full screen background image

ஜீனியஸ் – சினிமா விமர்சனம்

ஜீனியஸ் – சினிமா விமர்சனம்

Sudesiwood பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரோஷன் இந்தப் படத்தைத் தயாரித்து இதில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

நாயகியாக பிரியா லால் நடித்துள்ளார். மேலும், ‘ஆடுகளம்’ நரேன், மீரா கிருஷ்ணன், சிங்கம்புலி, வ.ஜ.செ.ஜெயபாலன், சிங்கமுத்து, ஈரோடு மகேஷ், பாலாஜி, ‘போராளி’ திலீபன், ஆதித்யா, யோகேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, இயக்கம் – சுசீந்திரன், வசனம் – அமுதேஸ்வர், ஒளிப்பதிவு – ஆர்.பி.குருதேவ், இசை – யுவன் சங்கர் ராஜா, பாடல்கள், வைரமுத்து, படத் தொகுப்பு – தியாகு, கலை இயக்கம் – ஜி.சி.ஆனந்தன், சண்டை இயக்கம் – அன்பறிவ், நடன இயக்கம் – ஷோபி, லலிதா ஷோபி, உடை வடிவமைப்பு – நிருபமா ரகுநாத், கிராபிக்ஸ் – லோர்வென், ஸ்டூடியோ – கினாக் ஸ்டூடியோஸ், டிஸைன்ஸ் – தண்டோரா, கிரியேட்டிவ் டிஸைன் – வின்சி ராஜ், புகைப்படங்கள் – டி.ரங்காராவ், தயாரிப்பு நிர்வாகம் – கவி சேகர், லைன் புரொடியூஸர் – கே.வி.துரை, நிர்வாகத் தயாரிப்பு – சுகிதன் சக்திவேல், இணை தயாரிப்பு – ராம், சீனி, பாலாஜி, சாமி, ஜெகதீஷ், குணா, மக்கள் தொடர்பு – ஜான்சன்.

ஒரு சின்ன கதைக் கருவை வைத்து திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். இவருடைய ஒவ்வொரு படமும் வேறு வேறு கதைக் களங்களாகவே இருக்கும். இத்திரைப்படமும் அதில் ஒன்று.

பள்ளிப் படிப்பு முக்கியம்தான். அதைவிடவும் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் பொழுது போக்கு அம்சங்களும் மிக முக்கியம். அது அவர்களது மனதை சந்தோஷமாக வைத்திருப்பதுடன், தொடர்ந்து வாழ்க்கையில் ஊக்கத்துடன் செயல்படவும் உதவுகிறது.

“படி, படி.. படி…” என்று அவர்களை போட்டு படுத்தியெடுக்கும் பெற்றோர்களால் இந்த மாணவர்கள் வளர்ந்த பின்பு அவர்களிடத்தில் பேசவே முடியாத சூழல்தான் ஏற்படுகிறது. படிப்புக்கேற்ற வேலை கிடைத்து பறந்து செல்பவர்கள், தான் கஷ்டப்பட்டு படித்ததினால்தான் இந்த நிலைமைக்கு வர முடிந்தது. இனிமேல் பெற்றோர் உட்பட யார் தயவும் தங்களுக்குத் தேவையில்லை என்கிற மனநிலைக்கு வருகின்றனர். இப்போதுதான் பெற்றோர்களும் தாங்கள் செய்த தவறை உணர்கின்றனர்.

இன்னொரு பக்கம் இதனால் பாயிண்ட் பெர்சண்ட்டேஜ் கணக்கில் சில மாணவர்களுக்கு மன நலமே பாதிக்கப்படுகிறது. எப்போதும் அடுத்தவர்களால் ஆட்டுவிக்கப்படுவதையே அவர்கள் விரும்புகிறார்கள். மிகவும் பயப்படுவார்கள். பெற்றோர்களின் ஆலோசனையின்றி அவர்களால் எதையும் செய்ய முடியாது. இப்படிப்பட்டவர்கள் விரைவில் மனச் சிதைவு நோய்க்கு ஆளாவார்கள்.

இப்படியொரு நோயால் பாதிக்கப்படும் ஒருவரின் கதைதான் இந்த ‘ஜீனியஸ்’ திரைப்படம்.

