full screen background image

ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை – சினிமா விமர்சனம்

ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை – சினிமா விமர்சனம்

தமிழ்த் திரைப்படத் துறையின் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கும் ‘சினிமா டூ ஹோம்’ திட்டத்தின் மூலம் நேரடியாக வீடுகளுக்கே டிவிடி வடிவத்தில் சென்றடைந்திருக்கும் முதல் தமிழ்த் திரைப்படம் என்கிற பெருமையுடையது இந்த ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ என்னும் திரைப்படம்.

தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் ஒரே நாளில் தியேட்டர் ரிலீஸ் மற்றும் டிவிடி ரிலீஸ் என்கிற திட்டத்தை ஏற்க மறுத்து, இப்படத்தை தியேட்டரில் வெளியிட மறுத்துவிட்டதால் டிவிடியில் மட்டுமே ரிலீஸாகியிருக்கிறது.

நாயகன் சர்வானந்த் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். 2 தங்கைகள் 1 தம்பி என்று கொஞ்சம் பெரிய குடும்பம். அப்பா ரிட்டையர்டு ஆபீஸர்.. இவர்தான் இனிமேல் சம்பாதித்து வீட்டைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கட்டாயம்.. ஆனால் கொஞ்சம் பொறுப்பில்லமாமல் இருக்கிறார். பேசுகிறார். நடந்து கொள்கிறார். அம்மாவின் அனுசரணையான பேச்சினால் அப்பாவுக்கும், மகனுக்குமான மோதல் ஒரு கட்டுக்குள் இருக்கிறது..!

அலுவலக நேரம் போக மீதி நேரத்தில் பெரும்பாலும் பேஸ்புக் மூலமாக மொக்கை போடுவதிலும், ஊர் சுற்றுவதிலும் இருக்கும் சர்வானந்தின் போக்கில் திடீரென்று ஒரு மாற்றம்.  வேலையை விடுகிறார். சொந்தமாகத் தொழில் செய்யப் போவதாகச் சொல்லி வீட்டை அழகுபடுத்தும் திட்டத்தைத் துவக்குகிறார். இதற்கு அமோக வரவேற்பு கிடைக்க அதனை தனது நெருங்கிய தோழியான நித்யா மேனன் மற்றும் சந்தானம் உட்பட சில நெருங்கிய நண்பர்கள் துணையுடன் ஒரு மிகப் பெரிய நிறுவனமாக மாற்றுகிறார்.

அடுத்து பொக்கேக்கள் தயாரிக்கும் நிறுவனத்தைத் துவக்குகிறார். இதுவும் நன்றாகவே போகிறது. அடுத்து கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தைத் துவக்குகிறார். எப்போதும் கன்ஸ்ட்ரக்சன் துறையில் முன்னணியில் இருக்கும் பிரகாஷ்ராஜ் சர்வானந்துக்கு செக் வைக்கிறார். பதிலுக்கு மோதலைத் தொடராமல் அவரிடத்தில் இருந்து நஷ்டஈடாக கோடிகளில் பணத்தைப் பெற்றுக் கொண்டு இடத்தை விட்டுக் கொடுக்கிறார்.

இடையில் நித்யா மேன்னுக்கு பிறந்ததில் இருந்தே இருக்கும் இதயப் பிரச்சினைக்காக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய உதவுகிறார். அதுவரையில் தயக்கத்துடன் இருக்கும் நித்யாவுக்கு சர்வானந்த் மீது தீர்மானமாக காதல் பிறக்கிறது. ஆனால் சர்வானந்த் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதாக திரைக்கதை சொல்கிறது.

இடையில் திடீரென்று நித்யாவை அழைத்துக் கொண்டு ஒரு கிராமத்திற்கு செல்கிறார். அங்கேயிருக்கும் தன்னுடைய அலுவலக நண்பனின் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் சொல்லி பண உதவி செய்கிறார். அவர்களுடைய விவசாய நிலத்தில் பூக்களை அறுவடை செய்து கொடுத்தால் தானே மொத்தமாக பெற்றுக் கொள்வதாகக் கூறுகிறார் சர்வானந்த்.

