full screen background image

ஜிகர்தண்டா – சினிமா விமர்சனம்

ஜிகர்தண்டா – சினிமா விமர்சனம்

இந்த வருடத் துவக்கத்தில் இருந்தே கேங்ஸ்டர் படங்களாகவே வந்து கொண்டிருக்கின்றன. இவை அனைத்துக்கும் முத்தாய்ப்பாக வந்திருப்பதுதான் இது.

‘பீட்சா’ கொடுத்த வெற்றியினால் எங்கே அந்த கார்த்திக் சுப்புராஜ் என்று கோடம்பாக்கம் கொடுவாள் மீசையோடு தேடிக் கொண்டிருந்தது.. அடுத்தப் படம் எப்படியிருக்கிறது என்று பார்த்துவிடுவோம் என்று மீடியாக்களும் காத்திருந்தன. இருவருக்குமே செம பைட் கொடுத்திருக்கிறார் கார்த்திக்.

‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் தனது படம் எலிமினேட் செய்யப்பட்டதால் சோகப்படும் சித்தார்த்துக்கு, அந்த நிகழ்ச்சியின் நடுவராக வந்த ஒரு தயாரிப்பாளர் தான் படம் பண்ண வாய்ப்பு தருவதாகச் சொல்ல சந்தோஷம் பிய்த்துக் கொண்டு வருகிறது. ஆனால் தயாரிப்பாளரோ எதையோ சொல்லி அனுப்பி வைக்க வேண்டுமே என்பதற்காக ‘நல்ல கேங்ஸ்டர் படம் எடுக்கணும்ப்பா.. அதைப் பத்தி ஒரு நல்ல கதை பண்ணிட்டு வா’ என்று சொல்லி அனுப்பிவிட.. நிசமாகவே அதனை சீரியஸாகவே செய்யத் துவங்குகிறார் சித்தார்த்.

அவருடைய பத்திரிகையாளர் மாமாவின் உதவியால் மதுரையின் பிரபல தாதா கும்பல் தலைவன் சேதுவை பற்றி பாடம் படிக்க மதுரைக்கு வருகிறார் சித்தார்த். ஒரு புல் பாட்டிலையும், “நீதான் படத்துல செகண்ட் ஹீரோ…” என்று வாய்மொழி உத்தரவாதத்தையும் நம்பி சித்தார்த்தின் நண்பன் கருணாகரன் தன் வீட்டில் இடம் கொடுத்து உதவிகள் செய்ய, சேது பற்றிய அஸைண்மெண்ட்டில் இறங்குகிறான் சித்தார்த்.

சேதுவின் அல்லக்கைகள் மூவரை வேறு வேறு வழிகளில் நெருங்கிப் பார்த்தும் முடியாமல் தவிக்க.. இவர்கள் மீது அல்லக்கைகளுக்கு சந்தேகம் வருகிறது.. சேதுவின் அல்லக்கை ஒருவனே இவர்களைத் தேடி உளவு பார்க்க வருகிறான். அவன் மூலமாக சேதுவின் ஒரு கொலை அஸைண்மெண்ட்டை காதால் கேட்கிறார்கள் கருணாவும், சித்தார்த்தும்..

சித்தார்த் மறைமுகமாக செய்திருந்த மைக்ரோ ரிஸீவர் சேது கும்பலில் இருக்கும் ஒரு புத்திசாலி ஆளிடம் சிக்கிவிட இவர்களைத் தேடி வந்து உதைக்கிறார்கள்.. பொலி போடுவதற்குள் உண்மையைச் சொல்லிவிட வேண்டுமே என்றெண்ணி “சினிமா, ஹீரோ.. படம் எடுக்கணும்..” என்று சித்தார்த் உண்மையைச் சொல்ல.. “இதை நம்மகிட்ட நேராவே வந்து கேட்டிருந்தா நானே சொல்லியிருப்பனே..?” என்ற சேது தன் கதையைத் தானே சித்தார்த்திடம் சொல்கிறான்..

