்த ‘ஜோக்கர்’.
படத்தில் காமெடிக்கும் பஞ்சம் இருக்காது. உதாரணத்துக்கு தேர்தல் என்பது எவ்வளவு சீரியஸான விஷயம். ஆனா நடப்பது எல்லாமே நமக்கு காமெடியா தெரியுதுதானே…? அப்படியான ஒரு சிரிப்பு எசன்ஸ் படம் முழுக்க தெளிக்கப்பட்டிருக்கும். படம் பார்க்கும்போது சிரிச்சிட்டே இருக்குற மாதிரியான கேலியும், ஜாலியும் ஆடியன்ஸை ரசிக்க வைக்கும். இந்தப் படத்தின் க்ளைமாக்ஸில் ஆடியன்ஸிடம் ஒரு கிரியேட்டரா நான் ஒரு கேள்வியை முன் வைத்திருக்கிறேன். அது சஸ்பென்ஸ்.
தருமபுரிதான் இந்தப் படத்தின் கதைக் களம். ஷூட்டிங் துவங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பேயே அங்கேயே ஒரு வீடு எடுத்து தங்கி, பக்காவாக ரிகர்சல் பார்த்து எல்லாம் சரியா இருக்குன்னு திருப்தி கிடைச்ச பிறகுதான் ஷூட்டிங்கிற்கே போனோம். தருமபுரி பகுதியை சேர்ந்த மக்களையும் நடிக்க வச்சிருக்கோம்.
‘ஆரண்ய காண்டம்’ சோமசுந்தரம்தான் கதையின் நாயகன். அவர் சில படங்களே பண்ணியிருந்தாலும் அவர் நடித்த கேரக்டர்களில் ஏதாவது ஒரு விதத்தில் கவனத்தை ஈர்த்துவிடுவார். இந்தியில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கி இன்றைக்கு சிறந்த நடிகராக பேசப்படும் நவாசுதின் சித்திக் மாதிரிதான் சோமசுந்தரமும் ஒரு அற்புதமான நடிகர்.
படத்தில் ‘பொன்னூஞ்சல்’ என்ற 60 வயசு கேரக்டருக்காகத்தான் அவரிடம் பேசப் போயிருந்தேன். ‘கேரக்டர் நல்லாயிருக்கு.. பண்றேன். ஆனா தொடர்ந்து என்னை வயசானவன் கேரக்டருக்கு கூப்பிடுறாங்க. எனக்கு அவ்வளவு வயசாகலை’ன்னு சொன்னார். அவர் பேசும்போது நான் பார்த்த உடல்மொழி, பேச்சு எல்லாமே என் கதை நாயகனுக்கான சரியான சாய்ஸ் இவர்தான்னு முடிவு பண்ணி ‘மன்னர் மன்னன்’ என்ற கதையின் நாயகனாக அவரை மாற்றினேன்.
‘பொன்னூஞ்சல்’ கேரக்டரில் நாடக ஆளுமை கொண்ட மு.ராமசாமி பண்ணியிருக்கிறார். நியாயத்திற்காக கோபம் கொப்பளிக்கும் கேரக்டர் என்பதால் அவரை எழுத்தாளர் ஜெயகாந்தன் போன்ற தோற்றத்துக்கு மாற்றியுள்ளேன். ஸ்டில்ஸ் பார்க்கும் எல்லாருமே ஜெயகாந்தன் மாதிரியே இருக்காருன்னு சொல்றாங்க.
‘இசை’ என்ற கேரக்டரில் காயத்ரி, மல்லிகா என்ற கேரக்டரில் ரம்யாவும் கதையின் நாயகிகளாக நடிச்சிருக்காங்க. வெறுமனே இல்லாமல் ஹீரோவுக்கு சமமான வலுவான கேரக்டரில் இவங்களோட நடிப்பும் பார்ப்பவர் மனசில் நங்கூரமிடும். தவிர எழுத்தாளர்கள் பவா செல்லதுரை, சா.பாலமுருகனும் படத்தின் இரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிச்சிருக்காங்க.
படத்தை சர்வதேச அளவுக்கு எடுத்துச் செல்வது போன்ற ஒளிப்பதிவை செழியன் செய்திருக்கிறார். நான் சொல்ல வரும் வாழ்க்கையை துளியம் இயல்பு தவறாமல் பதிவு செய்திருக்கிறார் என்றுதான் சொல்லணும். ‘முண்டாசுப்பட்டி’ ஷான் ரோல்டன் இசையமைப்பில் யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளார். நான் நினைக்கிற படத்தை தருவதற்காக எடிட்டர் சண்முகம் வேலுச்சாமி தன்னையே அர்ப்பணித்திருக்கிறார். கதையிலிருந்து துறுத்தி நிற்காத கலை இயக்கத்தில் கைவண்ணம் காட்டியிருக்கிறார் கலை ஓவியர் சதீஷ்குமார்.
இந்த ஒட்டுமொத்த உழைப்பிற்கும் திறமைக்கும் மூல காரணமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இருவரையும் இந்த நேரத்தில் நன்றியோடு நான் நினைத்துப்பார்க்கிறேன்.
இந்தப் படம் பேச வரும் பொருளை எடுத்து அதை தயாரிக்க சில பேருக்குத்தான் மனசு வரும். வியாபார ரீதியாகவும் வெற்றி பெறுவதற்கான கதை என்றாலும். சமூக நோக்கமும் அக்கறையும் கொண்டவர்களால் மட்டுமே இதை தயாரிக்க முடியும். அந்த வகையிலும் தயாரிப்பாளர்களுக்கு இன்னொரு நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.. படத்தின் சிங்கிள் டிராக் இசை வரும் ஏப்ரல் 1-ம் தேதி வெளியாகும்…” என்றார்.