full screen background image

ஜடா – சினிமா விமர்சனம்

ஜடா – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ‘தி பொயட்  ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தில் நடிகர் கதிர், நடிகை ரோஷிணி பிரகாஷ், ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர், யோகி பாபு, கிஷோர், கெளதம் செல்வராஜ், ஸ்வாதிஷ்டா, அருண் அலெக்சாண்டர், லிஜீஷ், அருண் பிரசாத், அருவி பாலா, நிஷாந்த், சண்முகம், ராஜ், குலோத்துங்கன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – A.R.சூரியா, இசை, பாடல், பாடகர் – சாம் C.S., படத் தொகுப்பு – ரிச்சார்ட் கெவின் A, கலை – ஸ்ரீகாந்த் கோபால், ஒலி – SYNC சினிமாஸ், சண்டை – விமல் ரேம்போ, மக்கள் தொடர்பு – குணா, எழுத்து, இயக்கம் – குமரன். நேரம் – 2 மணி நேரம் 12 நிமிடங்கள்.

‘செவன்ஸ்’ எனும் பெயரில், விதிமுறைகளைப் பின்பற்றாத ஆபத்தான கால்பந்தாட்டப் போட்டி வட சென்னையில் நடைபெற்று வந்தது. இந்தப் போட்டியினால் வீரர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டும், தொடர்ந்து விளையாட முடியாமல் போனதாலும் போட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கிறது.

பத்து வருடங்களுக்குப் பின், அப்போட்டியை மீண்டும் நடத்தத் திட்டமிடுகின்றனர் வில்லன் குணாவின் குழுவினர். வட சென்னையில் பிரபலமான கால்பந்தாட்ட வீரரான நாயகன் ‘ஜடா’ என்னும் கதிர், தனது ‘கோச்’சின் எதிர்ப்பையும் மீறி அதில் பங்கு கொள்ள விரும்புகிறார்.

தேசிய அணியில் இடம் பெற வாய்ப்புள்ள திறமையான கால்பந்தாட்ட வீரனான ஜடா ஏன் அத்தகைய ஆபத்தான போட்டியில் கலந்து கொள்கிறார் என்பதை அமானுஷ்யம் கலந்து சொல்லியுள்ளார் படத்தின் இயக்குநரான குமரன்.

சிறப்பான நடிப்பைக் கதிர் வெளிப்படுத்தியிருந்தாலும், அது விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. ஒட்டு மொத்தப் படத்தின் தன்மையினால் கதிரின் உழைப்பு வீணாகிவிட்டதாகவே சொல்ல வேண்டும்.

யோகி பாபுவின் கால்ஷீட் கிடைக்க இயக்குநர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பது காட்சிகளில் அப்பட்டமாகத் தெரிகிறது. கால்பந்தாட்ட வீரர் மெஸ்சியாக வரும் யோகிபாபு, சில காட்சிகளில் குரலைக் கொண்டு மட்டுமே தன்னிருப்பைத் தக்க வைக்கப் பார்த்துள்ளார். நகைச்சுவைக்குப் பெரிதும் உதவவில்லை எனினும், பரியேறும் பெருமாள் படத்தில் வந்தது போல் ஒரு குணசித்திர நடிகராக இப்படத்திலும் வலம் வந்துள்ளார்.

கதிரின் காதலியாக மின்னி மறையும் அழுத்தமற்ற பாத்திரத்தில் வரும் ரோஷினி பிரகாஷைவிட, கெளதம் செல்வராஜின் காதலியாக வரும் ஸ்வாதிஷ்டாவின் கண்ணீர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. பாடல்களுக்கு மட்டுமே என ரோஷினி பிரகாஷை உபயோகப்படுத்தியுள்ளார் இயக்குநர். இரண்டாம் பாதியில், பாடல்களில் தோன்றும் வாய்ப்புகூட ரோஷினிக்கு மறுக்கப்பட்டுள்ளது.

வில்லனாக நடித்துள்ள ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர், கதாபாத்திற்கு ஏற்ற கச்சிதமான தேர்வு. வட சென்னைக்குப் பொருத்தமான முகம். தன் மகனுக்காகப் பழிவாங்கத் துடிக்கும் காட்சியில் அவர் பிரமாதப்படுத்தியுள்ளார்.

அவரைப் போலவே, ஃப்ளாஷ்-பேக்கில் வரும் கிஷோரும் தன் நடிப்பால் வழக்கம்போல் கவருகிறார். பேசவும் கேட்கவும் திறனற்ற இளைஞனாக வரும் கெளதம் செல்வராஜின் கனவு தனித்து மனதில் பதிகிறது.

ஆரம்பப் பாட்டில் மட்டும் கோலேச்சியுள்ள சாம்.C.S.-இன் இசையில் மற்ற பாடல்கள் மனதில் பதிய மறுக்கின்றன. மைதானத்தில் நடக்கும் கால்பந்தாட்டக் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் A.R.சூரியாவின் திறமை பளீச்சிடுகிறது.

கால்பந்தாட்டத்தின் வரலாற்றை அனிமேஷனில் காட்டிப் படத்தைத் தொடங்கியுள்ள இயக்குநர், முதற் பாதி முழுவதும் தனது அசத்தலான மேக்கிங்கால் அசத்தியுள்ளார்.

ஆனால், படம் இரண்டாம் பாதியில் கால்பந்தாட்டத்தில் இருந்து விலகி, அமானுஷ்யம் பக்கம் போனதும்,  குழப்பமான திரைக்கதையால் ஆட்டம் கண்டுவிட்டது.

நடிகர்களை நன்றாக நடிக்க வைத்ததன் மூலம், தானொரு தேர்ந்த இயக்குநரென நிரூபித்துள்ளார் குமரன். உதாரணத்திற்கு, ஓவியர் ஸ்ரீதரின் நடிப்பையும், அவரது கதாபாத்திர வார்ப்பையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

முழு நீள ஸ்போர்ட்ஸ் படமாக மட்டுமே இந்தப் படத்திற்குத் திரைக்கதை அமைத்திருந்தால், அறிமுக இயக்குநர் குமரனின் மீது ரசிகர்களின் கவனம் பெருமளவில் குவிந்திருக்கும் என்பது திண்ணம்.

Our Score