எல்லாம் சரியா போய்க்கிட்டிருக்கும்போது சித்தார்த் காதலிப்பதாக நடித்துக் கொண்டிருந்த லட்சுமி மேனனிடம் “காதலை மறந்திரு…” என்கிறான் சித்தார்த். அந்தக் கோபத்தில் அவள் சேதுவையே படத்தின் ஹீரோவாக நடிக்கச் சொல்ல.. அவனும் சந்தோஷமாக சரி என்று சொல்ல.. சித்தார்த்தை மீண்டும் அங்கேயே இருக்க வைக்கிறது..

தயாரிப்பாளர் சென்னையில் இருந்து தூக்கி வரப்படுகிறார். மதுரையில் வைத்து மஞ்சத்தண்ணி தெளித்து.. தீர்த்தவாரி அபிஷேகங்கள் நடக்க.. சேதுவை ஹீரோவாக வைத்து படமெடுக்க ஒப்புக் கொள்கிறார்.. வேறு வழியில்லாமல் சித்தார்த் படத்தை இயக்கித் தர ஒப்புக் கொள்ள.. ஷூட்டிங் துவங்குகிறது..

இவர்களுக்கு நடிப்புச் சொல்லித் தர ஒரு வாத்தியாரையும் வரவழைத்து அவர் மூலமாக இல்லாத நடிப்பை ஏனோதானோவென்று கொண்டு வந்து காட்டி.. ஒரு வழியாக படத்தை எடுத்து முடிக்கிறார்கள்.  ரிசல்ட்.. ஏறுக்கு மாறாக.. சூப்பர் ஹிட்டாக.. சித்தார்த் எடுத்தது முழு நீள காமெடி படம் என்பதையறிந்து கொலை வெறியோடு அவனைத் தேடுகிறான் சேது. தப்பிக்க நினைக்கும் சித்தார்த், சேதுவை மாட்டிவிட செய்த கொலைகளை அவன் வாயாலேயே ஒத்துக் கொண்ட வீடியோக்களை போலீஸிடம் கொடுக்க திட்டமிடுகிறான்.. செய்தானா..? அல்லது சேதுவிடம் மாட்டினானா என்பதுதான் கடைசி 4 ரீல்களில் சொல்லப்பட்டிருக்கும் கிளைமாக்ஸ்..

இது போன்ற தாதா கும்பல் கதைகளில் அடுத்தடுத்து காட்சிகளை விறுவிறுப்பாக வைக்கலாம். ஏனெனில் இது கேங்க்ஸ்டர் கதை. இதில் இப்படித்தான் வைக்க முடியும். இதில் ஒரு சதவிகிதம்கூட இழப்பில்லாமல் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். முதல் பாதி நீளமே தெரியாத அளவுக்கு படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்.

படத்தின் பிற்பாதியில் பல இடங்களில் சிரிக்க வைத்தும், சஸ்பென்ஸ் வைத்தும், இறுக்கமான திரைக்கதையில் பாபி சிம்ஹாவின் அசத்தல் நடிப்பில் மேலும் ஒன்றரை மணி நேரத்தில் உட்கார வைத்து படத்தை வெற்றியடைய வைத்திருக்கிறார் இயக்குநர்.

இதுவரையில் வந்த கேங்ஸ்டர் படங்களில் ‘அஞ்சாதே’ படத்திற்கு பின்பு அவர்களின் உள் அரசியலையும், வாழ்க்கையையும் பிரதிபலித்த படம் இதுதான் என்று சொல்லலாம்.

சித்தார்த்தைவிடவும் பாபி சிம்ஹாவின் அதகளம்தான் படத்தில் அதிகம்.. மனிதர் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ச்சும்மா சாதாரணமான ஒரு காட்சியைக்கூட தனது நடிப்பால் கவர வைத்திருக்கிறார். சேகரின் வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டு பேசுகின்ற அந்த ஒரு காட்சியே போதும்.. இன்னுமொரு 25 படங்களில் நடிக்க வேண்டிய நடிப்பை ஒரே படத்தில் காட்டிவிட்டார் சிம்ஹா..