தினேஷ் குமார் என்னும் நாயகன் ரோஷன் சிறு வயதில் இருந்தே நன்கு படிக்கக் கூடியவர். 10-ம் வகுப்பு படிக்கும்போது பள்ளி ஆண்டு விழாவிற்கு பெற்றோர்களும் உடன் செல்ல வேண்டியிருந்ததால் பள்ளிக்கு வருகிறார் ரோஷனின் தந்தையான ‘ஆடுகளம்’ நரேன்.

அங்கே அனைத்து போட்டிகளிலும் முதல் பரிசினை பெற்றிருக்கும் தனது மகனைப் பார்த்ததும் அவரது பார்வை வேறு பக்கம் திரும்புகிறது. இனிமேல் தன் மகனை இன்னும் அதிகமாக படிக்க வைக்கப் போவதாக நினைக்கிறார். இதன்படி அதுவரையிலும் இல்லாத அளவுக்கு மகனுக்கு படிக்கச் சொல்லி டார்ச்சர் செய்கிறார். அனைத்து பாடங்களுக்கும் டியூஷன் வைத்து தூங்குவதற்குக்கூட நேரமில்லாமல் ஆக்குகிறார்.

ஒவ்வொரு விடுமுறைக்கும் ஊருக்குப் போய் தாத்தா, பாட்டியை பார்க்கும் திட்டங்களெல்லாம் ரோஷனுக்கு மறுக்கப்படுகிறது. நேரில் வந்து பார்க்கும் தாத்தா, பாட்டியிடம் பேசக் கூட முடியாத சூழல் ரோஷனுக்கு. கொஞ்சம், கொஞ்சமாக தனிமைப்படுத்தப்படுகிறான். இதற்காக தன்னை பெற்றெடுத்த அப்பாவைக்கூட “நாளைக்கே ஊர் போய்ச் சேரு..” என்று கண்டிப்புடன் சொல்கிறார் நரேன்.

11-ம் வகுப்பில் அதே வகுப்பில் சேரும் பிரிஸில்லா என்னும் மாணவியுடன் நெருக்கமாகிறான் ரோஷன். இருவரும் இணைந்து படித்து வரும் சூழலில், பிரிஸில்லா ஒரு முறை முதல் ரேன்க்கையும், ரோஷன் இரண்டாவது ரேன்க்கையும் எடு்த்துவிட.. தன் மகன் மூலமாக பிரிஸில்லா நன்றாகப் படிப்பதாக நினைத்துக் கொதிக்கிறார் நரேன்.

அந்த நள்ளிரவில் அவர்களது வீட்டுக்குப் போய் “பெண்ணை பழக வைத்து என் பையனை கெடுக்கப் பார்க்குறீங்களா..?” என்று பிரிஸில்லாவின் பெற்றோரிடம் எகிறிக் குதிக்கிறார் நரேன். இதனால் பிரிஸில்லா வேறு பள்ளிக்குப் போய்விட ரோஷனுக்கு வகுப்பில் இருந்த ஒரேயொரு துணையும் பறி போகிறது. வீட்டிலும், பள்ளியிலும் தனிமைப்படுத்தப்படுகிறார் ரோஷன்.

ரோஷனும் அப்பா சொல் பேச்சுக் கேட்டு நல்லபடியாக படித்து முன்னேறி இப்போது கணினி பொறியாளராக வேலை செய்து வருகிறார். எதிர்த்து பேசும் பழக்கமே இல்லாதவரை, அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் தலைவரும் வாட்டியெடுக்கிறார். “நீதான் பெஸ்ட் எம்ப்ளாயி” என்று ஆசை வார்த்தைகளை பேசி 1 மாதத்தில் செய்ய வேண்டிய வேலையை 1 வாரத்தில் முடிக்கச் சொல்கிறார்.

இந்த வேலை ஸ்டிரெஸ் ரோஷனை மயக்கமாக்குகிறது. அதுவே அவரை மன நோயாளியாக்குகிறது. திடீரென்று ஏற்பட்ட இந்தப் பிரச்சினையால் ரோஷனின் அம்மாவம், அப்பாவும் அதிர்ச்சியடைகிறார்கள்.

