full screen background image

இறுகப் பற்று – சினிமா விமர்சனம்

இறுகப் பற்று – சினிமா விமர்சனம்

மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’ என ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் வித்தியாசமான கதைக் களங்களுடன் படங்களை தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளியாகியிருக்கும் படம் ‘இறுகப் பற்று’.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – கோகுல் பினாய், படத் தொகுப்பு – மணிகண்ட பாலாஜி, பாடல்கள் – கார்த்திக் நேத்தா, பத்திரிக்கை தொடர்பு – ஜான்ஸன்.

வடிவேலு நடித்த ‘தெனாலிராமன்’, ‘எலி’ ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இன்றைக்கு உலகமெங்கும் ‘மைய குடும்ப உறவு முறை’தான் இருக்கிறது. கூட்டமாக இருந்தபோது வராத சிக்கல் இப்போது வெடித்திருக்கிறது. தற்போதைய நவீன வாழ்க்கையில் கணவன், மனைவி இடையிலான சண்டை, மோதல்கள் அந்தக் குடும்பத்தில் நரக வேதனையாக இருக்கிறது. அந்த சிக்கலை ஆணித்தரமாக அலசும் படம்தான் இந்த ‘இறுகப் பற்று’.

விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு ஜோடி. சானியா ஐயப்பன் – ஸ்ரீ, ஒரு ஜோடி. விதார்த் – அபர்ணதி ஒரு ஜோடி. இந்த மூன்று ஜோடிகளின் கண்ணாமூச்சி விளையாட்டுத்தான் இந்தப் படம்.

இதில் விதார்த் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்குத் தன் மனைவி அபர்ணதியை சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவர் குண்டாக இருப்பதுடன், தான் எதிர்பார்த்த மனைவிக்குரிய குணங்கள் அவரிடத்தில் இல்லை என்பதால் கைக் குழந்தை இருக்கும் நிலைமையிலும் மனைவியை விவகாரத்து செய்ய நினைக்கிறார் விதார்த்.

சானியா ஐயப்பன் – ஸ்ரீ ஜோடி காதலித்துத் திருமணம் செய்தவர்கள். சின்ன வயது என்பதால் இருவருக்குமே வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாத சூழல். எல்லா பிரச்சினைகளிலும் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை மனைவி மீது சொல்லிக் கொண்டேயிருக்கிறார் ஸ்ரீ. இதனால் கணவர் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் சானியா அய்யப்பன்.

இந்த 2 ஜோடிகளுமே விவகாரத்து செய்து கொள்ள நினைத்து இது போன்ற குடும்பத் தகராறுகளை தீர்த்து வைக்கும் ஸ்பெஷலிஸ்ட் சைக்கியாரிஸ்ட் நிபுணரான ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் வருகிறார்கள். இரண்டு ஜோடிகளுக்குமே நல்ல முறையில் ஆலோசனை சொல்லி அவர்களது விவாகரத்தை அப்போதைக்குத் தள்ளிப் போட வைக்கிறார் ஷ்ரத்தா.

ஷ்ரத்தாவின் கணவரான விக்ரம் பிரபு, தன் மனைவியிடம் எந்தவொரு சண்டையும் போடாத நல்ல மனிதராக இருக்கிறார். அதே நேரம் மனைவியை பாராட்டுவது.. விசாரிப்பது.. என்பதைக்கூட செய்யாமல் அமைதியாகத் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இது ஷரத்தாவுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. அதனால் விக்ரம் பிரபுவுக்கு தினமும் ஒரு டாஸ்க் வைத்து அவரிடம் தனது நட்பையும், அன்பையும் வளர்த்து வருகிறார். இது ஒரு கட்டத்தில் விக்ரம் பிரபுவுக்குத் தெரிய வர.. அவர் இதை இன்ஸல்ட்டாக எடுத்துக் கொள்கிறார்.

இருவருமே நன்கு படித்தவர்களாக இருந்தாலும் விக்ரம் பிரபுவுக்குள் இது ஈகோவைத் தூண்டிவிட அவர் ஷரத்தாவிடம் பேச மறுக்கிறார். அவரிடமிருந்து தள்ளித் தள்ளிப் போக நினைக்கிறார் விக்ரம் பிரபு. இதனால் மனம் குமுறும் ஷ்ரத்தா, இது குறித்து விக்ரம் பிரபுவிடம் பேச அது இவர்களது குடும்ப வாழ்க்கையையும் சிதறடிக்கும் அபாயத்தைக் காட்டுகிறது.

குடும்ப நல ஆலோசனை சொல்பவருக்கே இந்த நிலைமை என்பதோடு மற்றவர்களின் நிலைமையும் மேலும் சிக்கலாக்கிவிட.. இறுதியில் என்னவாகிறது என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.