சித்தார்த்கூட செகண்ட் ஹீரோவாகத்தான் செய்திருக்கிறார்.. என்னதான் அவர் முயற்சி செய்தாலும் மதுரைக்கு அன்னிய முகமாகவும், இந்தப் படத்துக்கும் பொருத்தமில்லாதவராகவும்தான் தெரிகிறார்.. ஆனால் இப்போதைக்கு கோடம்பாக்கத்தில் இளைய தலைமுறை இயக்குநர்களிடம் நெருக்கமாக இருப்பதால் இவரைவிடவும் மாட்டார்களே..?

லட்சுமி மேனன் ச்சும்மா ஒரு அழகுக்கும்.. பேருக்குமாக வந்து செல்கிறார்.. பாடல் காட்சிகளிலாவது இவரை பயன்படுத்தியிருப்பார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை.. ஆனால் ஒரு காட்சியில் ஆடியன்ஸையும் பதற வைத்திருக்கிறார். அது சேதுவுக்கு ரொமான்ஸ் கிளாஸ் எடுக்கும்போது சித்தார்த் வேண்டுமென்றே லட்சுமியை மாட்டிவிட கீழே அமர்ந்த நிலையில் தான் இன்னமும் சித்தார்த்தை காதலிப்பதாகச் சொல்லும் காட்சி.. மிக அழகான இயக்கம். ஆனால் இப்போதும் சித்தார்த் லட்சுமியை காதலிக்கவில்லையே..?

கருணாகரன்.. பாட்டிலை பார்த்து ஜொள்ளுவிடும் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் உடன் இருந்து படத்தை நகர்த்த உதவியிருக்கிறார்.. அவ்வப்போது இவர் எடுத்துவிடும் கடி ஜோக்குகள் பரவாயில்லை ரகம்.

ஒளிப்பதிவும், இசையும் படத்தில் இன்னுமிரண்டு கேரக்டர்களாக வந்திருக்கின்றன.. “பாண்டி நாட்டு” பாடல் காட்சியில் கேமிரா காட்டியிருக்கும் வித்தையும், நடனமும் பிற்பாதியின் திரைக்கதையை கொஞ்சம் தூக்கி நிறுத்தியிருக்கிறது. அந்தப் பாடலின் முடிவிலேயே ஒரு காட்சியைத் திணித்து படத்தின் டர்னிங் பாயிண்ட்டுக்கு வித்திட்டிருப்பது இயக்குநரின் பெரும் சாமர்த்தியம்.. கங்கிராட்ஸ் கார்த்திக்..

சந்தோஷ் நாராயணனின் இசை வேறுவிதமாக இருக்கிறது.. இந்த இடத்தில் இதுதான் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூழலில் வேறொன்றை வைத்து இசையைப் பற்றிய நினைக்காமலேயே செய்துவிட்டார். இருந்தும் இல்லாத மாதிரி.. கிளைமாக்ஸில் பன்றிமலை அருகே நடக்கும் காட்சியில் சிம்ஹாவின் அந்த உணர்ச்சிகரமான பேச்சுக்கு பின்னணியில் எந்தத் தடங்கலும் இல்லை.. மனதைத் தொட்டது.. கதவுக்கு வெளியே சித்தார்த் நின்று ரசிகர்களின் கரவொலியை கேட்டு சந்தோஷப்படும் காட்சியில் நம்மையும் சந்தோஷப்பட வைத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.. இது போலவே மெதுவாக இசையை போட்டு நம் காதுகளை பஞ்சராக்காமல் விட்டதற்கு நன்றி..!

