திரைப்படத் துறை சார்ந்த அனைத்து சங்கங்களிலும் முட்டல், மோதல், உள்குத்துக்கள், சண்டைகள், சச்சரவுகள் என்று அனைத்தும் நடந்து வருகின்றன.
லேட்டஸ்ட் சண்டை இது :
‘கில்டு’ எனப்படும் தென்னிந்திய திரைப்படம் மற்றும் டிவி தொடர் தயாரிப்பாளர் சங்கத்தின் கவுரவச் செயலாளராக இருப்பவர் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு புகார் மனுவை அளித்துள்ளாராம்.
அதில், “எங்கள் சங்கத்தின் தலைவர் கிரிதாரிலால் எல்.நாக்பால், செயலாளர் தேவராஜ் குணசேகரன் ஆகியோர் சங்கத்தில் நீண்ட காலமாகப் பொறுப்பில் உள்ளனர்.
இந்த நிலைமையைச் சாதகமாகக் கொண்டு இவர்கள் பொய்க் கணக்கு எழுதி சங்கப் பணத்தில் இருந்து பெரும் தொகையை கையாடல் செய்துள்ளனர்.
மேலும், இச்சங்கத்தில் படத்தின் தலைப்பை பதிவு செய்யும் தயாரிப்பாளர்களையும், பல்வேறு வழிகளில் ஏமாற்றி பல லட்சம் ரூபாயை தனிப்பட்ட முறையில் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளனர்.
சங்கத்துக்கு அலுவலகக் கட்டிடம் வாங்கும்போது பெரும் தொகையை மோசடி செய்துள்ளனர். எனவே இவர்கள் மீது மோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்..” என்று கூறியிருக்கிறார்.
இந்த ஒரு சங்கம்தான் நிம்மதியா இருக்குன்னு நினைச்சா.. இங்கேயும் ஆரம்பிச்சாச்சா..?