full screen background image

ஜெயலலிதாவுக்கு சீமான் நன்றி..!

ஜெயலலிதாவுக்கு சீமான் நன்றி..!

Snehavin Kadhalargal Audio Launch (16)

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி வேலூர் சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுக்கும் முன்னெடுப்பு நடவடிக்கைகளை பாராட்டி நாம் தமிழர் கட்சி அறிக்கை ஓன்று வெளியிட்டிருக்கிறது.

அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது :  

தூக்கு தண்டனைக்கு ஆளாகி சிறைக் கொட்டடியில் தவித்த தம்பிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருடைய தூக்கையும் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருக்கும் உத்தரவு தமிழர்களின் இதயங்களில் தேனாகத் தித்திக்க வைத்திருக்கும் நிலையில், வேலூர் சிறையில் வாடும் ஏழு பேர்களை விடுவிக்க தமிழக அரசு தீவிரமாகக் களமிறங்கி இருப்பது தமிழர் இதயங்களைப் பூத்துக் குலுங்க வைக்கும் நிகழ்வாக மகிழ்வைக் கொடுத்திருக்கிறது.
ஏற்கனவே இலங்கையின் போர்க் குற்றத்தைக் கண்டித்தும், மூவர் உயிர் காக்கவும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஏழு பேரையும் விடுவிக்க எடுத்திருக்கும் நடவடிக்கை உலகத் தமிழர்களால் பாராட்டத்தக்கது. போற்றத்தக்கது.
மூவர் உயிர் காக்கவும் சிறையில் வாடும் இதர நால்வரை மீட்கவும் தமிழக மக்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது.
தன் மகன் பேரறிவாளனையும் முருகன், சாந்தனையும் தூக்குக் கயிற்றின் துரத்தலில் இருந்து காப்பாற்ற ஒற்றை மனுசியாக கண் துஞ்சாது 23 வருடங்களாக இதிகாசத் தாய்களுக்கு நிகராக, மாக்சிம் கார்க்கி எழுதிய தாய்க் காவியத் தாயாக போராடிய அற்புதத்தம்மாளுக்கு கிடைத்த வெற்றி இது. உடைக்க முடியாத சிறைக்கம்பிகளையும் இளக வைத்த தங்கை செங்கொடியின் நெருப்புக்கு கிடைத்த நிம்மதி இது.
எத்தகைய கொடிய நிகழ்வுகளையும் ஒருமித்த உணர்வு கொண்ட போராட்டங்களால் உடைத்துக் காட்ட முடியும் என்பதை இந்த உலகுக்கே தமிழனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு கருணை உள்ளத்தோடு தமிழக முதல்வர் ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி இருப்பது வறண்ட நிலத்தில் விழுந்த மழைத் துளியாக, தவித்துக் கிடந்த வாய்க்குக் கிடைத்த தண்ணீராக தமிழர் இதயங்களைப் பூரிக்க வைத்திருக்கிறது.
23 ஆண்டுகளாக வெளியுலகைக் காணாமல் இளமை தொலைத்து, நட்பு, உறவு, குடும்பம் யாவும் தொலைத்து சிறைக் கொட்டடியில் அல்லாடித் தவிக்கும் ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உடனடி ஒப்புதல் வழங்க வேண்டும்.
ஏழு பேர்களை மீட்டெடுத்திருக்கும் இந்த ஒருமித்த தமிழ் உணர்வு இதேபோல் நமக்கு எதிரான அத்தனை போராட்டங்களிலும் மேம்பட்ட வேண்டும்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் குறிப்பிட்டு இருக்கிறார்.
Our Score