நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் அவரது குருவான இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் திருவுருவச் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்தச் சிலையை சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலக நாயகன் கமல்ஹாசனும் இணைந்து திறந்து வைத்தார்கள்.
இதற்கான விழா இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள உலக நாயகன் கமல்ஹாசனின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சாருஹாசன், மணிரத்னம், கவிஞர் வைரமுத்து, நடிகை சுஹாசினி, நடிகர் நாசர், இயக்குநர்கள் சந்தானபாரதி, ரமேஷ் அரவிந்த், கே.எஸ்.ரவிக்குமார், நடிகைகள் பூஜாகுமார், புவனா சேஷன் மற்றும் கே.பாலசந்தரின் மகளான திருமதி புஷ்பா கந்தசாமி, மருமகன் கந்தசாமி, மருமகள்கள் கீதா கைலாசம், பிரியா பிரசன்னா மற்றும் கே.பி.யின் நீண்ட கால உதவியாளரும், நடிகருமான மதுரை என்.மோகன், கே.பி.யின் கார் ஓட்டுனர் கோவிந்தராஜ் உட்பட பல குடும்ப நண்பர்களும், திரையுலகப் பிரமுகர்களும், மக்கள் நீதி மையத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கே.பாலசந்தரின் சிலை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தின் உட்புறத்தில் அனைவரும் பார்க்கும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சிலை திறப்பு விழாவுக்குப் பிறகு மேடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் மணிரத்னம், உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ரமேஷ் அரவிந்த், நடிகர் நாசர் மற்றும் கே.பாலசந்தரின் புதல்வியும், தயாரிப்பாளருமான திருமதி புஷ்பா கந்தசாமி, நடிகர் கமல்ஹாசனின் மகள்கான ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் ஆகியோர் பேசினார்கள்.