ரங்கநாதன் தெருவுல பைக சர்வீஸ் விட்டாலே, நம்ம பசங்க ரேஸ் மாதிரி ஓட்டுவாங்க.. எவ்வளவு கூட்டம் இருந்தாலும் வளைஞ்சு, நெளிஞ்சு சாமர்த்தியமா ஓட்டுறதுல இன்றைய இளைஞர்கள் வித்தகர்களா இருக்காங்க.. ஆனாலும் இதனால் தினமும் சில இளைஞர்கள் விபத்தில் மரணமடைகிறார்கள்.. எத்தனையோ தடுப்பு முறைகளை அறிவித்தும் இந்த பைக் மோகத்தில் இருந்து இளைய சமுதாயத்தைத் திருத்த முடியவில்லை..
இந்த நேரத்தில் இந்த பைக் ரேஸ் பற்றியே ஒரு திரைப்படம் வெளிவருகிறது.. ‘இரும்பு குதிரை’. ‘பரதேசி’ படத்திற்கு பின்பு அதர்வா நடிக்கும் படம்.. உடன் பிரியா ஆனந்தும், ராய் லட்சுமியும்.. புதிய இயக்குநர் யுவராஜ் போஸ் இயக்கியிருக்கிறார்.
“பரதேசி படத்துக்கப்புறம் சுத்தமா அதோட சம்பந்தமே இல்லாம வேற பேட்டர்ன்ல படம் செய்யணும் ஆசை.. அதுக்கேத்தாப்புல யுவராஜ் சொன்ன கதை இருந்துச்சு.. இது மாதிரி பெரிய பட்ஜெட்ல படம் செய்யணும்னா அதுக்கேத்தாப்புல தயாரிப்பாளரும் இருக்கணும். நானே கல்பாத்தி ஸார்கிட்ட வந்து சொன்னேன்.. அவரும் ஓகேன்னாரு..
நான் சாதாரண பைக்குகள்தான் ஓட்டியிருக்கேன். படத்துல யூஸ் செஞ்சது எல்லாமே ஸ்போர்ட்ஸ் பைக்.. இதுக்காக ஷூட்டிங் ஸ்பாட்லேயே தனியா டிரெயினிங் எடுத்திட்டு அப்புறமாத்தான் ஓட்டினேன்.. முதல்ல எனக்கும் நெர்வஸாத்தான் இருந்துச்சு.. பட்.. ஓட்ட ஓட்ட பைக் ரேஸ் ஓட்டணும்னு எனக்கு இப்போ ஆசையே வந்திருச்சு..” என்றார் ஹீரோ அதர்வா.
இப்போதே எச்சரிக்கையுடன் பேசுகிறார் இயக்குநர் யுவராஜ்.. “இது பைக் ரேஸை ஊக்கப்படுத்தும் படமல்ல.. படத்தின் அநேக காட்சிகளில் அதர்வா ஹெல்மெட் போட்டிருப்பார்.. ஒரேயொரு காட்சியில் தன்னுடைய அவசரத்தனத்தால் சிக்னலை மீறி சென்றுவிடுவார். அது அவருடைய அன்றைய வாழ்க்கையே மாற்றிவிடும். அதுதான் கதை.. இதற்கு மேல் சொல்ல முடியாதே..?” என்றார்.
பைக் ரேஸா படத்துல முக்கியம்..? பெல்காம் அழகி.. அரேபிய குதிரையான ராய் லட்சுமி போட்டிருக்கும் செமத்தியான ஒரு குத்தாட்டமே ரசிகர்களை ரேஸ் ஓட வைக்கும் என்று நம்பலாம்.. அந்தப் பாடல் காட்சியின் இடையே ராய் லட்சுமி ஒரு ‘பெக்’கை அனாயசமாக ‘ரா’வாக ‘உள்ளே’ தள்ளும் காட்சியும் சர்வசாதாரணமாக வந்து போனது..!
ரொம்ப தில்லுதான்..!