படத்தில் புத்திசாலித்தனமான காட்சிகள்தான் அதிகம்.. அந்த முதல் காட்சியில் ‘மலர்ந்தும் மலராத பாட்டின்போதே’  சேது சுட்டுக் கொல்லப்படுவது போன்ற காட்சி..  இந்தக் காட்சி மீண்டும் கிளைமாக்ஸில் வந்து கதையை மாற்றுவது.. கருணாகரனுக்கு பாட்டிலை அறிமுகப்படுத்தும் காட்சி.. லட்சுமி மேனன் சேலை திருடும் காட்சி.. சேதுவின் அல்லக்கைகளின் கேரக்டர் ஸ்கெட்ச்.. அதிலும் ஒருவனின் பிட்டு பட ஆர்வம்.. அந்தக் குட்டு வெளிப்பட்டவுடன் தொடர்ச்சியாக வரும் சிரிப்பலை காட்சிகள்.. சங்கிலிமுருகனின் கேரக்டர்.. தன் அல்லக்கை ஒருவன் போட்டுக் கொடுக்கிறானா என்பதை கண்டறிய செய்யும் கொலை ஸ்கெட்ச்.. வீட்டுக்குள் ஒருவனை கொலை செய்ய முடிவெடுத்த நிலையில், நான் செய்றேன் என்று ஒருவன் முந்திக் கொண்டு ஆர்வப்படுவது.. தியேட்டரில் சிம்ஹாவை கொலை செய்ய நடக்கும் முயற்சி.. இதுவரையிலும் ரொமான்ஸையே நினைத்துக் கூட பார்த்திராத சேதுவின் கேரக்டர் ஸ்கெட்ச்.. இவர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் ஐடியா.. படத்தின் மேக்கிங் எப்படியிருக்கிறது என்பதை ஆடியன்ஸூக்குக்கூட சொல்லாமல் கடைசிவரையில் சஸ்பென்ஸாகவே வைத்திருந்த்து.. ரசிகர்களின் கை தட்டலை கதவுக்கு வெளியே நின்று கேட்டு சித்தார்த் சந்தோஷப்படுவது.. தயாரிப்பாளரிடம் ஏன் ஸார் அழுகுறீங்க என்று அப்பாவியாய் கேட்டு அந்தக் காட்சியை கட் செய்து இன்னொரு இடத்தில் இணைத்துக் காட்டுவது.. படம் சூப்பர் ஹிட் என்றானவுடன் தயாரிப்பாளர் வெளிநாடு செல்வதாகச் சொல்லி தப்பிப்பது.. தன்னை காமெடியாக்கிவிட்டார்களே என்று நினைத்து சேது கோபப்படுவது..  10 வருடமாக பேசாத அவனது தாயார் தண்ணி கொண்டு வாப்பா என்று கேட்பது.. மக்கள் சேதுவை ரசிப்பது.. சாவு வீட்டிலும் தன்னை விசாரிப்பது.. குழந்தை முதற்கொண்டு தன்னை விரும்புவது இந்த ஒரு படத்தின் மூலம் என்று நினைத்து மனம் மாறியதைக்கூட காட்டாமல் கிளைமாக்ஸில் சோமசுந்தரத்தின் பாடத்தின் மூலமாக விளக்குவது.. வினோதினியின் கேரக்டர்.. சேதுவுடனான அவர்களின் இறுதித் தொடர்பு.. சித்தார்த்-லட்சுமி மேனன் காதல் முடிவு.. என்று இந்தப் படத்தின் சுவாரஸ்யங்கள் பலவும் அடுத்தடுத்த ரீல்களில் வந்தபடியே இருந்ததால் கடைசிவரையிலும் சீட்டில் உட்கார முடிந்தது..

ஆனால் லாஜிக்..?

இதில் எதுக்குங்க லாஜிக் என்றால்.. நாளைய இயக்குநர் நிகழ்ச்சி முதல் சினிமா தயாரிப்பதுவரையில் காட்டிய பின்பு கேட்காமல் எப்படியிருக்க முடியும்..?

திரைப்படத் துறையைப் பற்றியெடுத்திருப்பதை லாஜிக்கோடுதான் பார்க்க முடியும்.. இது ச்சும்மா காமெடிக்கு என்று எப்படி விட்டுச் செல்வது..?

லோக்கல் போலீஸ் வீடு தேடி வந்து விசாரித்தவிட்டு அவர்கள் இல்லீகலாக சம்பாதித்த பணத்தை சேதுவிடம் கொடுத்து ரொட்டேஷன் விட்டு வரும் பணத்தில் கமிஷனை எடுத்துக் கொள்ளும்படி கேட்பதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மைத்தனம்.. இவ்வளவு உண்மையிருக்கும்போது லாஜிக் பார்க்கக் கூடாதா..?

