ஜானி – சினிமா விமர்சனம்

ஜானி – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ‘ஸ்டார் மூவிஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரும், பிரசாந்தின் தந்தையுமான நடிகர் தியாகராஜன் தயாரித்துள்ளார்.

நடிகர் பிரசாந்துடன், ‘இளைய திலகம்’ பிரபு, சஞ்சிதா ஷெட்டி, ஆனந்த்ராஜ், ஷாயாஜி ஷிண்டே, தேவதர்ஷிணி, அசுதோஷ் ராணா, கலைராணி, ஆத்மா பேட்ரிக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – ப.வெற்றி செல்வன், கதை – ஸ்ரீராம் ராகவன், ஒளிப்பதிவு – எம்.வி.பன்னீர்செல்வம், இசை – ரஞ்சன் துரைராஜ், கலை இயக்கம் – மிலன், படத் தொகுப்பு – சிவ சரவணன், தயாரிப்பு – தியாகராஜன், தயாரிப்பு நிறுவனம் – ஸ்டார் மூவிஸ்.

தன்னுடைய 17-வது ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கால் பதித்த பிரசாந்த், தொடர்ந்து வெற்றிப் படிகளில் ஏறினார். மிகக் குறுகிய காலத்தில் தமிழ் இளைஞர்களிடையே புகழ் பெற்று ‘டாப் ஸ்டார்’ என்ற அடையாளத்துடன் மளமளவென்று பல படங்களில் நடித்தார்.

‘வண்ண வண்ண பூக்கள்’, ‘செம்பருத்தி’, ‘திருடா திருடா’, ‘ஜீன்ஸ்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற படங்கள் பிரசாந்தை விநியோகஸ்தர்களின் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இடம் பிடிக்க வைத்தது. பிரசாந்த்துக்கு இளைஞர்கள் மட்டுமல்லாது, பெண் ரசிகைகளும் அதிகமாக இருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ள பிரசாந்த், காலப்போக்கில் தடுமாறினார்.  2004-ம் ஆண்டுக்கு பிறகு பிரசாந்தின் மார்க்கெட் டல்லானது.

அதன் பிறகு வருடத்திற்கு ஒரு படமாக ‘ஷாக்’, ‘ஆயுதம்’, ‘லண்டன், ‘ஜாம்பவான்’, ‘தகப்பன்சாமி’, ‘அடைக்கலம்’, ‘பொன்னர் ஷங்கர்’, ‘மம்பட்டியான்’, ‘புலன் விசாரணை 2’, ‘சாகசம்’ என்று வரிசையாக இதுவரை வெளியான படங்களும் அவருக்குப் பெரிய வெற்றியையும், பெயரையும் பெற்றுத் பெறவில்லை.

தற்போது அவர் நடித்திருக்கும் இந்த ‘ஜானி’ திரைப்படம் பாலிவுட்டில் நடிகர்கள் நீல் நிதின் முகேஷ், தர்மேந்திரா நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான ‘ஜானி கட்டார்’ என்ற ஹிந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காகும். நடிகர் நீல் நிதின் முகேஷ் அறிமுகமானது இந்தப் படத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தி மூலத்தில் இருந்து 90 சதவிகிதம் அப்படியே தமிழாக்கம் செய்திருக்கிறார் அறிமுக இயக்குநரான ப.வெற்றிச் செல்வன்.

பிரசாந்த், பிரபு, ஆனந்த்ராஜ், அசுதோஷ் ராணா, ஆத்மா என்று இந்த ஐவரும் நெருங்கிய நண்பர்கள். சென்னையில் சூதாட்ட கிளப் ஒன்றை ஐந்து பேரும் சேர்ந்து நடத்தி வருகின்றனர். இருந்தாலும் அவரவர்க்கு தனித்தனியே சொந்தத் தொழிலும் உண்டு.

இவர்களில் ஆனந்த்ராஜ்தான் அந்த சூதாட்ட விடுதியைக் முழுப் பொறுப்பெடுத்து நடத்தி வருகிறார். பிரசாந்த் ரியல் எஸ்டேட் பிஸினஸில் இருக்கிறார். அசுதோஷ் ராணா பணத்தை வட்டிக்குக் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். வட்டியும், அசலும் கட்டத் தவறினால் அவர்களின் குடும்பத்துப் பெண்கள் மீது கை வைக்கும் குணமுடையவர் அசுதோஷ் ராணா.