இந்த நண்பனுக்கு ஏன் உதவி செய்ய வேண்டும் என்று நித்யா கேட்கும்போது இந்த பிளாஷ்பேக் விரிகிறது.. சென்ற வருட புத்தாண்டு தினத்தன்று குடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது ஏற்படும் ஆக்ஸிடெண்ட்டில் அந்த நண்பன் இறந்துவிட.. அவர்கள் குடும்பம் நிர்க்கதியாய் இருப்பதைச் சொல்கிறார் சர்வானந்த்.

இதே விபத்தின்போது ஏற்பட்ட தலைக்காயத்தால் சர்வானந்துக்கும் ஒரு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இதைத்தான் கொஞ்சம் சஸ்பென்ஸாக வைத்திருந்து கிளைமாக்ஸில் சொல்லியிருக்கிறார்கள்.

எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கும்போது திடீரென்று சர்வானந்த் தன்னுடைய அப்பா, அம்மா, தங்கைகள், தம்பிக்கு வேண்டிய பண உதவிகளுக்கெல்லாம் வழி செய்து வைத்துவிட்டு கம்பெனி சொத்துக்களை நண்பர்களுக்கு பிரித்து பங்களித்துவிட்டும் தான் மட்டும் தனியே டூர் செல்ல முடிவெடுத்து கிளம்புகிறார். இந்தப் பிரிவுக்கான காரணம் என்ன என்பது நித்யாவுக்கு மட்டுமே தெரிகிறது.

இதன் பின் என்ன ஆகிறது என்பதுதான் படமே..!

குத்தாட்டம் இல்லை. தொப்புள் காட்டும் நடனம் இல்லை.. ஆபாச காட்சிகள் இல்லை. இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை. டாஸ்மாக் கடையையே காட்டவில்லை.. இதெல்லாம் இல்லையென்றாலே அந்தப் படம் ‘நல்ல’ அல்லது ‘சிறந்த’ படமாகிவிடுமா..?

அண்ணன் சேரனுக்கு என்னாச்சு என்று தெரியவில்லை. ‘பொக்கிஷம்’ படத்திலும் இதையேதான் செய்தார். இப்போதும் இதே தவறுதான்..! அண்ணன் கரு.பழனியப்பனுக்கு ஒருவிதத்தில் அண்ணனாகிவிட்டார் சேரன். அது பொது அறிவை ரசிகனுக்குள் புகுத்துவது.. நிறையவே இதில் கிடைத்திருக்கிறது. கொடுத்த 50 ரூபாய் இதற்கே சரியாகிவிட்டது. நித்யா மேனனுக்காக தனியாக கேட்காமல் விட்டாரே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்..!

“வீடு, புத்தகம், சுத்தம், சுகாதாரம், அழகுக் கலை, கம்பெனிகள், நிபுணத்துவம், ஒழுங்கு, குடும்ப உறவுகள்.. அண்ணன்-தங்கை பாசம்.. காதலை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்வது.. எத்தனை கஷ்டம் வந்தாலும் கடமையை மறக்காமல் இருப்பது.. காலத்திற்கேற்றாற்போல் மாறிக் கொள்வது..” என்று வீட்டுக்கும், நாட்டுக்கும் தேவையான அனைத்து விஷயங்களையும் இந்த ஒரு படத்திலேயே கொடுத்திருக்கிறார் இயக்குநர் சேரன். இத்தனையையும் ஒரே படத்திலென்றால் சாதாரண சினிமா ரசிகனால் தாங்க முடியுமா..?

சர்வானந்த் தெலுங்கு முகம். தெலுங்குக்கும் மார்க்கெட்டிங் செய்யலாம். இந்தப் பக்கம் நித்யா மேனன் மலையாளத்தில் மார்க்கெட்டிங்கை ஈஸியாக செய்யலாம்.. தமிழுக்கு சந்தானம் இருக்கிறார். கூடவே ஜி.வி.பிரகாஷும் இருக்கிறார். சேரன் என்கிற மிகப் பெரிய பிராண்ட் பெயரும் இருக்கிறது. பிறகென்ன என்ற அலட்சிய நோக்கத்தில் திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்தாமல்விட்டுவிட்டார் இயக்குநர் சேரன்.

