கடந்த வாரம் கர்நாடகாவில் ‘ஸ்ரீமதி ஜெயலலிதா’ என்ற கன்னடப் படம் ரிலீஸாகியுள்ளது. இந்தப் படம் குறித்தத் தகவல்கள் வெளிவந்ததில் இருந்தே, தமிழகத்தில் ஆளும் முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவை குறித்த படமாக இது இருக்குமோ என்ற ஐயம் அங்கேயுள்ள தமிழர்களுக்கும் இருந்தது..!
கன்னட திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரான சரண் இதில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். ஒன்று ஆண்.. ‘ஜெய்’ என்கிற கேரக்டர்.. இன்னொன்று பெண்.. ‘லலிதா’ என்றொரு கேரக்டர்.. பி.குமாரின் இயக்கத்தில் கடந்த 27-ம் தேதி வெளிவந்த இந்தப் படம் இப்போதுவரையிலும் வசூலை வாரிக் குவிக்கிறதாம்..!
பட ரிலீஸுக்கு முன்பாகவே இது தமிழக முதல்வரைக் குறிக்கும் படமோ என்று ஐயமுற்ற சசிகுமார் என்னும் பெங்களூர்வாழ் தமிழர், பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட்டில் இந்தப் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று கேட்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தரசாங்கி சந்தேகத்தைப் போக்க இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார்.
பார்த்துவிட்டு தன்னுடைய தீர்ப்பில், “இந்தப் படத்தில் தமிழக முதல்வரைப் பற்றியோ அவருடைய வழக்குகள் பற்றியோ எதுவும் இடம் பெறவில்லை. எனவே இந்தப் படத்தின் துவக்கத்தில் ‘இந்தப் படத்தில் வருபவை அனைத்தும் கற்பனை கதாபாத்திரங்களே.. யாரையும் களங்கப்படுத்தவில்லை’ என்று எழுத்துப்பூர்வமாக அறிவித்துவிட்டு, இந்தப் படத்தை வெளியிடலாம்..” என்று சொல்லியிருந்தார். இந்த்த் தீர்ப்பின் அடிப்படையில்தான் படம் ரிலீஸானதாம்..
படத்தின் கதை என்னவென்று பார்த்தால், ஒரு நாடகக் கம்பெனியை நடத்தும் தந்தையை அவரது மகனான ஜெய் கடத்திச் சென்றுவிடுகிறார். தன் தந்தையை மீட்பதற்காக லலிதா என்ற மகள் முயற்சிக்கிறார். இந்த இரண்டு பெயர்களையும் சேர்த்து ‘ஸ்ரீமதி ஜெயலலிதா’ என்று படத்துக்கு நாமகரணம் சூட்டியிருக்கிறார்கள். ஜெய், லலிதா என்ற இரண்டு வேடங்களிலுமே ஹீரோ சரணே நடத்திருக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் ஸ்பெஷல்.
படத்தின் இயக்குநர் என்ன சொல்கிறாரென்றால், “இந்தப் படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் படம். அரசியலுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. படத்தின் கதைக்கு ஏற்றவாறுதான் பெயர் வைத்திருக்கிறோம். நீதிபதி படத்தை பார்த்துவிட்டு, படத்துக்கும் தமிழக முதல்வருக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று சொல்லித் தீர்ப்பளித்திருக்கிறார். எனக்கோ, என் குழுவினருக்கோ யாரையும் புண்படுத்தும் நோக்கம் கிடையாது.. அதுவும் தமிழக முதல்வர் எவ்வளவு சிறந்த தலைவர் என்பது எங்களுக்கும் தெரியும்..” என்று சொல்லியிருக்கிறார்..!
பரவாயில்லை இயக்குநரே.. உங்களுக்காச்சும் இந்த அளவுக்கு தைரியம் இருக்கே. அதுக்காகவே உங்களுக்கு ஒரு சல்யூட்..!