அப்படியொரு முறை ஒரு கோடி ரூபாய் கடனை கட்டவில்லை என்பதற்காக சம்பந்தப்பட்டவரின் மகளான சஞ்சிதா ஷெட்டியை தூக்கி வந்து தனி வீடு எடுத்து தங்க வைத்து பராமரித்து வருகிறார். சஞ்சிதா ஷெட்டிக்கும், பிரசாந்துக்கும் இடையில் தனியாக ஒரு காதல் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆத்மாவின் அம்மா கலைராணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நினைவுகள் எல்லாம் போய்விட்டது. மகனை மட்டுமே அவருக்கு நினைவிருக்கிறது. அம்மாவை மருத்துவமனையில் வைத்து கண்ணும், கருத்துமாய் கவனித்து வருகிறார் ஆத்மா.

இந்தச் சூழலில் திடீரென்று கேரளாவில் போலீஸ் உயரதிகாரியாக இருக்கும் சாயாஜி ஷிண்டே சென்னையில் இருக்கும் தனது நெருங்கிய நண்பரான பிரபுவுக்கு போன் செய்து 5 கோடி மதிப்புள்ள போதை மருந்து தன்னிடம் இருப்பதாகவும் அதனை இரண்டரை கோடி ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டு விற்று லாபம் பார்த்துக் கொள்ளும்படி ஆசை காட்டுகிறார்.

உடனேயே இதற்காக தனது பங்குதாரர்கள் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கிறார் பிரபு. ஆனந்த்ராஜை தவிர மற்றவர்கள் பணத்தை உடனே தருவதாகச் சொல்கிறார்கள். ஆனந்த்ராஜ் மட்டும் தனது மனைவியும் அழகுக் கலை நிபுணருமான தேவதர்ஷிணியிடம் இந்த டீலிங்கிற்காக பணம் கேட்கிறார். மிகுந்த சண்டைக்கு பிறகு தேவதர்ஷிணி தன்னுடைய வீட்டை அடமானம் வைத்து பணத்தைப் புரட்டித் தருகிறார்.

இந்த 5 நண்பர்கள் ஆளுக்கு 50 லட்சம் ரூபாய் என்று கொடுத்த 2 கோடியே 50 லட்சம் ரூபாயை ஆத்மாவிடம் கொடுத்தனுப்பி போதை மருந்தை கொண்டு வர ஏற்பாடு செய்கிறார் பிரபு. ஆனால் இப்போது பிரசாந்தின் கிரிமினல் மூளை வேறு மாதிரி சிந்திக்கிறது.

சஞ்சிதா ஷெட்டி இந்தத் திருட்டு, சூதாட்ட தொழிலை விட்டுவிட்டு எங்கேயாவது ஓடிப் போய்விடலாம் என்று பிரசாந்திடம் தூபம் போடுகிறார். இதனால், காதலியுடன் கனடாவுக்கு சென்றுவிட முடிவெடுக்கிறார் பிரசாந்த். செல்வதற்கு முன்பு மிகப் பெரிய அளவுக்கு ஒரு டீலிங்கை நடத்தி பணத்தைச் சம்பாதித்து அதைக் கொண்டு போக நினைக்கிறார் பிரசாந்த்.

இந்த நேரத்தில் இந்த இரண்டரை கோடி ரூபாய் பரிவர்த்தனை பிரசாந்துக்கு ஆசை காட்ட.. தானே அந்தப் பணத்தைக் கொள்ளையடிக்க திட்டமிடுகிறார். இதன்படியே பெங்களூர் செல்வதாக அனைவரிடமும் சொல்லி ஏமாற்றிவிட்டு ஆத்மாவை பின் தொடர்ந்து சென்று பணப் பெட்டியை எடுக்க முயல்கிறார்.

அப்போது நடந்த சண்டையில் ஆத்மா திடீரென்று மரணமடைய.. ஆத்மாவை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு பணத்தைத் திருடிவிட்டு பெங்களூர் சென்றடைகிறார் பிரசாந்த். பின்பு நல்ல பையனாக சென்னைக்கு வந்து நிற்க.. அங்கே பிரபு பதட்டமாகியிருக்கிறார்.