முற்பாதியில் ஆமை வேகத்தில் நகரும் திரைக்கதைதான் படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட். ஆயினும் புதிய, புதிய தகவல்கள் கிடைப்பதாலும், நாம் தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருப்பதாலும் ஆர்வமுள்ளவர்கள் நிச்சயம் பார்ப்பார்கள் என்று நம்பலாம். விபத்து ஏற்படும் காட்சியை தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார்கள். நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

சர்வானந்த் சிறப்பாகவே நடித்திருக்கிறார். சாதாரணமாகவே வேறு வேலைக்கு போயிருக்கிறார் போலும் என்று நினைக்க வைத்து திடுக்கென்று அந்த விபத்து காட்சியை விவரித்துச் சொல்லிவிட்டு பின்பு அவரது நடிப்பும், மேனரிஸமும் மாறும்போது நல்ல நடிப்பு என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

நித்யாவின் வீட்டிற்குள் வந்து அனுமதி கேட்காமல் பலதையும் இடம் மாற்றி வைத்து டென்ஷனை ஏற்றிக் கொண்டே செல்லும் காட்சியில் சைக்கோவா.. ஏன்.. எதற்கு என்றெல்லாம் கேட்க வைத்திருக்கிறார்..! அலட்டல் இல்லாத ஹீரோயிஸம்.. கண்ணீரைக் கொட்டி அனுதாபத்தைத் தேடாமல் இன்றைய இளையஞனுக்கு ஒரு உதாரணமாக்கிக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சேரன்.

நித்யா மேனன் ஏற்கெனவே அழகி. இதில் இன்னும் கொஞ்சம். படபட.. துறுதுறு என்ற இவரது கண்கள் பேசும் வார்த்தைகளும், நடிப்பும் ஓஹோ..! சர்வானந்தை நினைத்து இவர் உருகுவதையெல்லாம் மனதிற்குள்ளேயே வைத்திருக்க வைத்திருப்பது திரைக்கதை என்பதால் இதற்கு மேல் இவரால் என்ன செய்துவிட முடியும்..?  ஆபரேஷனுக்காக வீல்சேரில் அமர வைத்து கொண்டு செல்லப்படும்போது திரும்பி சர்வானந்தை ஏக்கத்துடன் பார்த்தபடியே செல்லும் அந்தக் காட்சி படம் முடிந்த பின்பும் கண்ணுக்குள் நிற்கிறது..!

சந்தானம் இருக்கிறார். இல்லாததுபோலவும் இருக்கிறார். அதிகம் வேலையில்லை. சேரன் படம் என்பதால் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ், ஜெயப்பிரகாஷ், இருவரும் கச்சிதமாக கொஞ்சமாக, இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் ஒலித்தன. பின்னணி இசை இதையும்விட மெல்ல ஒலித்தது.. சித்தார்த்தின் ஒளிப்பதிவை ரசிக்க முடிகிறது. நன்று..!

காதலனாக இல்லாமல் ஒரு நண்பனாகவே கடைசிவரையிலும் தன்னுடன் இருந்து தனக்கு வாழ்க்கையைக் கொடுத்துவிட்டுச் செல்லும் சர்வானந்தை நினைத்துப் பார்க்கும் நித்யா மேனனின் பார்வையில்தான் கதை இருப்பதாக படத்தின் டைட்டில் சொல்கிறது.

காதலன்-நண்பன் என்கிற இந்தக் குழப்பத்துடன் நிறைய படங்கள் வந்து வந்த வேகத்தில் பெட்டிக்குள் போயிருக்கின்றன. நமது ரசிக மகா ஜனங்கள் எப்போதும் இது போன்ற ‘பிப்டி பிப்டி’ வேலையையெல்லாம் ஒத்துக்கவே மாட்டார்கள். கட் அண்ட் ரைட்டாக “லவ் பண்றியா.. பண்ணு.. இல்லையா.. நடையைக் கட்டு..” என்பதுதான் அவர்களுக்குப் பிடிக்கும்.

குடும்பத்துக்காக.. பொறுப்பாக வாழ்ந்த ஒரு இளைஞனின் கதையாக இதனை எடுத்துக் கொள்வதுதான் நமக்கு சாலச் சிறந்தது. அந்த வகையில் இன்றைய இளைஞர்களுக்கு புதிய பாடம் ஒன்றை இந்தப் படத்தின் மூலம் கொடுத்திருக்கிறார். நன்றிகள் சேரனுக்கு..  

‘ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை’ புரிந்தவர்களுக்கொரு பாடம்..

 

Our Score