full screen background image

செல்போன் தொழில் நுட்பத்தை மையமாகக் கொண்டு உருவாகும் ‘ஜிகிரி தோஸ்த்’ திரைப்படம்!

செல்போன் தொழில் நுட்பத்தை மையமாகக் கொண்டு உருவாகும் ‘ஜிகிரி தோஸ்த்’ திரைப்படம்!

இயக்குநர் ஷங்கரிடம் ‘எந்திரன் 2.0’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய வி.அரனின் நடிப்பு, தயாரிப்பு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜிகிரி தோஸ்த்’.

பிரதீப் ஜோஸ்.கே மற்றும் அரன்.வி இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பை எஸ்.பி.அர்ஜுன் மற்றும் ஹக்கா.கே செய்துள்ளனர். 

இந்த ஜிகிரி தோஸ்த்’ திரைப்படத்தில் ‘பிக்பாஸ்’ புகழ் ஷாரிக் ஹசன், ட்சசன்’, ‘அசுரன்’ படப் புகழ் அம்மு அபிராமி, வீ.ஜே.ஆஷிக், பவித்ரா லஷ்மி, அனுபமா குமார், கௌதம் சுந்தர்ராஜன், சிவம், ஜாங்கிரி’ மதுமிதா, R.N.R.மனோகர், சரத், ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் ஆகியோர நடித்துள்ளனர்.

தயாரிப்பு – வி.அரன், பிரதீப், அர்ஜூன், இசை – அஷ்வின் விநாயகமூர்த்தி. ஒரு கிடாயின் கருணை மனு’, ‘விழித்திரு’ படப் புகழ் R.V.சரண் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அருண் மொழி வர்மன் படத் தொகுப்பு செய்ய, மகேஷ் மேத்யூ சண்டைப் பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். தினா நடன இயக்கம் செய்கிறார். ‘KRAFTS WORKS’ நிறுவனம் DI மற்றும் CG செய்கிறது. ஒலியமைப்பினை சரவணகுமார் மேற்கொள்ள.. சுதன் பாலா பாடல்களை எழுதுகிறார்.

தொழில் நுட்பத்தை மையப்படுத்திய, விறுவிறுப்பான, பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் தயாரிப்புப் பணிகள் முழுவதும் முடிவடைந்து, தற்போது வெளியீட்டுக்கான பணிகளில் படக் குழு ஈடுபட்டுள்ளது.

இதையொட்டி இயக்குநர் வி.அரன், ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி உள்ளிட்ட படக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

நடிகர் கெளதம் சுந்தரராஜன் படம் பற்றிப் பேசும்போது, “ஏற்கெனவே இயக்குநர் அரன் இயக்கிய ஒரு குறும் படத்தில் நான் நடித்திருக்கிறேன். அந்த குறும் படம் என்னை வெகுவாக கவர்ந்தது. காரணம், அதில் உள்ள விசயங்கள் அனைத்தும் பாசிட்டிவாக இருந்ததுதான். அதைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் நடித்திருக்கிறேன்.

இந்தப் படமும் பாசிட்டிவான படம்தான். சிகரெட் புகைப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளே இல்லாமல், அனைத்துமே நல்ல விசயங்களை கொண்ட படமாக இது இருக்கும்.

நல்ல விறுவிறுப்பான படமாகவும், அனைத்து தரப்பினரும் பார்க்கக் கூடிய ஒரு பொழுதுபோக்கு படமாகவும் இது உருவாகியிருக்கிறது. படத்தில் பங்களித்திருப்பவர்கள் பலரும் புதுமுகம் மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்கள். பத்திரிகையாளர்கள் இவர்களுக்கு ஆதரவளித்து கை தூக்கிவிட வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார்.

இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் வி.ஜே.ஆஷிக் படம் குறித்து பேசும்போது, “நான் இப்போது நிறைய படங்களில் நடித்து வருகிறேன். ஆனால், இந்தப் படம் எனக்கு மிக முக்கியமான படம். காரணம் படம் முழுசும் நான் இருக்கேன். நாம உண்டு.. நம்ம வேலையுண்டு.. தேவையில்லாத பிரச்சினையில் தலையிடக் கூடாது என்று நினைக்கும் ஒரு கதாபாத்திரம். அதே சமயம், பிரச்சினையில் இருக்கும் நண்பர்களை விட்டுவிட்டுப் போக மனம் இல்லாமல், அவர்களுடனேயே இருக்கும் ஒரு கேரக்டர்.

ஹீரோவின் நண்பன் வேடம் என்றாலும் திரைக்கதையில் எனக்கும் முக்கியத்துவம் இருக்கும். முழு படமும் விறுவிறுப்பாக பயணிக்கும். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் போல தொழில் நுட்பத்தை மையப்படுத்தி, விறுவிறுப்பான திரைக்கதையில் இந்தப் படம் உருவாகியுள்ளது.” என்றார்.

