‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை கடந்து வந்திருக்கிறார். இந்த 20-வது வருடத்தில் அவரது 25-வது படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் இந்த ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்க நடிகர் சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விஜய் மில்டன் மற்றும் மலையாள நடிகர் சணல் அமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின்ராஜ் படத் தொகுப்பு செய்திருக்கிறார். இயக்குநர் ராஜூ முருகன் எழுதி, இயக்கியிருக்கிறார்.
நகைக்கடையில் கொள்ளையடிப்பதில் கில்லாடியான மெகா திருடன் கார்த்தி என்ற ஜப்பான். இவர் மீது தென்னிந்திய மாநிலங்களில் பல கொள்ளை வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனாலும் மனிதன் சளைக்காமல் போராடி, ஜாமீனில் வெளியில் வந்து ஒரு திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்து முடித்து, அசத்திக் கொண்டிருக்கிறார்.
இப்போது மனிதருக்கு சிரம திசை. உடல் நலக் குறைவையொட்டி சோதனை செய்ததில் HIV Positive என்று தெரிய வந்துள்ளது. இந்த நேரத்திலும் தனது படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த அனு இம்மானுவேல் ஞாபகமாகவே இருக்கிறார் ஜப்பான்.
இந்த நேரத்தில் கோவையில் ராயல் ஜூவல்லர்ஸ் என்ற கடையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பின்பக்கச் சுவற்றில் மெகா சைஸூக்கு துளை போட்டு உள்ளே நுழைந்த கூட்டம் மொத்தமாக ராவிவிட்டு போயிருக்கிறது. 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போயிருக்கின்றன.
லோக்கல் ஏரியாவைச் சேர்ந்த அமைச்சர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு இந்தக் கடையில் மறைமுக முதலீடு இருப்பதால் காவல்துறை உயரதிகாரிகள் மும்முரமாக இந்த வழக்கை விசாரிக்கிறார்கள்.
சுனில் தலைமையில் ஒரு டீமும், விஜய் மில்டன் தலைமையில் ஒரு டீமுமாக இரண்டு அணி போலீஸார் இந்த வழக்கைத் தோண்டித் துருவிக் கொண்டிருக்கிறார்கள்.
சுனிலிடம் ஒரு அப்பாவி சிக்கிவிட.. அவனை வைத்து கேஸை முடிப்பதற்கு முயல்கிறார். அதே நேரம் விஜய் மில்டன் ஜப்பானை நெருங்குகிறார். ஜப்பானோ தான் அந்தக் கொள்ளையை செய்யவில்லை என்று உறுதியாய் சொல்கிறார். வேறு யாரோ தன் பெயரைச் சொல்லிக் கொள்ளையடித்திருப்பது அவருக்கும் தெரிய வருகிறது.
தற்போது 3-வது ஆளாக ஜப்பானும் களத்தில் குதித்து அந்தக் கொள்ளைக் கும்பலைத் தேடுகிறார். கடைசியில் என்னவானது.. உண்மையான கொள்ளையர் சிக்கினார்களா.. யார் அவர்கள்.. என்பதுதான் இந்த ஜப்பான் படத்தின் திரைக்கதை.
‘ஜப்பான்’ என்ற வேடத்திற்காக தன்னைப் பெரிதும் மாற்றிக் கொண்டிருக்கிறார் கார்த்தி. தனது முகத் தோற்றம், பற்கள் மற்றும் உடைகள் என்று அனைத்திலும் வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார்.
மிக அலட்சியமாக, அதே சமயம் ஸ்டைலாக அவர் நடந்து வரும் சில காட்சிகளிலும், நடனக் காட்சிகளிலும் அந்த ஜப்பான் கதாபாத்திரத்தை ரசிகர்களிடம் அழுத்தமாக பதிய வைத்துவிட்டார் கார்த்தி.
‘பருத்தி வீரன்’ படத்தில் பார்த்த அதே தெனாவெட்டு குணாதிசயத்தோடு படம் நெடுகிலும் வலம் வந்திருக்கிறார். நாயகியிடம் கொஞ்சலைக் காட்டி கெஞ்சலாகவே தனது காதலைப் பகிர்ந்து கொள்ளும் விதத்திலும், சுனில் மற்றும் விஜய் மில்டனிடம் தன்னை இந்த விஷயத்தில் இழுத்துவிட்டதற்காகக் கோபப்படும் இடங்களிலும் தனது டிரேட் மார்க் நடிப்பைக் காண்பித்திருக்கிறார் கார்த்தி.
எந்தப் படத்திலும் இல்லாத வகையில் இந்தப் படத்தில் பல பன்ச் வசனங்களைப் பேசி பன்ச் வசன நடிகர்கள் பட்டியிலில் தானும் ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார் கார்த்தி. ஜப்பான் பேசும் வசனங்கள் பலவும் அரசியல் கலந்ததாகவும் இருப்பதால் ரசிக்க முடிகிறது.