கார்த்திக்கிற்கு யார் மீது கோபம் என்று தெரியவில்லை.. மாற்று சினிமா ரசிகர்களுக்கும், தியேட்டர் சினிமா ரசிகர்களுக்குமான மோதலை ‘நாளைய இயக்குநர்’ பஞ்சாயத்திலேயே காட்டிவிட்டார்.. நாசரின் கோபத்திலும், ‘ஆடுகளம்’ நரேனின் பதிலிலும் இதற்கான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்கள்.. உண்மைதான்..

எந்த ஊர் தாதா கும்பலின் தலைவன் இந்த சேது போல கேணையனாக இருக்கிறான்..? மதுரையில் ஒருவன் இப்படி கிண்டல் செய்யும் அளவுக்கு இருப்பானா..? ஜூனியர்விகடன் பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரைக்காக அக்கட்டுரையை எழுதிய பத்திரிகையாளனை தீயிட்டுக் கொழுத்தியது சேதுவின் வாழ்க்கையில் மிகப் பெரிய கிரைம். இதற்குப் பின்பும் இதனை ச்சும்மா சாதாரணமான தற்கொலை என்று முடிவு கட்டி மூடிவிட முடியுமா..? முடிந்திருக்குமா..?

எந்த தாதா கேமிரா முன்பாக தான் செய்த அனைத்து கொலைகளையும் ஒத்துக் கொள்வான்..? பேனா பத்திரிகையாளரிடம் பேசும்போதே காந்திக்கு அடுத்த வாரிசு நான்தான் என்பார்கள்.. இதில் கேமிரா முன்பாக எல்லாவற்றையும் சொல்கிறாராம்..! நம்ப முடிகிறதா..? அவ்வளவு முட்டாளா இந்த சேது..?

ஏதோ அரிவாள் வெட்டு என்றால்கூட பரவாயில்லை.. துப்பாக்கியை வைத்து பொசுக்.. பொசுக்கென்று சுட்டுத் தள்ளிவிட்டு போலீஸ் வரவே வராது என்றால் எப்படி..?

சேதுவின் வாழ்க்கைக் கதையில் வந்து செத்துப் போகும் பாலாசிங்கும், மற்றொரு நடிகரும் கடைசியாக மீண்டும் சேதுவின் படத்திலேயே நடிக்க வருவது போல வைத்திருப்பது ஏனோ..?

செளராஷ்டிரா இனத்தைச் சேர்ந்த லட்சுமி மேனன் கடைகளில் போய் புடவை திருடுகிறார் என்று தைரியமாகச் சொல்லியிருக்கிறார் கார்த்திக். செளராஷ்டிரா இனத்துக்கார்ர்கள் இன்னமும் படம் பார்க்கவில்லையோ..? இந்த ஹீரோயினும் சாதா சினிமா ஹீரோயின் மாதிரியே பார்த்தவுடன் லவ்வாகி விழுக.. சித்தார்த்துக்குத்தான் ஒரு காரணம் கிடைக்கிறது.. லட்சுமியின் அம்மா அம்பிகாதான் சேதுவுக்கு சமைத்துப் போடுகிறார் என்பது.. இப்படி கதைக்கு வசதியாக திரைக்கதையையும் எழுதியிருக்கிறார்.

கொல்லப்பட்ட அல்லக்கையின் பாக்கெட்டில் இருந்து விழுகும் கேமிராவை கையில் எடுக்கும் சவுந்தர்ராஜன், அதனை பின்பக்கம் திருப்பி டோப்போவை கழட்டி மைக்ரோ ரிசீவரை வெளியில் எடுத்துப் பார்க்க அந்தக் காட்சியில் என்ன கட்டாயம் இருக்கிறது..? இது வலிந்து திணிக்கப்பட்ட திரைக்கதை.. இடைவேளைக்கு கார்டு போட வேண்டியிருப்பதால் எப்படியாவது சீக்கிரமாக கனெக்சனை கொடுத்துவிட நினைத்து இதனைச் செய்திருக்கிறார் இயக்குநர்..

