லர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ், முன்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘கூழாங்கல்’ திரைப்படத்தை தயாரித்திருந்தது. இந்தப் படம் இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்காக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்போது, அதே தயாரிப்பு நிறுவனம் ‘ஜமா’ என்ற மற்றொரு அற்புதமான படத்தைத் தயாரித்துள்ளது. இது தனித்துவமான கதை மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களைக் கொண்டுள்ளது.
பாரி இளவழகன் இயக்கியுள்ள இப்படத்தில் அம்மு அபிராமி, சேத்தன், பாரி இளவழகன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், ‘வடசென்னை’ புகழ் மணிமேகலை, வசந்த் மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
எண்ணற்ற சிறந்த திரைப்படங்களை தயாரித்து விநியோகித்த பிக்சர் பாக்ஸ் கம்பெனியின் அலெக்சாண்டர் இந்த படத்தை ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியிடுகிறார்.
இது குறித்து பிக்சர் பாக்ஸ் கம்பெனியின் தயாரிப்பாளர்-விநியோகஸ்தர் அலெக்சாண்டர் கூறுகையில், “எங்களுடைய பிக்சர் பாக்ஸ் கம்பெனி, அழகியலோடு வணிகரீதியான வெற்றிகரமான உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களை தயாரிக்கவே விரும்புவோம். இது போன்ற திரைப்படங்கள் வருவது அரிது.
இந்த ‘ஜமா’ திரைப்படம் இது போன்ற நல்ல கதையைக் கொண்டிருப்பது மகிழ்ச்சி. படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பார்வையாளர்களை கவருவதற்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் ‘ஜமா’ கொண்டுள்ளது என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.
‘கூழாங்கல்’ போன்ற அற்புதமான திரைப்படங்களை உருவாக்குவதற்கு பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனத்துடன் கை கோத்திருப்பது எங்களுக்கு பெருமை. படத்தை கணிசமான எண்ணிக்கையிலான திரைகளில் வெளியிட உள்ளோம். வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி படம் வெளியாவதால் விரைவில் புரோமோஷன் பணிகளையும் தொடங்க உள்ளோம்” என்றார்.
 
 
                                                                     
     
                                                             
                                
 
  
  
 







