full screen background image

காமெடி கலாட்டாவாக உருவாகியிருக்கும் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’..!

காமெடி கலாட்டாவாக உருவாகியிருக்கும் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’..!

‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொலைக்காட்சித் தொடரை அவ்வளவு சீக்கிரம் தமிழகத்து மக்கள் மறந்துவிட முடியாது. அந்தத் தொடரை மட்டுமல்ல இதுவரையிலும் 20-க்கும் மேற்பட்ட நகைச்சுவை மெகா தொடர்களை இயக்கிய அனுபவம் வாய்ந்த இயக்குநர் எஸ்.என்.சக்திவேல் முதன்முறையாக வெள்ளித்திரையில் கால் வைத்திருக்கிறார்.

இவருடைய இயக்கத்தில் தயாராகியிருக்கும் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படம் வரும் மார்ச் 13-ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்தில் பல டிவி சேனல்களில் காம்பியராகவும், பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றிய தீபக் ஹீரோவாக நடித்திருக்கிறார். நேகா ரத்னாகர் என்னும் மலையாளப் பொண்ணு ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார்.

இவர்களோடு ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், குமாரவேல் , சென்ட்ராயன், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், லொள்ளு சபா சுவாமிநாதன்,  பாண்டியராஜன் ஆகியோரும் இதில் நடித்திருக்கிறார்கள்.

வி.வி.ஆர். சினி மாஸ்க் நிறுவனம் என்ற புதிய நிறுவனத்தின் மூலம் வி.வெங்கட் ராஜ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

பொதுவாக தயாரிப்பாளர்கள் அவரவர் விருப்பத்திற்காகத்தான் சினிமா துறைக்குள் கால் வைப்பார்கள். ஆனால் இங்கே அப்படியே தலைகீழ்.

“தீபக் என் நெடுநாளைய நண்பர்.  பல வருடங்களாக அவர் டிவி நடிகராவே இருக்கார். அவர் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும்.. சினிமாவில் நடிக்க வேண்டும் என்று நான் அவரைக் கேட்டேன். அப்படி கேட்கும்போதெல்லாம் தயாரிப்பாளர் கிடைக்கலை.. தயாரிப்பாளர் கிடைக்கலை என்பார். இதையெல்லாம் கேட்டு கேட்டு எனக்கே சலிப்பாகிவிட்டது. அதனால்தான் ஒரு நாள் உன்னை ஹீரோவாக்க நானே படம் தயாரிக்கிறேன் என்று சொல்லி இந்தப் படத்தைத் துவக்கிவிட்டேன்.

‘நீயே ஒரு டைரக்டரை கூட்டிட்டு வா’ என்றேன். தீபக், சக்திவேல் ஸாரை கூட்டிட்டு வந்தார். கதை கேட்டேன். பிடிச்சிருந்தது. உடனேயே ஆரம்பிச்சிட்டேன். இது என் நண்பனுக்காக, நட்புக்காக எடுக்கப்பட்ட படம்..” என்றார் தயாரிப்பாளர் வி.வெங்கட்ராஜ்.

நிஜத்தை போலவே படத்திலும்  தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவே வருகிறார் ஹீரோ தீபக். “நிஜத்தில் என்ன கேரக்டர் செய்தனோ, செய்கிறேனோ.. அதே கேரக்டர்தான் படத்திலும் வந்திருப்பதால் நடிப்பதில் எனக்கொன்றும் பிரச்சினையில்லை.. சக்திவேல் ஸாரின் இயக்கத்தில் ஏற்கெனவே சீரியல்களில் நான் நடித்திருப்பதால் கஷ்டமே இல்லாமல் காமெடி செய்திருக்கிறேன்..” என்றார் தீபக்.

‘மூடர்கூடம்’ படத்தில் தமிழ் மட்டுமே பேசத் தெரிந்தவராக அதகளம் செய்திருந்த சென்ட்ராயன் இதில் தமிழில் பேசவே கூடாது என்கிற கொள்கையுடன் இருக்கும் ஒரு கேரக்டராம்.

கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து கோடம்பாக்கத்தில் அல்ல.. ஹாலிவுட் சென்று நடிகர்கள் அர்னால்டு, ஜாக்கிசானுடன் நடிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கிளம்பி வந்திருப்பவர். இவர் தீபக்குடன் நண்பராக இவர் வாழ்க்கை எப்படி போகிறது என்பதும் ஒரு கிளைக் கதை..

“இன்னும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் செய்யும் காமெடியெல்லாம் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும்..” என்கிறார் இயக்குநர் எஸ்.என்.சக்திவேல்.

இரண்டு இசையமைப்பாளர்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்தப் படத்தில் மூன்று இசையமைப்பாளர்கள். ஏ-7 band என்ற பெயரில் மூன்று இளைஞர்கள் சேர்ந்து இசையமைத்திருக்கிறார்கள். இதில் கானா பாலா பாடியிருக்கும் ஒரு பாடல் பட்டையைக் கிளப்பப் போகிறது என்று திரையிட்ட பாடல் காட்சியை பார்த்தபோது தெரிகிறது.

சின்னத்திரையில் இருந்து வண்ணத்திரைக்கு பிரமோஷன் பெற்றிருக்கும் இயக்குநர் சக்திவேலின் இந்த முயற்சி வெல்லுமா என்பது வரும் 13-ம் தேதியன்று தெரியும்..!

Our Score