மருத்துவரின் ஆலோசனையின்படி சிகிச்சையளித்தாலும் மெல்ல, மெல்லத்தான் இயல்பு நிலைமைக்குத் திரும்ப முடியும் என்கிற நிலைமை.

ஒரு கல்யாணத்தை செய்து வைத்தால் ஒருவேளை நல்லபடியாக ஆனாலும் ஆவான் என்று நினைத்து பெண் பார்க்கும் படலத்தைத் துவக்குகிறார்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் எழுந்து ரோஷனை டென்ஷனாக்குகிறது. யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். ஏமாற்றமாகிறார்கள் பெற்றோர்கள். கூடுதலாக ரோஷன் தனியே தனக்குத்தானே பேசிக் கொண்டே இருக்கிறார். இது இப்படியே தொடர்ந்தால் மன நல மருத்துவமனையில்தான் சேர்க்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறார் மருத்துவர்.

 இந்த நேரத்தில் இவர்களது குடும்ப நண்பரான சிங்கம்புலி ஒரு நாள், இடையில் நுழைந்து ரோஷனை ஒரு மசாஜ் கிளப்புக்கு அழைத்துச் செல்கிறார். அங்கேயிருக்கும் ஜாஸ்மின் என்னும் பிரியா லால், ரோஷனுக்கு முதன்முதலாக காமத்தைக் கற்றுக் கொடுக்கிறார். தனக்குக் கிடைத்த புதுவித சுகத்திலும், ஒரு பெண்ணின் நட்பிலும் மனம் கரைகிறார் ரோஷன்.

ஜாஸ்மினை தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தனது வீட்டில் சொல்கிறார் ரோஷன். ஜாஸ்மின் யார் என்பதை அறிந்தவுடன் பெற்றோர்கள் இருவரும் திகைத்துப் போகிறார்கள். இதற்கு அவர்கள் சம்மதிக்க மறுக்கிறார்கள். ஆனால் ரோஷனோ பிடிவாதமாக ‘மணந்தால் ஜாஸ்மின்’தான் என்று உறுதியாகச் சொல்லிவிட.. அடுத்தது என்ன என்பதுதான் படத்தின் மீதமான திரைக்கதை.

சிறு வயதில் படிப்பிலேயே மூழ்கடித்தும், தாத்தா, பாட்டியைக்கூட பார்க்கவிடாமல் செய்தும், விளையாட்டுப் பக்கமே திரும்பவிடாமல் செய்தும் படிக்க வைத்திருக்கிறார் அப்பா என்கிற கோபம் அவருக்கு வரவில்லை. ஆனால் அவர் அதை உணரக்கூட முடியாத அளவுக்கு இருக்கிறார் என்பதுதான் திரைக்கதையின் ஓட்டை.

எப்போதும் திரைப்படங்களில் சரி, தவறு என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிட வேண்டும். “நாமளே நம்ம பையனை பைத்தியமாக்கிட்டோமே..?” என்று பெற்றோர்கள் கதறுவதால் பார்வையாளனை அது எளிதில் தொற்றாது. பாதிக்கப்பட்ட ரோஷனே அந்த வார்த்தைகளை பெற்றோரை நோக்கி வீசியிருக்க வேண்டும். அப்போதுதான் அது படம் பார்க்கும் ரசிகனையும் கண் கலங்க வைக்கும். இதை திரைக்கதையில் செய்வதற்குத் தவறிவிட்டார் இயக்குநர் சுசீந்திரன்.

நல்ல பையன், நல்ல படிப்பு.. நல்ல வேலை.. திடீரென்று ஏற்பட்ட இந்த மன நல பாதிப்பை மருத்துவ உதவியுடன், குடும்ப உறவுகளின் துணையோடு வேறு வழியாகச் சென்று குணப்படுத்துவதை போல திரைக்கதையை அமைத்திருந்தால் அது வழக்கமான சினிமாவாக இருந்திருக்கும்.

ஆனால், ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் துணையும், நட்பும் கிடைத்தவுடன் அதுவே அவனை சாந்தப்படுத்துகிறது என்று திரைக்கதையை அமைத்திருக்கிறார் சுசீந்திரன்.