ஆத்மா இறந்து போனதாக அவருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. எப்படி.. ஏன்.. யாரால் என்று அவர் கேள்வி மேல் கேள்வி கேட்க.. பிரசாந்த் இந்தப் பிரச்சினைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல நடிக்கத் துவங்குகிறார். ஆனால் திடீரென்று அவசரத்தனமாக பேசி மாட்டிக் கொள்ள.. பிரபு அவரை சந்தேகப்பட.. அவசரப்பட்டு பிரபுவையும் கொலை செய்து விடுகிறார் பிரசாந்த்.

இப்போது இருக்கின்ற ஆனந்த்ராஜையும், அசுதோஷ் ராணாவையும் ஒரு வழியாகச் சமாளித்துவிடுகிறார் பிரசாந்த். கடைசியில் மூவரும் ஒன்று சேர்ந்து பிரபுவை யாருக்கும் தெரியாமல் புதைத்துவிடுகிறார்கள்.

ஆனால் பிரபுவின் நண்பரான போலீஸ் இன்ஸ்பெக்டரான சாயாஜி ஷிண்டே கேரளாவில் இருந்து வந்து இறங்கி துப்பறிய ஆரம்பிக்கிறார். இதில் ஒவ்வொருவராக மாட்டிக் கொள்கிறார்கள். கடைசியாக பிரசாந்த் மாட்டினாரா.. அல்லது தப்பித்தாரா..  முடிவு என்னாகிறது என்பதுதான் இந்த ‘ஜானி’ படத்தின் திரைக்கதை.

பிரசாந்த் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு திரையில் தோன்றுகிறார் என்றாலும் அதே கட்டுக்கோப்பான உடலமைப்புடனும், தோற்றத்துடனும் அழகாக இருக்கிறார். இருந்தும் அவரை இந்த இயக்குநர் சரியாகப் பயன்படுத்தவில்லையோ என்னவோ.. படத்தில் பிரசாந்தின் தனிப்பட்ட ஸ்கோர் எதுவும் இல்லாமல் போய்விட்டது.

ஆனாலும் தனது குற்றவுணர்ச்சி, தவிப்புணர்வு, ரகசியத் திட்டம் போடும் உள்ளுணர்வு இதையெல்லாம் நடிப்பில் காட்டியிருக்கிறார் பிரசாந்த். தனித்த அடையாளமாய் தெரிய வேண்டிய ஹீரோயிஸம், இந்தப் படத்தின் கதை ஐவர் சம்பந்தப்பட்டது என்பதால் கலந்த நீரோடையாய் ஓடிவிட்டது.

மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க நினைத்து பிரசாந்த் போடும் திட்டங்களும், ஓட்டங்களும் திரைக்கதையின் மையமாக இருப்பதால் பிரசாந்தின் நடிப்பு பெரிதாக எதிர்பார்க்கப்படவில்லை.

சஞ்சிதா ஷெட்டிக்கு இந்தப் படத்தில்தான் அதிக வசனங்கள் என்று நினைக்கிறோம். எதிர்பாராமல் வீட்டிற்கு வந்த சாயாஜி ஷிண்டேயை சமாளித்து அனுப்பி வைக்கும் காட்சியில் மிக அழகாக நடித்திருக்கிறார் சஞ்சிதா. அதேபோல் அசுதோஷ் ராணாவிடமிருந்து அவர் தப்பிக்க நினைக்கும் மனக்குமுறலை நடிப்போடு சேர்த்துக் காண்பித்திருக்கிறார்.  கூடவே கொஞ்சம் கவர்ச்சியைத் தெளித்திருந்தாலும் அதை அள்ளிப் பருகத்தான் முடியவில்லை..!

இவருக்குப் பிறகு ஸ்கோர் செய்திருப்பது சாட்சாத் தேவதர்ஷிணிதான். சூதாட்ட விடுதியை நடத்தி வரும் கணவனை சமாளித்து, தனது தொழிலையும் பார்த்துக் கொண்டு குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கும் நல்ல கேரக்டர். இவர் வரும் காட்சிகளில் திரையை இவரே ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார். வெல்டன் தேவதர்ஷிணி.

பிரபு, ஆனந்த்ராஜ் இருவரும் தங்களுக்கான மெச்சூர்டான கேரக்டர்களை கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். ஆனந்த்ராஜ்தான் கொஞ்சம் அதிகமான காட்சிகளில் நடித்து காப்பாற்றியிருக்கிறார். இடையிடையே வரும் சிற்சில ‘விட்டு’களால்தான் புன்னகையையும் தாண்டி சிரிக்க வைக்கிறார் ஆனந்த்ராஜ். இவருக்கும், அசுதோஷ் ராணாவுக்கும் இடையிலான சண்டைகள் கொஞ்சம் சுவாரஸ்யத்தைக் கொடுக்கின்றன.

