full screen background image

“இறைவன் கொடுத்த தண்டனைதான் சென்னை வெள்ளம்..” – இசைஞானி இளையராஜாவின் பேச்சு..!

“இறைவன் கொடுத்த தண்டனைதான் சென்னை வெள்ளம்..” – இசைஞானி இளையராஜாவின் பேச்சு..!

சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பெப்சி தொழிலாளர்களுக்கு நிவாரணம் கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை பெப்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் இசைஞானி இளையராஜா, பெப்சி தலைவர் ஜி.சிவா, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், நடிகர் சங்கத் தலைவர் நாசர்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆயிரம் கிலோ அரிசி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் 50 ஆயிரம் கிலோ அரிசி, இசைஞானி இளையராஜா சார்பில் 5000 பெட்ஷீட்டுகள், நடிகர் சங்கத்தின் சார்பில் 4500 லிட்டர் சமையல் எண்ணெய், பிலிம் சேம்பர் சார்பில் 5 ஆயிரம் ரூபாய்க்கு நிவாரணப் பொருட்கள், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சார்பில் 2000 கிலோ அரிசி, தயாரிப்பாளர் சி.வி.குமார் 1000 கிலோ பருப்பு, இசையமைப்பாளர் டி.இமான் 5000 கிலோ கோதுமை, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் 4500 கிலோ சக்கரை, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினவம் 2000 புடவைகள், தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் 2000 டவல்கள், ஸ்டண்ட் சிவா 50 மூட்டை அரிசி  என பலவும் பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசும்போது, “இந்த வெள்ளம் இறைவன் நமக்கு அளித்த தண்டனை. அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்..” என்றார்.

அவர் மேலும் பேசும்போது, “இது பேசுவதற்கான, விளம்பரத்துக்கான மேடையல்ல. கொடுப்பதற்கான மேடை.

உதவுகிற கரங்களும் வாங்குகிற கரங்களும் ஒரே கரங்களாக இருக்க்க் கூடிய உடம்பை நாம் கொண்டிருக்கிறோம்; மனதைக் கொண்டிருக்கிறோம். இங்கே நான் கொடுப்பதை வேறு யாருக்கோ கொடுப்பதாக நினைக்கவில்லை. எனக்கே கொடுப்பதாக நினைக்கிறேன். வேறு யாருக்கோ கொடுப்பது போன்ற அந்த உணர்வு எனக்கு சிறிதும் கிடையாது. அந்த உணர்வு இருந்தால் நான் என் பெயரை விரும்புவதாக அர்த்தமாகும். நான் என் புகழை விரும்புவதாக அர்த்தமாகும்.

இப்போது ஒன்று தோன்றுகிறது.  நாம் செய்த குற்றத்துக்காக இறைவன் கொடுத்த தண்டனைதான் இது. இறைவன்  ஒரே ஒரு பூதம் மூலம்தான்  தண்டனை கொடுத்திருக்கிறான்.

நாம் எல்லோரும் செய்த குற்றத்துக்காக ஒரு பூதம்தான் அதுவும் ஒரு வாரம்தான். ஒரு பூதம் மூலம் மட்டுமே தண்டனை கொடுத்திருக்கிறான். ஒரு வாரம் கஷ்டப்பட வேண்டும் என்று சித்திரவதை செய்கிறான். அவன் நினைத்திருந்தால் சுனாமி மாதிரி ஒரேயடியாக தண்டித்திருக்கலாம்.     மக்கள் மனபாதிப்பு அடைந்த சம்பவத்தை நம் கண்முன் காட்டினான்.  ஒரு வார காலமாக அவன் கஷ்டப்படுத்தியதைப் பார்க்கும்போது மக்களிடம் ஏற்பட்டுள்ள மன பாதிப்பை, மன மாற்றத்தை உணர முடிகிறது.

அடுக்கு மாடி குடியிருப்பில் அடுத்த வீட்டில் இருப்பவர் யாரென்று தெரியாதவர்கூட இந்த வெள்ள பாதிப்பின் போது யாராவது  அவர்களுக்கு உதவி செய்யும்போது அடுத்த வீட்டுக்காரருக்கும்  உதவி செய்யச் சொல்லிப் பார்க்கச் சொல்கிறார்கள்.

கோடி, கோடியாய் பணமிருந்தும் 3 நாட்களாகச் சாதாரண பிரட்டுக்கு அலைந்த காட்சியை பார்க்க முடிந்தது. இவை எல்லாமே இறைவனின் குற்றமில்லை. நாம் செய்த குற்றம்.. அதற்கான தண்டனைதான் இது.

ஆனால் இது பற்றி யாரும் பேசவில்லை .இறைவன் தண்டித்தான் என்று யாரும் பேசுவதில்லை. நான் ஒருவன் மட்டும்தான் சொல்கிறேன். என்னால்தான் இதை ஆணித்தரமாக கூற முடியும். இனிமேலும் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டாமா..? பிறருக்கு கொடுப்பதெல்லாம் நமக்கே கொடுத்துக் கொள்வதாகும் என்று கூறி முடிக்கிறேன்…” என்றார்.

Our Score