திருமணத்திற்காக பல பெண்களை பார்த்தும் அந்த முயற்சி தோல்வியடைந்ததால்தான் அவனால் அந்த வழியில் செல்ல முடியவில்லை. எதிர்பாராமல் கிடைத்த இந்த வழியிலேயே அவனுக்கு அமைதி கிடைக்கிறதே என்றுதான் சொல்ல வைத்திருக்கிறது இத்திரைக்கதை.

சுசீந்திரனின் இயக்கத்தில் குறைவில்லை. அனைவரையும் மிக இயல்பாகவே நடிக்க வைத்திருக்கிறார். புதுமுகம் ரோஷன் அறிமுகம் போலவே தெரியவில்லை. அவருடைய அறிமுகக் காட்சியிலேயே அவர் சிங்கமுத்துவிடம் பேசும் ஆங்கில தொடர் பேச்சும், முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு விரல்களை எண்ணிக் கொண்டு தனக்குத்தானே பேசுவதிலேயே அவரது இயல்புத் தன்மை தெரிந்துவிடுகிறது.

அப்படியே காரை எங்கே நிறுத்தினோம் என்பது தெரியாமலேயே ஆட்டோவில் ஏறி, ஆட்டோக்காரனையும் அழுக வைத்துவிட்டு, பின்பு காரில் ஏறி டிராபிக் போலீஸ்காரனையும் தலை சுற்ற வைத்துவிட்டு ஸ்டேஷனுக்கு வந்து சாந்தமாக அமர்ந்திருக்கிறார்.

விளக்கம் கேட்ட இன்ஸ்பெக்டரை கதற வைத்துவிட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் அந்த நீண்ட காட்சியிலேயே ரோஷனின் கேரக்டர் ஸ்கெட்ச்சை விளக்கமாகச் சொல்லிவிட்டார் இயக்குநர். ஒரு நொடிகூட வீணாக்காமல் நம்மை திரைக்கதைக்குள் இழுத்துவிட்டார் சுசீந்திரன்.

தனக்கு எதுவுமே இல்லை என்று அவர் நம்புவதும், “நான் லூஸா..?” “நான் பைத்தியமா..?” என்று அவர் பெண் பார்க்கப் போகும் இடங்களிலெல்லாம் அவர் நடந்து கொள்ளும் முறையும் மிக மிக யதார்த்தமானது. இவர்தான் இப்படி பேசுகிறாரே… பின்பு எதற்கு இத்தனை முறை பெண் பார்க்க அழைத்துப் போகிறார்கள்..?

ரோஷனின் சிறு வயது நடிகன் ஆற்றில் குளிப்பதும், வீட்டு வாரிசுகளாக இருக்கும் வளர்ப்புப் பிராணிகளிடம் விளையாடுவதும்.. தாத்தா, பாட்டியின் அன்பில் திளைப்பதுமான அந்தக் காட்சிகளை மிக யதார்த்தமாக படமாக்கியிருக்கிறார் சுசீந்திரன்.

நாயகி பிரியா லால் இடைவேளைக்கு பின்புதான் தோன்றுகிறார். சில காட்சிகளே வந்தாலும் நாயகனின் பிரியத்துக்குரியவராக நடந்து கொள்ளும்போதும், அந்த இடத்துக்கு அவர் வந்து சேரும் கதையிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். அல்லது நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.

‘ஆடுகளம்’ நரேனும், மீரா கிருஷ்ணனும் ஒருவரையொருவர் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். நரேனுக்கு இதுவும் ஒரு பெயர் சொல்லும் படம். பையனின் வாழ்க்கையை தானே அழித்துவிட்டதை உணர்ந்து அவர் கண் கலங்கும் காட்சியில் நெகிழ வைக்கிறார். அதேபோல் அதே காட்சியில் மடை திறந்த வெள்ளமாய் கணவர் செய்த தவறுகளை ஒன்றுவிடாமல் பட்டியலிடும் மீரா கிருஷ்ணனின் நடிப்பே, இந்தப் படத்தின் கதையை ரசிகர்களின் மனதில் ஏற்றிவிடுகிறது. வெல்டன் மேடம்..!

தன்னந்தனியே ஜாஸ்மினை சந்திக்க வரும் நரேன், நாயகியின் 2 நிமிட பேச்சிலேயே லயித்துப் போய் இவள்தான் தன் மருமகள் என்று சொல்லும் காட்சியில் அழுத்தமான இயக்கத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். நன்று..!

