full screen background image

இசைஞானி இளையராஜா கேட்கும் அங்கீகாரக் கடிதம் எதற்கு..?

இசைஞானி இளையராஜா கேட்கும் அங்கீகாரக் கடிதம் எதற்கு..?

இந்தியாவில் காப்பிரைட்ஸ் உரிமைகள் தொடர்பான சட்டம் அவ்வளவு தெளிவானதாக இல்லை என்பதாலும், நமது அரசியல் சட்ட கேலிக் கூத்துக்களாலும் பல படைப்பாளிகளின் உரிமைகளும், அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பலன்களும் கிடைக்காமலேயே போய்விடுகிறது..

இசைஞானி இளையராஜாவின் இசை இன்றைக்கும் தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. அவர் இசைப் பணியில் மூழ்கியிருந்தபோது அடுத்தடுத்து வந்த அவரது இசைத் தட்டுக்கள் அந்த அற்புதமான இசையைப் பரப்பி அவரது புகழைக் கூட்டியதே தவிர.. அதனால் அவருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான படைப்புரிமையில் வரும் வருமானத்தைப் பெற்றுத் தரவில்லை.

2000-மாவது ஆண்டுகளுக்குப் பிறகுதான் இசைஞானியின் கொஞ்சம் முழித்துக் கொண்டு தனது படைப்புரிமைகளை சொத்துரிமையாக்கி காப்புரிமை செய்து கொண்டார். அதன் பின்புகூட இப்போதுவரையிலும் அதனை முறைப்படுத்த சரியான அமைப்புகள் இல்லாததால் எல்லா இசையும் இறைவனால் வழங்கப்பட்டவையே என்று தனது ரசிகர்களிடத்தில் சொல்லி திருப்திப்பட்டுக் கொண்டார்.

நேற்றைக்கு நடந்த ‘கன்னக்கோல்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார்தான் இசைஞானி பற்றிய ஒரு தகவலைத் தெரிவித்தார்.

“நான் ஏன் இந்த நிகழ்ச்சிக்கு லேட்டா வந்தேன்னா.. நம்ம இசைஞானி இளையராஜா தான் இதுவரையில் இசையமைத்த தமிழ்ப் படங்களையெல்லாம் ஒரு பட்டியல் போட்டு, அதற்கான அங்கீகாரம் தர்ற மாதிரி.. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சிலின் ஒப்புதல் கடிதம் கேட்டிருந்தார். அதற்கான கடிதங்களை எல்லாம் தொகுத்து எல்லாத்துலேயும் கையெழுத்து போட்டுட்டு வர்றதுக்குத்தான் இத்தனை லேட்டாயிருச்சு.

இசைஞானி தான் இசையமைத்த அனைத்து பாடல்களுக்கும் தலா 1 ரூபா ராயல்டி கேட்டிருந்தால்கூட இன்னிக்கு பில்கேட்ஸ் அளவுக்கு பணக்காரராக இருந்திருப்பார். ஆனால் அவர் செய்யலை. அவருக்கு அந்த வியாபாரமும் தெரியாது.. இது மாதிரிதான் தமிழ்ச் சினிமால படைப்பாளிகளின் உரிமைகளும், அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியவைகளும் யாருக்கோ போய்க்கிட்டிருக்கு..” என்றார் கேயார்.

ராயல்டியை விடுங்கள்.. இசைஞானியின் இந்த அங்கீகாரம் வேண்டிய கையெழுத்து எதற்காக..?

இப்போது பாலாவின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘தாரை தப்பட்டை’ படம் இசைஞானியின் 1000-மாவது படம் என்கிறார்கள். இதனை வெளிப்படையாக அறிவித்து இதனை உலக சாதனை பட்டியலில் இடம் பெற வைக்கத்தான் இசைஞானி முயன்று வருகிறார் என்று திரையுலகத்தினர் கூறுகிறார்கள். இதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும்வகையில்தான் தயாரிப்பாளர் கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் இசைஞானி.

இசைஞானிக்கு முன்பேயே எம்.எஸ்.விஸ்வநாதன் 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்திருந்தாலும் அவர் ராமமூர்த்தியுடன் சேர்ந்து செய்த படங்களும் இதில் அடக்கமாகியிருக்கிறது. இதனால் முழு கிரெடிட்டும் எம்.எஸ்.வி.க்கே கிடைக்காது. இன்னொரு துரதிருஷ்டம்.. எம்.எஸ்.வி., இப்போது இதற்கான உலக சாதனைக்கு விண்ணப்பித்தால்.. அவருடைய அனைத்து படங்களின் பெயர் பட்டியல்.. வெளியான தேதிகளையும் சரி பார்த்து சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்புதல் கடிதத்தையும் வாங்க வேண்டும்.

இந்த அளவுக்கான விஷயங்கள் இருப்பதைப் புரிந்துதான் எம்.எஸ்.வி. அப்போதே அதனை விட்டுவிட்டார். ஆனால் இசைஞானி புரிந்துக கொண்டு செயல்படுகிறார்.. இசைஞானிக்காச்சும் அந்த புகழ் கிடைக்கட்டுமே என்று நினைத்து பெருமைப்படும் அதே நேரத்தில், எம்.எஸ்.வி.யைத் துரத்தும் துரதிருஷ்டத்தை நினைத்து வருத்தமும் வருகிறது..!

Our Score