நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆக இன்னும் 1 நாள் மட்டுமே இருக்கிறது. ஆம், நாளை நவம்பர் 2 இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகிறது.
சூர்யா ரசிகர்கள் இத்திரைப்பட ரிலீஸுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். ரசிகர்களின் ஆவலுக்கு ஏற்ப இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகிறது.
தமிழகத்தில் 1990-களில் நடந்த பல்வேறு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காண்போரின் சிந்தையைத் தூண்டும் வகையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
தமிழகம் அறிந்த ஓய்வு பெற்ற நீதிபதியான சந்துருவின் வழக்காடு பயணத்தில் இருந்து நிறையவே ஈர்க்கப்பட்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு வழக்கறிஞராக, நீதிபதியாக நீதியரசர் சந்துரு தனது கடமையைச் செய்ய, நீதியை நிலைநாட்ட, தன் கடமையைத் தாண்டியும் எப்படி போராடினார் என்பதற்கான சாட்சிதான் இந்த ‘ஜெய் பீம்’ திரைப்படம்.
அண்மையில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் பல மொழிகளிலும் வெளியானது. இதற்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பும் அளப்பரியது. படத்தில் சூர்யாவின் நடிப்பிற்கு ட்ரெய்லரைப் பார்த்தே ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.
படத்தில் சூர்யாவுடன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் , ராவ் ரமேஷ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபிலோமின்ராஜ் படத் தொகுப்பாளராகவும், கலை இயக்குநராக கதிரும் பணியாற்றியுள்ளனர். இத்திரைப்படத்தை த.செ.ஞானவேல் எழுதி, இயக்கியுள்ளார்.
இத்திரைப்படம் நவம்பர் 2-ம் தேதி உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பிராந்தியங்களில் வெளியாகிறது.