தமிழ்த் திரைப்படவுலகின் இசை ரசிகர்கள் பெரிதும் துயரப்பட்டுள்ள நாள் இது.
யார் கண்ணு பட்டுச்சோ தெரியலை.. தமிழ்த் திரையுலகில் இருக்கும் இசை வித்தகர்களிடையேயான உறவுகள் அற்றுப் போய் இப்போது நீயா, நானா என்கிற லெவலுக்கு நட்புகளை சிதைத்து வருகிறார்கள்.
பிரபல பின்னணி பாடகர் ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இசைஞானி இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருப்பதுதான் இன்றைய கோலிவுட்டின் பரபரப்பு செய்தி.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் தற்போது தனது குழுவினருடன் அமெரி்க்காவில் இன்னிசை கச்சேரி செய்து வருகிறார். சியாட்டில் மற்றும் லாஸ் ஏன்ஜெல்ஸ் நகரில் சமீபத்தில் இசை கச்சேரிகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருக்கிறார். இந்த இசைக் கச்சேரிகளை மிகுந்த பொருட்செலவில், ஸ்பான்ஸர்ஷிப் பிடித்து நடத்தி வருகிறார் எஸ்.பி.பி.யின் மகனான எஸ்.பி.பி.சரண்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக இசைஞானி இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாராம்.
அந்த நோட்டீஸில் “இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரது அனுமதியின்றி கச்சேரிகளில் பாடக் கூடாது. அப்படி பாடினால் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்படும்..” என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
இதனை இன்று தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், அமெரிக்காவில் இனி தான் நடத்தப் போகும் கச்சேரிகளில், இசைஞானி இளையராஜாவின் பாடல்களை பாடப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.
மேலும், “சென்ற ஆண்டு தான் ரஷ்யா, ஸ்ரீலங்கா, மலேசியா, துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கச்சேரி நடத்தியபோதெல்லாம் எதுவும் சொல்லாத இசைஞானி, இந்த அமெரிக்க டூரின்போது மட்டும் ஏன் இப்படி கேட்கிறார்..?” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
இந்த வக்கீல் நோட்டீஸ் விவகாரம் வெளியான சில நிமிடங்களிலேயே முகநூல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கும், இசைஞானி இளையராஜாவிற்குமான நட்பு 50 வருடங்களைக் கடந்தது. எஸ்.பி.பி. தமிழ்த் திரையுலகில் பாட வந்தது முதலே இளையராஜா மற்றும் அவரது சகோதரர்களுடன் மிக நெருங்கிய நட்பில் இருந்து வந்தார். ஆரம்பக் காலத்தில் இசைஞானி இசையமைத்த நாடகங்களில்கூட எஸ்.பி.பி. பாடியிருக்கிறார். அவ்வளவு நெருக்கமாக இருந்த இசைஞானி, ஏனோ காலப் போக்கில் எல்லோரையும் ஒதுக்குவதுபோல எஸ்.பி.பியையும் ஒதுக்கி அவருக்கு பதிலாக மனோவை நீண்ட வருடங்கள் தொடர்ச்சியாக தன்னுடைய இசையில் பாட வைத்தார்.
இருவருக்குமிடையேயான நட்பு சில நேரங்களில் நல்லவையாகவும், பல நேரங்களில் இல்லாததாகவும் இருப்பதாக எஸ்.பி.பி.யே சில பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார். “இளையராஜா தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு அதற்குள்ளாகவே தன்னை இருத்தி வைத்து மற்றவர்களுடன் பழகுவதைகூட விரும்பாமல் இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவரிடமிருந்து தற்போது ஒதுங்கியிருக்கிறேன்” என்றுகூட சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
திரையுலகத்தில் எஸ்.பி.பி. நுழைந்து 50 வருடங்கள் நிறைவடைந்ததையடுத்து சமீபத்தில் இன்னொரு இசை ஜாம்பவானான கே.ஜே.ஜேசுதாஸை அழைத்து வந்து அவருக்கு பாத பூஜை நடத்தினார் எஸ்.பி.பி. அந்த விழாவில் திரையிடப்பட்ட அவருடைய திரையுலக பயணம் பற்றிய செய்தியில் ஒரு இடத்தில்கூட இசைஞானியின் புகைப்படமோ, அவரது பெயரோ வராதது அப்போதே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
இசைஞானி இளையராஜா தனது இசையில் வெளியான பாடல்களின் உரிமை தன்னிடம்தான் இருக்கிறது என்கிறார். சென்ற ஆண்டுதான் அதனை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் மூலமாக, அதன் உரிமைகளை விற்பனை செய்யும் திட்டத்தை ஆரம்பித்தார்.
இதன்படி தமிழகம் முழுவதிலும் இருக்கும் அனைத்து மெல்லிசை கச்சேரிகளை நடத்துபவர்கள்கூட தங்களது கச்சேரிகளில் இசைஞானியின் பாடல்களை பாடினால், அதற்கான ராயல்டி தொகையாக அவர் நிர்ணயித்திருக்கும் ஒரு தொகையை கட்ட வேண்டும். இந்த முறை தற்போது பெரும்பாலான இன்னிசை குழுக்களால் பின்பற்றப்பட்டு வருகிறதாம்.
இருவருக்கும் இடையிலான ஈகோ பிரச்சினைதான் இப்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பும் அளவுக்குச் சென்றிருப்பதை உணர முடிகிறது. இசைஞானியே எஸ்.பி.பி.யிடம் இதனை போன் செய்து சொல்லியிருக்கலாம். அல்லது தனது மகன்களிடம் சொல்லி எஸ்.பி.பியிடம் சொல்லியிருக்கலாம்.. இப்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பும் அளவுக்கு போயிருக்கக் கூடாது என்கிறது திரையுலகம்.
இன்னொரு பக்கம் ஒரு திரைப்படத்தில் இசையமைத்தற்காக ஒரு சம்பளத்தை தயாரிப்பாளர் இசையமைப்பாளருக்கு கொடுத்துவிட்டார். பின்பு அதே இசையின் வெளியீட்டு உரிமையை இசை வெளியீட்டு நிறுவனங்களுக்கும் கொடுத்து அதில் கிடைத்த பணத்திலும் பாதி, பாதியை தயாரிப்பாளரும், இசையமைப்பாளரும் பங்கு போட்டுக் கொண்டாகிவிட்டது. இதன் பின்பும் இந்த இசையில் இசையமைப்பாளர் பங்கு கேட்பது நியாயமா என்கிறார்கள் சிலர்..!
இப்படியெல்லாம் பிரச்சினைகள் வருவதை உணர்ந்துதான் இசைஞானி இளையராஜா ஒரு கட்டத்திற்கு மேல் தன்னுடைய படங்களின் இசை வெளியீட்டு உரிமையை சில ஆண்டுகளுக்கு மட்டும் என்று சொல்லி தயாரிப்பாளர்கள் மூலமாக இல்லாமல் தானே சில இசை வெளியீட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்தார். இப்போது அவைகளை மொத்தமாக தானே திரும்ப வாங்கிக் கொண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் மூலமாக விற்பனை செய்து வருகிறார் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
எது எப்படியிருந்தாலும் இசையால் வளர்ந்த நண்பர்கள், அதே இசையின் காரணமாகவே தங்களுக்குள் மோதிக் கொள்வது விரும்பத்தக்கதல்ல என்பதை மட்டும் சொல்ல ஆசைப்படுகிறோம்..!