இறுதியில் அதே ஸ்டைலில் தனது முடிவைச் சொல்லி தனக்குத்தானே முடிவைத் தேடிக் கொள்ளும் தருணத்தில் கொஞ்சமேனும் பரிதாபத்தை வரவழைத்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அனு இம்மானுவேலுக்கு பெரிய வேலை ஏதும் இல்லை என்றாலும் திரைக்கதையின் வேகமான ஓட்டத்துக்கு அவர் பெரிதும் உதவி செய்திருக்கிறார். பாடல் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் அவர் கண்களில் காட்டியிருக்கும் போதை ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது.
கூடவே இருந்து குழி பறிக்கும் எத்தன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜித்தன் ரமேஷ் இதுவரையிலும் காட்டாத ஒரு நடிப்பை இந்தப் படத்தில் காண்பித்திருக்கிறார். அதேபோல் பக்குவப்பட்ட நண்பனைப் போல ஜப்பானின் கூடவே வரும் வாகை சந்திரசேகரும், போலீஸிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் சணல் குமாரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சுனிலின் 2 டிக் டாக் வீடியோ செம கலகலப்பு. விஜய் மில்டனின் அலட்டல் இல்லாத நடிப்பு கவர்கிறது. நல்லதொரு காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் வசனகர்த்தா முருகேஷ் பாபுவும் தனது இயல்பான நடிப்பினால் நம் கவனத்தை ஈர்க்கிறார். திடீரென்று ஜப்பானுக்குக் கையெறி குண்டுகளைக் கொடுத்து கையடக்கமாக உதவி செய்ய வரும் இயக்குநர் அருள் செழியனும் நடிப்பில் நம்மைக் கவர்கிறார்.
படத்தின் ரிச்னெஸ்ஸூக்கு ஏற்றபடி காட்சிகளை கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். சேஸிங் காட்சிகளிலும் விரட்டியிருக்கிறார். பாடல் காட்சிகளில் கலர்புல் டோனில் திரையை ஒளிர வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். டச்சிங் டச்சிங் பாடல் இளசுகளை நிச்சயமாக ஆடவும் வைக்கும். பின்னணி இசை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் முழுமையாக இல்லை.
முதல் இரண்டு படங்களில் நாம் பார்த்த ராஜூ முருகனுக்கும், இதில் தெரியும் ராஜூ முருகனுக்கும் பெரும் வித்தியாசம் தெரிகிறது. தனித்திறமை வாய்ந்த இயக்குநர்கள் கமர்ஷியல் ஹீரோவுக்கு படம் செய்தால் எந்த அளவுக்கு சமரசம் செய்ய வேண்டி வரும் என்பதற்கு இந்தப் படமும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது.
திருடர்கள் தானாக உருவாவதில்லை; சமூகத்தால் உருவாக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை மையக் கருவாக வைத்துக் கொண்டு கார்த்தி போன்ற கமர்ஷியல் நடிகர்களுக்குத் தக்கவாறான திரைக்கதையில் தனது வழக்கமான டிரேட் மார்க் அரசியலையும் கலந்து பேசியிருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன்.
ஒரு மெகா ஹீரோவுக்குரிய திரைக்கதையுடன் அவரை விதந்தோறும் காட்சிகள் இருந்தாலும், அதற்குத் தோதான திரைக்கதையை தனது அரசியல் வசனங்கள் மூலமாகவே சொல்ல வைத்து சிறிது நேர கலகலப்பையும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜூ முருகன்.
பல இடங்களில் ஜப்பான் பேசும் வசனங்கள் தீயாய் இருக்கிறது. சில இடங்களில் குத்தூசியாய் கிழிக்கிறது. வசனங்களின் மூலமாகவும் சில இடங்களில் சிரிக்கவும் வைத்து, கை தட்டலையும் பெற வைத்த வசனகர்த்தா முருகேஷ் பாபுவுக்கும் நமது வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!
அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கங்கள், ஆட்சியாளர்கள், பத்திரிகையாளர்கள், நடிகர், நடிகைகள், சமூக உடகங்களின் தற்போதைய நிலைமை, வசந்திகள் பரப்பும் வதந்திகளின் மூலம், சினிமா ரசிகர்கள் திரைப்படங்களை அணும்விதம், கமர்ஷியல் சினிமாக்கள் படும்பாடு, காவல் துறையினர் அதிகார வர்க்கத்திடம் சிக்கி சின்னா பின்னமாவது.. என்று சமூக சீர்கேடுகள் அனைத்தையும் எடுத்துயம்பி, நம்மை சிந்திக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன்.
எதைப் பற்றியும் கவலைப்படாமல், கொள்ளையடிப்பதைக்கூட கொஞ்சமும் தவறென்று நினைக்காமல் வாழும் ‘ஜப்பான்’ யார்? என்பதை சொல்லும் அந்த பிளாஷ்பேக் கதை மனதைக் கலங்கச் செய்கிறது.
இடைவேளைக்கு முன்பு படம் எதை நோக்கி செல்கிறது என்பதே தெரியாத வண்ணம் திரைக்கதை இருப்பதால் குழப்பமே மேலிடுகிறது. இரண்டாம் பாதியில் இருக்கும் விறுவிறுப்பினை முதல் பாதியிலும் வைத்திருந்தால் படத்தை இன்னமும் நெருக்கமாக அனுபவித்து பார்த்திருக்கலாம்.
RATING : 3 / 5