full screen background image

“வெள்ள நிவாரணத்துக்கு தமிழ் நடிகர்கள் என்ன கொடுத்தார்கள்..?” – ஜாக்குவார் தங்கம் ஆவேச கேள்வி..!

“வெள்ள நிவாரணத்துக்கு தமிழ் நடிகர்கள் என்ன கொடுத்தார்கள்..?” – ஜாக்குவார் தங்கம் ஆவேச கேள்வி..!

வெள்ள நிவாரணத்துக்கு தமிழ் நடிகர்கள் என்ன கொடுத்தார்கள் என்று  கில்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜாக்குவார் தங்கம் ஆவேசமாகக் கேள்வியெழுப்புள்ளார்.

மாருதி பிலிம்ஸ் இண்டர் நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் என்.முத்துக்குமார் தயாரித்திருக்கும் ‘தென்னிந்தியன்’, ‘சூரத்தேங்காய்’ ஆகிய படங்களின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை ஆர்.கே.வி. தியேட்டரில் நடைபெற்றது.

விழாவில் கில்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, “இன்றைய சூழலில் ஒரே நேரத்தில் 2 படங்கள் தயாரித்துள்ள தயாரிப்பாளர் முத்துக்குமாரைப் பாராட்டுகிறேன். ‘கோலி சோடா’ சின்ன படம்தான். அது 40 கோடி லாபம் சம்பாதித்தது. அது போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் நிறைய வர வேண்டும்.

‘சூரத்தேங்காய்’ நாயகன் அரவிந்த் நன்றாகத்தான் இருக்கிறார் .அவர் தமிழனாக இருப்பதால் மேலே வர முடியவில்லை. இதுதான் தற்போதய கோடம்பாக்கத்தின் நிலைமை.

இங்கே ஒரு விஷயத்தைப் பேசக் கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் பேச வேண்டியிருக்கிறது. ஆந்திராவில் புயல், வெள்ளம் வந்தபோது எந்தெந்த தமிழ் நடிகர்கள் எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என்கிற பட்டியலைப் பார்த்தேன். இங்கே கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள்.

இப்போது கடந்த வாரம் தமிழகத்தில் பெய்த அடாத மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம் தமிழ் நடிகர்கள் யார் எவ்வளவு நிதி கொடுத்தார்கள்..? ஒன்றுமே இல்லை. இது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

தமிழ்நாட்டில் எல்லாம் இழந்து சொந்த நாட்டிலேயே தமிழ் மக்கள் அகதிகளாக இருக்கிறார்கள். நான் எம்.ஜி.ஆர். வீட்டிலேயே மூன்று ஆண்டுகள் இருந்திருக்கிறேன். அவர் அள்ளி அள்ளி கொடுத்தார். அவருக்குள்ள மனம் ஏன் இப்போது இவர்களுக்கு இல்லை..? தயவு செய்து கொடுத்து உதவுங்கள். அப்படி செய்தால் நீங்களும் உயர்வீர்கள்.

எங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் சிறு படங்கள் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறோம். FMS என்கிற வகையில் 120 நாடுகளுக்கு நம் படங்கள் போகின்றன ஆனால் 10 லட்சம் கொடுத்து நம்மை ஏமாற்றிவிடுகிறார்கள்.  இது மாற நடவடிக்கை எடுப்போம்.” என்றார்.

நியாயமான கேள்விதான்..!

Our Score