full screen background image

“எம்.ஜி.ஆர். காலத்து சகிப்புத் தன்மை இன்று இருக்கிறதா?” – இயக்குநர் பேரரசு கேள்வி!

“எம்.ஜி.ஆர். காலத்து சகிப்புத் தன்மை இன்று இருக்கிறதா?” – இயக்குநர் பேரரசு கேள்வி!

பி.எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள  படம் ‘கட்சிக்காரன் ‘.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நேற்று மாலை நடைபெற்றது.

இவ்விழாவில்  சென்னை செங்கல்பட்டு விநியோகஸ்தர் சங்கத் தலைவரும் தயாரிப்பாளருமான  கே.ராஜன் பாடல்களை வெளியிட இயக்குநர் பேரரசு பெற்றுக் கொண்டார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “இந்தப் படத்தில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை எல்லாம் பார்க்கிறேன். சரவணன், முருகன், ஐயப்பன் என்று எல்லாமே ஆன்மீகப் பெயர்களாக உள்ளன. இவர்கள் ஆன்மீகக் கட்சிதான். பக்தி இருந்தாலே வெற்றிதான். இது அரசியல் சம்பந்தப்பட்ட கதை. அரசியல் படத்திற்கு கதை, வசனம்கூட எழுதி விடலாம். காட்சிகளை அமைத்து விடலாம். ஆனால் அதற்கான கரைவேட்டிகளை தேடிக் கண்டுபிடிப்பது பெரிய சிரமம்.

படத்தில் ஒரு கட்சியைக் காட்டுவது என்றால்கூட அந்தக் கட்சிக்கான கொடி, கரை வேட்டி நிறத்தைக்  கண்டுபிடிப்பதற்குப் படாதபாடு பட வேண்டும்.எந்தக் கட்சியும் சாராத நிறத்தில்  கண்டுபிடிப்பதற்கு நான்  சிவகாசியிலும், திருவண்ணாமலையிலும் மிகவும் சிரமப்பட்டேன். ஏனென்றால் எந்த நிறத்தில் பார்த்தாலும் அந்த நிறத்தில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின்  கொடிகள், வேட்டிகள் இருக்கின்றன. ஒரு கரை வேட்டிக்கே இவ்வளவு கஷ்டம் என்றால் படத்தை எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

அரசியல் படங்கள் எடுக்கத் தைரியம் வேண்டும். ஒரு காலத்தில் அதாவது எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலத்தில், நிறைய அரசியல் படங்கள் வந்தன. அப்போது ராம.நாராயணன், எஸ்.ஏ.சந்திரசேகர்  போன்றவர்கள்  அரசியல் படங்களை எடுத்தார்கள். பிறகு மணிவண்ணன் எடுத்தார். அப்போது எம்.ஜி.ஆர் எதையுமே செய்யவில்லை. அப்படி ஒரு சகிப்புத் தன்மை அவருக்கு இருந்தது. யார் எதைச் சொன்னாலும் மக்கள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது.

கடந்த 15 அல்லது 20 ஆண்டுகளில் அது மாதிரி அரசியல் படங்கள் எல்லாம் வந்த மாதிரி தெரியவில்லை. இந்தப் படம் எடுக்க முன் வந்த தயாரிப்பாளரைப் பாராட்டலாம்.

இயக்குநர் ஷங்கர் முதல்வன்’ படம் எடுத்தபோதுகூட பிரச்சினைகள் வந்தன. சேரன் ‘தேசிய கீதம்’ எடுத்த போதும் அதே போல பிரச்சினைகள். ஜெயலலிதா அம்மையார் காலத்தில் யாரும் அரசியல் பற்றிப் படங்களில் பேசவே இல்லை. அரசியல் பக்கம் யாரும் போகாமல் படம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

எம்ஜிஆர் காலத்திலிருந்த அந்தச் சகிப்புத்தன்மை இன்று எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. இந்த நிலையில் இந்தப் படம் உருவாகி வந்திருக்கிறது. இது ஒரு அரசியல் கட்சித் தொண்டனைப் பற்றிய கதை.

தலைவரை நம்பி வாழ்க்கையை வீணடித்த தொண்டன் செலவுக் கணக்கு திரும்ப கேட்பது போல் இந்தக் கதை உருவாகி இருக்கிறது என்று நினைக்கிறேன். இந்தப் படத்தை எடுத்துள்ள தயாரிப்பாளரை வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

Our Score