சிங்கம்புலி திரைக்கதைக்காக உள்ளே புகுந்து சில காட்சிகளில் நகைச்சுவையைக் கொணர்ந்திருக்கிறார். தனது பேரனுக்காக ஏங்கும் தாத்தாவாக ஜெயபாலன் சில காட்சிகளே ஆனாலும் மனதில் நிற்கிறார்.

கிளைமாக்ஸில் நாயகி எப்படி காப்பற்றப்படுகிறார் என்பதில் இருக்கும் லாஜிக் மீறலை கண்டு கொள்ளக் கூடாதுதான். அனைத்து படங்களிலும் சண்டை காட்சிக்கு பிறகு என்ன நடக்கும் யாராவது கண்டுகொண்டிருக்கோமா..? இல்லையே..! அதேபோல் இதையும் விட்டுவிட வேண்டியதுதான். ஆனாலும் அதுவொரு சுவையான டிவிஸ்ட்டுதான்..!

குருதேவின் ஒளிப்பதிவில் தேனிப் பகுதியின் அழகு சொட்டுகிறது. பாடல் காட்சிகளில் பிரேம் பை பிரேம் கவர்ந்திழுக்கிறார் குருதேவ். நாயகனையும், நாயகியையும் எவ்வளவு அழகாகக் காட்ட முடியுமோ அத்தனை அழகாகக் காட்டியிருக்கிறார்.

யுவனின் இசை இப்படத்தில் பெரிதாக இல்லை என்பதுதான் உண்மை. ‘சிலு சிலு’ பாடலை அத்தனை அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். இதேபோல் ‘விளையாடு மகனே’ விளையாடு பாடலும், ‘நீங்களும் ஊரும்’ பாடலும் கேட்கும் ரகம்.

இப்போதும் ஐ.டி. நிறுவனங்கள் கூலித் தொழிலாளிகளை போல தங்களது பணியாட்கள நேரம், காலம் இல்லாமல் கசக்கிப் பிழிவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். சாதாரணமான கட்டிடத் தொழிலாளர்களுக்குக்கூட கிடைக்கும் ஓய்வும், அழுத்தமில்லாத பணியும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை.

அதிகமான சம்பளம், தன் சீட்டுக்கு வெளியில் காத்துக் கொண்டிருக்கும் ஆட்கள், குடும்பத்தில் இருக்கும் பொறுப்புகள், வங்கிக் கடன், தனது பொருளாத நிலைக்காக தான் செய்த சமரசங்கள்.. இப்படி பல பிரச்சினைகள் அந்த ஒயிட் காலர் மாந்தர்களைத் துரத்தியடிப்பதால்தான் அவர்கள் இந்த அடிமைத்தனமான வேலையில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்தப் படம் ஒரு பாடமாக இருக்கும்..!

இறுதியில் தன்னுடைய சொந்தக் கிராமத்திலேயே மிக எளிமையாக பேரனுடன் வாழ்க்கையைக் கழிக்கும் நரேனின் மூலமாக இயக்குநரின் சொல்லியிருப்பதும் இதுதான். படிப்பு தேவைதான். ஆனால் அது நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காகத்தான். அதுவே வாழ்க்கையில்லை. பரபரவென ஓடி, ஓடி உழைத்து எதையும் சாதிக்கப் போவதில்லை. அமைதியாக வாழ்ந்து இந்தப் பிறவியை வாழ்ந்து முடிப்போம் என்று நச்சென்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

மிகக் குறைந்த நேரத்தில், அதுவும் ஒன்றே முக்கால் மணி நேரத்தில் நேரத்தை வீணடிக்காமல், சொல்ல வந்ததை கச்சிதமாக நறுக்குத் தெரித்தாற்போன்று சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆனால் பெற்றோர்கள் மட்டுமே இந்தப் படத்தை தயக்கமின்றி பார்க்க முடியும் என்பதுபோன்ற சூழல் திரைக்கதையில் இருப்பதுதான் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்..!

ஆனாலும் இது இயக்குநர் சுசீந்திரனுக்கு பெயர் சொல்லும் படம்தான்..!

Our Score