நாயகி அம்மு அபிராமி படம் குறித்து பேசும்போது, “நான் முன்னணி வேடங்களில் நடிக்க தொடங்கிய நேரத்தில்.. நல்ல நல்ல கதைகள் வராதா என்று எதிர்பார்த்த நேரத்தில்தான் இந்தப் படத்தின் வாய்ப்பு கிடைத்தது. ஹீரோயின் என்பதையும் தாண்டி, ஹீரோ மற்றும் அவரது நண்பர்களுடன் நானும் ஒரு நண்பியாக நடித்ததுதான் இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

நான் ஷாரிக்கின் காதலியாக நடித்திருந்தாலும், என்னுடைய வேடத்திற்கு என்று தனித்துவமான விசயம் இருக்கும். அதில் ஒரு சிறிய திருப்புமுனையும் இருக்கு. அதை இப்போது சொல்ல முடியாது. படத்தை பார்த்தால் நிச்சயமாக அது உங்களுக்குப் பிடிக்கும்.

தீவிரவாதம், தொழில் நுட்பம், கடத்தல் என்று பல விசயங்கள் இந்தப் படத்தில் இருக்கு. அவை அனைத்தும் திரைக்கதையில் அழகாக ஒன்று சேர்ந்து படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறது. வளரத் துடிக்கும் இளைஞர்களின் குழுவாக நாங்கள் உங்கள் முன் வந்திருக்கிறோம். உங்களுடைய ஆதரவு இருந்தால் இந்தப் படம் நிச்சயம் மக்களிடம் சென்றடையும்.. ஆதரவு கொடுங்கள்..” என்றார்.

நாயகன் ஷாரிக் ஹாசன் படம் பற்றிப் பேசும்போது, “பிக்பாஸை முடித்துவிட்டு வந்தவுடன் இந்தக் கதையை அரன் என்னிடம் கூறினார். கதை சொன்னபோதே, ஜாலியாக இருந்தது. “மூன்று நண்பர்கள் அவர்களுடைய ஜாலியான வாழ்க்கை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகள்தான் கதை” என்றார். எனக்கும் அது பிடித்திருந்ததால் நடித்தேன்.

முதலில் என்னிடம் “இந்தப் படத்தின் தலைப்பு ஜே.டி.” என்றார் அரன். ”ஜே.டி.” என்றதும் நான் நிறைய யோசித்தேன்.. சரக்கு பெயராக இருக்குமோ என்றுகூட யோசித்தேன். ஆனால், “அதுவெல்லாம் இல்லை.. ‘ஜிகிரி தோஷ்த்’ என்ற பெயரின் சுருக்கம்தான் ஜே.டி.” என்றார். மேலும்,  “சரக்கடிப்பது போன்ற காட்சிகள் படத்தில் எதுவும் இல்லை” என்றார். “அப்ப ரொம்ப நல்லதா போச்சு… வாங்க உடனே ஆரம்பிக்கலாம்” என்று சொல்லிவிட்டேன்.

இந்தப் படத்தின் பலமே திரைக்கதைதான், அரன் என்னிடம் சொன்னதைவிட படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார். நிச்சயம் இந்த படம் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன்…” என்றார்.

இயக்குநரும், நடிகருமான வி.அரன் இந்தப் படம் குறித்து பேசும்போது, “நான் ஷங்கர் சாரிடம் 2.0 படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறேன். சில குறும் படங்களையும் இயக்கி இருக்கிறேன். அந்தப் படங்கள் சைமா உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளது.

என்னுடைய குறும் படத்தை பார்த்துவிட்டுதான் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரதீப் சார் “வாங்க.. படம் பண்ணலாம்” என்று அழைத்தார். அதன்படி, பிரதீப் சார், என்னுடைய நண்பர் அர்ஜுன் ஆகியோருடன் இணைந்து இந்தப் படத்தை நான் தயாரித்துள்ளேன்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அஷ்வினும் என்னுடைய நண்பர்தான். அதனால், ஜிகிரி தோஸ்த்துகளான நாங்கள் சேர்ந்துதான் இந்த ‘ஜிகிரி தோஸ்த்’ படத்தை உருவாக்கியிருக்கிறோம்.

பொறியியல் கல்லூரி மாணவரான நான் ஒரு டிவைஸை கண்டுபிடிக்கிறேன். அதன் மூலம் 500 மீட்டர் சுற்றளவில்  நடக்கும் செல்போன் உரையாடல்களை ஒட்டு கேட்க முடியும். அப்படி நான் கண்டுபிடித்த அந்த தொழில் நுட்பத்தைச் சுற்றித்தான் கதை நகர்கிறது.

இடையில் கல்லூரி நண்பர்களின் ஜாலியான வாழ்க்கை, அந்த டிவைஸினால் ஏற்படும் பிரச்சினைகள்.. அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாகவும், பரப்பாகவும் சொல்லியிருக்கிறேன்..” என்றார்.

இந்தப் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்பதற்கு முன்பாகவே இந்தப் படத்தை பார்த்த முன்னணி சேனல் ஒன்று ’ஜிகிரி தோஸ்த்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score