“ஜீனியஸ்’ திரைப்படம் பார்ப்பவர்களின் பள்ளிப் பருவத்தை ஞாபகப்படுத்தும்” – நாயகி பிரியா லாலின் நம்பிக்கை..!

“ஜீனியஸ்’ திரைப்படம் பார்ப்பவர்களின் பள்ளிப் பருவத்தை ஞாபகப்படுத்தும்” – நாயகி பிரியா லாலின் நம்பிக்கை..!

Sudisiwood நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரோஷன் தயாரித்து, நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘ஜீனியஸ்’.

இந்தப் படத்தில் நாயகன் ரோஷனுக்கு ஜோடியாக பிரியா லால் என்ற புதுமுகம் அறிமுகமாகியிருக்கிறார்.

மேலும், யோகேஷ், மோனிகா, மீரா கிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – குருதேவ், படத் தொகுப்பு – தியாகு, இசை – யுவன் சங்கர் ராஜா, கலை இயக்கம் – ஆனந்தன், நடன இயக்கம் – ஷோபி, லலிதா ஷோபி, வசனம் – அமுதேஸ்வர், கதை, திரைக்கதை, இயக்கம் – சுசீந்திரன்.

இத்திரைப்படம் வரும் அக்டோபர் 26, வெள்ளிக்கிழமையன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இதையொட்டி, இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமாகும் நடிகை பிரியா லால், இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசினார்.

jenius-movie-poster-1

“எனக்கு சின்ன வயதில் இருந்தே பாட்டு, நடனம், நடிப்பு  போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ஆனால் என் குடும்பம் சினிமா பின்னணியில் இல்லாததால் அம்மாவிடம் இதைச் சொல்லத் தயங்கினேன். பின்பு சொன்னவுடன் என் பெற்றோர் என்னைப் புரிந்து கொண்டு சினிமா துறையில் நுழைய எனக்கு அனுமதியளித்தனர். இப்போதுவரையிலும் என்னுடைய நடிப்பு கேரியருக்கு என் பெற்றோர்தான் எனக்கு உறுதுணையாக உள்ளனர். 

மலையாளத்தில் எனது முதல் படம் ‘ஜனகன்’. அந்தப் படத்தில் சுரேஷ் கோபியின் மகளாக நடித்திருக்கிறேன். ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு த்ரில்லராக எடுக்கப்பட்ட படம் அது. அதன் பிறகு ரொமாண்டிக், காமெடி வேடங்களில் பல படங்களில் நடித்திருக்கிறேன்.

நீண்ட நாட்களாக எனக்கு ஒரு கனவு,  தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று.. அது இந்த ‘ஜீனியஸ்’ படம் மூலமாக நிறைவேறியிருக்கிறது. இதுதான் தமிழில் எனக்கு முதல் படம்.

இயக்குநர் சுசீந்திரன் ஸார் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’,  ‘நான் மகான் அல்ல’, ‘ஜீவா’, ‘பாண்டிய நாடு’ போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். இதில் ‘வெண்ணிலா கபடி குழு’வும், ‘நான் மகான் அல்ல’ படமும் எனக்கு மிகவும் பிடித்த படங்கள். 

actress priya lal-2

இந்த ‘ஜீனியஸ்’ படத்தின் கதை எனக்குத் தெரியாது. அது பற்றி ஒரு வரியைத்தான் சுசீந்திரன் ஸார் என்னிடம் கூறினார். அப்போதே இந்த படத்தில் நடித்தாக வேண்டும் என்று நான் முடிவு செய்து விட்டேன். 

இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிக, மிக வித்தியாசமானது. இதில் என்னுடைய பெயர் ‘ஜாஸ்மின்’. ஒரு நர்ஸாக நடிக்கிறேன். இந்தக் கதாபாத்திரம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். 

படப்பிடிப்பில் ஒரு மாணவி போல… சுசீந்திரன் ஸார் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே செய்வேன். நான் நடித்த முதல் காட்சியே க்ளைமாக்ஸ் காட்சிகள்தான். நீளமான காட்சி என்பதால் எனக்கு அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்க கொஞ்சம் நேரம் எடுத்தது. அதுமட்டுமில்லாமல் ஒரு சிறிய பாவனைகூட அந்தக் கதாபாத்திரத்தைக் கெடுத்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தேன். அதேபோல் சுசீந்திரன் ஸாரும் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் இப்படி நடிக்க வேண்டும் என்று நடித்தும் காட்டுவார். அவர் சொல்வதை நான் அப்படியே செய்து நடித்திருக்கிறேன்.

jenius-movie-poster-2 

மேலும், பல பேருக்கு இந்த படம் ஒரு நெருக்கத்தைக் கொடுக்கும். பள்ளிப் பருவத்தில் எல்லோருக்கும் படிக்க வேண்டும் என்ற நெருக்கடியும், நிர்ப்பந்தமும் இருந்திருக்கும். முக்கியமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஜீனியஸாக ஆக வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு இப்படம் மிகவும் நெருக்கமாக இருக்கும். அதேபோல் படத்துடன் எனக்கும் அதிக நெருக்கம் இருந்தது. ‘PK’ படம் மாதிரி உளவியல் ரீதியான முக்கியத்துவம் இப்படத்திலும் இருக்கும்.

இந்த படத்தில் இரண்டு ‘ஜீனியஸ்’கள் இருக்கிறார்கள். ஒருவர்  யுவன் ஷங்கர் ராஜா. இன்னொருவர் சுசீந்திரன். இந்த இரண்டு ‘ஜீனியஸ்’கள் இருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம். யுவனின் மிகப் பெரிய விசிறி நான். எனக்கு மிகவும் பிடித்தது பாடல் ‘சிலு சிலு’ பாடல்தான். 

தொடர்ந்து தமிழில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன். நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எந்த கதாபாத்திரத்திலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன்…” என்றார். 

Our Score