அசுதோஷ் ராணா.. ரகுவரன் பாணியிலான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். சாயாஜி ஷிண்டே.. போலீஸ் உயரதிகாரியாக பிரபுவை கொலை செய்தவனையும், இரண்டரை கோடியை அபகரித்தவனையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் காட்சிகளிலெல்லாம் அடுத்தது என்ன என்று கேட்க வைக்கிறது. ஆனாலும் இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் உழைத்திருக்கலாம்..!

எம்.வி.பன்னீர்செல்வத்தின் சிறப்பான ஒளிப்பதிவு படத்திற்கு மிகப் பெரிய பட்ஜெட் படம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் ஒளிப்பதிவாளர் தனித்தே தெரிகிறார்.

ரயில் சண்டை காட்சிகள், கிளப் மற்றும் ஹோட்டல் அறையில் நடைபெறும் சண்டை காட்சிகளில் கேமிரா சுழன்று விளையாடியிருக்கிறது. அதேபோல் பிரசாந்த் வீட்டின் உட்புறம், கிளப்பின் உட்புறம், பிரபு வீடு என்று அனைத்திலும் கலை இயக்கமும், ஒளிப்பதிவும் அபாரமாக ஒன்றினைந்து வேலை செய்திருக்கின்றன.

எடுக்கப்பட்டிருந்த பாடல் காட்சிகளையும் படத்தின் வேகமான திரைக்கதைக்கு இடையூறாய் இருக்கிறது என்று நினைத்துத் தூக்கிவிட்டார்கள் போலும். வைத்திருந்தால்கூட நன்றாகத்தான் இருந்திருக்கும்.

ரஞ்சன் துரைராஜின் பின்னணி இசை இந்தப் படத்தின் தன்மைக்கேற்ப இசைக்கப்பட்டுள்ளது. இது போன்ற படங்களுக்கேற்ற தீம் மியூஸிக்கை மட்டும் போடாதது ஏன் என்று தெரியவில்லை.

படத் தொகுப்பாளர் சிவ சரவணன் ஒரு ஆக்சன் திரில்லர் படத்திற்கு தேவையான அளவுக்கு காட்சிகளை கச்சிதமாக நறுக்கிக் கொடுத்திருக்கிறார். எந்தக் காட்சியையும் கதைக்குத் தேவையில்லாதது என்று சொல்லவே முடியாது. அதேபோல் எந்தக் காட்சியையும் நீக்கினாலும் கதை புரியாது என்பது போலவும் திரைக்கதையை இறுக்கமாக அமைத்திருக்கிறார். பாராட்டுக்கள்.

ஒரு சுவையான சஸ்பென்ஸ், திரில்லர் டைப் திரைப்படம்தான் இது. திரைக்கதையை இன்னும் அதிகமாக வேகமெடுக்கும் வகையில் அமைத்து கூடுதலாக இயக்கத் திறனையும் கூட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஹீரோ என்றால் நல்லவர் என்றே பார்த்து, பழகி, பேசி, தெரிந்து வைத்திருக்கும் தமிழ்ச் சினிமா ரசிகர்கள்.. இத்தனை கொலைகளையும் குற்றவுணர்ச்சியே இல்லாமல் செய்துவிட்டு தப்பிக்கும் ஹீரோவை எப்படி கொண்டாடுவார்கள்..? இது வில்லன்கள் நடிக்க வேண்டிய படம். பிரசாந்தை நடிக்க வைத்துவிட்டார்கள். கடைசியாக அவர் சாகடிக்கப்பட்டிருந்தால்கூட இன்னும் அதிகமாக படத்துடன் ஒன்றியிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பினை இரண்டாம் பாதியிலும் இயக்குநர் கொணர்ந்திருந்தால் படம் பர்ஸ்ட் கிளாஸ் சேஸிங் திரைப்படமாகப் பேசப்பட்டிருக்கும்.

அறிமுக இயக்குநரான ப.வெற்றிச் செல்வனுக்கு நமது வாழ்த்துகளும், பாராட்டுக்களும்..! அடுத்தடுத்த படங்களில் இதைவிட அதிகமான வெற்றியைப் பெறட்டும்..!

Our Score