நடிகர் சூர்யா தயாரித்து, நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
நடிகர் சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த திரைப்படம் ‘ஜெய்பீம்’. கடந்தாண்டு ஓடிடி தளத்தில் வெளியான இத்திரைப்படம் மிகப் பெரிய பாராட்டுக்களைப் பெற்றது.
பழங்குடியின இனத்தைச் சேர்ந்த அப்பாவி ஏழை மக்களை காவல்துறை சித்ரவதை செய்து கொலை செய்த நிஜக் கதையை மையமாக வைத்து உருவான இத்திரைப்படம் தமிழக அரசியல் களத்தையும் சூடாக்கியது.
இந்தப் படம் தற்போது மேலும் ஒரு சாதனையைத் தொட்டுள்ளது. சென்ற ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது பட்டியலில் ‘ஜெய் பீம்’ திரைப்படமும் இடம் பிடித்துள்ளது.

பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 276 படங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன. இவற்றில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான பிரிவில் ‘ஜெய் பீம்’ படமும் இடம் பிடித்திருக்கிறது.
சென்ற ஆண்டு நடிகர் சூர்யா தயாரித்து, நடித்திருந்த ‘சூரரைப் போற்று’ படமும் இதேபோல் ஆஸ்கர் விருதுக்கான முதற்கட்டப் பட்டியலில் இடம் பிடித்திருந்தது நினைவிருக்கலாம்.
இதுவரையிலும் எந்தவொரு தமிழ்ச் சினிமாவும் இது போன்ற சாதனையைச் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.