சேது படத்தில் தானே நடிக்க விரும்புவது ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் இவர்களுக்கு நடிப்புச் சொல்லிக் கொடுக்க ஒருவர் வருவதும்.. அவர் இவர்களை அடிப்பதும், உதைப்பதும், கன்னத்தில் அடிப்பதுமாக இருக்க.. இதனை அவர்கள் சினிமாவுக்காக தாங்கிக் கொள்வதுமான திரைக்கதையை, இப்போதைய உண்மையான கேங்ஸ்டர்கள்கூட ஒத்துக் கொள்ள மாட்டார்கள்..

இவ்வளவு சீரியஸாக கட்டப் பஞ்சாயத்து, அடிதடி வெட்டு குத்து கொலை என்று போய்க் கொண்டிருந்தவர்களை மனம் மாற்றி சினிமாவுக்குள் திணித்துவிட்ட கதையை காமெடியாகவே எடுக்கிறார்கள் என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான் மிகப் பெரிய காமெடி.. இயக்குநரின் சாமர்த்தியத்தை ரொம்பவே பாராட்ட வேண்டும்..!

இத்தனை பெரிய தயாரிப்பாளரை மதுரைக்குக் கொண்டு வந்து தூக்கிப் போட்டு மிதித்து படத்தைத் தயாரிக்க வைக்க முடியுமா..? இது திரைப்பட தயாரிப்பாளர்களை அவமானப்படுத்துவது போலல்லவா இருக்கிறது..? தாதாக்களின் பிடியிலா சினிமாவுலகம் இருக்கிறது..? பணக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் தாதாக்களுக்கு கட்டுப்படுபவர்களா..? இப்படி நாமளே படமெடுத்தால் வெளியில் இருப்பவர்கள் சினிமாக்காரர்களை எப்படி மதிப்பார்கள்..? டைட்டிலில் மதுரை அன்புச்செழியனுக்கு நன்றி கார்டு போட்டிருப்பதையும் கவனித்தோம்..

ஒரு படத்தில் நடித்த சேது, மிகப் பெரிய ஹீரோவாகி தனிக்காட்டு ராஜாவாகிவிட்டார் என்பதுகூட ஓகே..  ஆனால், மிகப் பெரிய நடிகரான விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்குச் சென்று அவரை மிரட்டி பணிய வைப்பது போன்ற காட்சிகளெல்லாம் எந்தவிதத்தில் உண்மைத்தனமானவை..?

இப்போது சித்தார்த்தின் பின்புலத்தில் அதே ரவுடிகள் அணி வகுத்து வருவது போன்றவையெல்லாம் இப்போதைய இயக்குநர்களை அசிங்கப்படுத்துவது போலில்லையா..?  எந்த இயக்குநருக்கு ஒரு ஹீரோவிடம் இப்படி பேசுவதற்கு மனம் வரும்..?

இதையெல்லாம் செய்த பின்பு.. மிரட்டல் விடுத்த பின்பு விஜய் சேதுபதி சித்தார்த்தின் படத்தில் நடிக்க ஒத்துக் கொள்வது போலவும் காட்சிகளை வைத்து நடிகர்களையும் ஒரு வழி பண்ணிவிட்டார் கார்த்திக்.. இவருக்கு யார் மீது கோபமா தெரியவில்லை..?

திரைப்படத் துறையினர் இந்தப் படத்தை எந்தவிதத்தில் அணுகுவார்கள் என்றுதான் தெரியவில்லை..! புரியவில்லை.. அவர்களுக்கு புரியாமலேயே போய்விட்டால் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு சந்தோஷம்தான்..

ஜிகர்தண்டா.. இரவு நேரத்தில் கடும் வெப்பமான சூழலில் சாப்பிடும்போது அது தரும் குளிர்ச்சி அலாதியானது.. அது போலத்தான் இந்தப் படமும்.. முதல் பாதி ரன் வேகமும்.. இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவான வேகத்திலும் ஓடினாலும் இறுதிவரையிலும் நம்மை உட்கார வைத்ததற்கு காரணமான நடிகர்களின் நடிப்புத் திறமை, இயக்குநரின் திறமையான இயக்கம் இரண்டுக்கும் நமது பாராட்டுக்கள்..!

முதல் படத்தில் அடித்த ஸ்கோரைவிடவும் இரண்டாம் படத்தில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக்.. வாழ்த்துகள்..!

Our Score