சென்ற ஆண்டுக்கான சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளில் சிறந்த பிராந்திய மொழி படம், சிறந்த பாடகர் ஆகிய 2 விருதுகளை ‘ஜோக்கர்’ திரைப்படம் பெற்றது.
இதற்காக இந்தப் படத்தின் குழுவினர் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இதில் ஜோக்கர் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் ராஜு முருகன், நாயகன் சோமசுந்தரம், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜு முருகன் பேசும்போது, “நான் ஒரு நல்ல படத்தை இயக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்படம் அனைவரின் ஒத்துழைப்பில் திரையரங்குக்கு வந்ததே மிகப் பெரிய வெற்றி. ‘ஜோக்கர்’ திரைப்படம் இங்கு இருக்கும் அனைவரும் தங்களுடைய கருத்தை சுதந்திரமாக பேச வழிவகுத்து தந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்படத்தின் நாயகன் குரு சோமசுந்தரம் பாலிவுட் நடிகர் நாவசுதின் சித்திக் போன்ற மிக சிறந்த நடிகர்…” என்றார்.
நடிகர் குரு சோமசுந்தரம் பேசும்போது, “ஜோக்கர் படத்தில் நர்ஸ் வேடத்தில் நடித்த நடிகை ஒருவர் என்னை கைப்பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துவிட்டு, நானும் இப்படத்தில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று பெருமையாக கூறினார். எனக்கு அது சந்தோஷத்தை தந்தது. இந்த படத்தில் எழுத்து, இசை, தயாரிப்பு என்று அனைத்தும் ஒருங்கே இனைந்து மிகச் சிறப்பாக அமைந்தது. நான் இந்த படத்தில் நடித்ததை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது…” என்றார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசும்போது, “ஜோக்கர் கதையை கேட்டதும் நிச்சயம் படத்துக்கு தேசிய விருந்து கிடைக்கும் என்று நான் இயக்குநர் ராஜு முருகனிடம் கூறினேன். அதற்கு அவர், ‘தேசிய விருது கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும். மிகப் பெரிய அங்கீகாரமாக இருக்கும்’ என்றார். தேசிய விருது பெற்றுள்ள சுந்தர் ஐயர் ‘ஜாஸ்மீன்’ பாடலை வெறும் இருபதே நிமிடத்தில் பாடினார் என்பது அதன் சிறப்பாகும். சுந்தர் ஐயர் இப்பாடலில் நிறைய புதிய விஷயங்களை கொண்டு வந்தார்’ அது மட்டுமல்லாமல் பாடலில் நிறைய எமோஷனை சேர்த்தார்…” என்றார் ஷான் ரோல்டன்.
தயாரிப்பாளர் S.R.பிரபு பேசும்போது, “ஜோக்கர் படத்துக்கு தேசிய விருது கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோசம். இருந்தாலும் எங்கள் நாயகன் குரு சோமசுந்தரம் அவர்களுக்கும் சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கும் என்று ரொம்பவே எதிர்பார்த்தோம். அவருக்கும் கிடைத்திருந்தால் எங்களுக்கு மேலும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். எல்லாம் கூடி வரும்போது ‘ஜோக்கர்’ திரைப்படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது…” என்றார்.
படக் குழுவினருக்கு நமது வாழ்த்துகள்..!