படத்தில் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். விக்ரம் பிரபு சின்னச் சின்ன கியூட் எக்ஸ்பிரஷன்களால் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். தனக்குள் குமைந்து கொண்டிருக்கும் விஷயத்தை வெளியில் பேச அவர் எடுத்துக் கொள்ளும் நேரமும், தயக்கமும்தான் இந்த ஜோடியின் கதையை நகர்த்துகிறது.

ஷ்ரத்தா நடிப்பில் பின்னியிருக்கிறார். “கேஸ்ன்னு சொல்லாதீங்க..” என்று தனது உதவியாளரை கண்டிப்பதில் துவங்கும் இவரது பேச்சும், நடிப்பும் படத்தில் பல இடங்களை வெகுவாக ரசிக்க வைக்கிறது. சின்ன சிரிப்போடு எதிரில் இருப்பவரின் குறைகளை அவர் மனம் நோகாமல் குறிப்பிட்டுச் சொல்லி அவர்களை மெளனமாக்கும் அந்த நிபுணத்துவத்தைக் கச்சிதமாகக் காட்டியிருக்கிறார் ஷ்ரத்தா.

அதே நேரம் ஒரு பெண் மிகப் பெரிய படிப்பாளினியாகவும், மன நல மருத்துவராக இருந்தாலும் தனது வீட்டில், தனது கணவருடன் பிரச்சினையென்றால் அதற்காகத் தானே முந்திக் கொண்டு இறங்கிப் போய் பேசினால்தான் ஆச்சு என்பதுபோல திரைக்கதை அமைத்திருப்பது சரியா இயக்குநரே..? விக்ரம் பிரபுவிடம் ஷ்ரத்தா தன்னிடம் பேசும்படி கெஞ்சுவதிலேயே அந்தக் கேரக்டரின் கெப்பாசிட்டி பவர் இழந்துவிட்டது. மாற்றியமைத்திருக்க வேண்டும் இந்தத் திரைக்கதையை!

விதார்த், அபர்ணதி ஜோடியுடன் படம் பார்க்கும் எல்லாரும் தங்களை எளிதாக தொடர்புப்படுத்தி பார்ப்பார்கள். குறிப்பாக, அபர்ணதி இந்தப் படத்தில் கடுமையான உழைப்பை கொடுத்துள்ளார். முதல் பாகத்தில் தனது உடம்பை ஏற்றியும், கடைசியாக எடையைக் குறைத்தும் ஆண்கள் செய்யக் கூடிய ஒரு நடிப்புப் பாணியை செய்திருக்கிறார் அபர்ணதி. இதற்காகவே அவருக்கு பெரிய பாராட்டுக்கள்.

விதார்த் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாத கணவனாகவும், தான் நினைத்தது போலத்தான் அனைவரும் இருக்க வேண்டும் என்று அடாவடியாக நினைப்பவராகவும் நடித்துள்ளார். வாழ்க்கை அவருக்கு அந்தப் பாடத்தைக் கற்றுக் கொடுத்துத் திசை திருப்பும்போதும், மனைவியைப் புரிந்து கொள்ளும்போதும் நமக்கும் பிடித்தவராகிறார் விதார்த்.

சானியா ஐயப்பன் – ஸ்ரீ ஜோடியும் ஒருவரையொருவர் குற்றம் சொல்லியே காலத்தையோட்டுவதும், தன்னைவிடவும் சானியா அறிவாளியாக இருப்பதைக் கண்டு ஒரு கணவனாக பெருமைப்படாமல் பொறாமை கொள்ளும் சாதாரணமானவனாக நடித்திருக்கும் ஸ்ரீ, அந்தக் கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்.

இருவரும் ஒருவரையொருவர் “நீதான் டார்ச்சர் பண்ற..” என்று திட்டிக் கொள்வதில் துவங்கி, யாராவது ஒருவர் இறங்கிப் போனால் நல்லாயிருக்குமே என்று நினைக்கின்றவரையிலும் தங்களது புரிதல் இல்லாத மன நிலையை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். கிளைமாக்ஸில் இருவரின் கண்கள் காட்டும் தவிப்பு, மெளன ராகம்’ மோகன்-ரேவதி ஜோடியின் தவிப்பை ஞாபகப்படுத்தியது.

ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாயின் ஒளிப்பதிவு படம் நெடுகிலும் ஒரே சீராகத் தென்பட்டு படத்தை ஹை கிளாஸ் படமாகக் காண்பித்திருக்கிறது. கலை இயக்குநரின் கை வண்ணத்தில் மூன்று ஜோடிகளின் வீடு, அலுவலக செட்டப் கண்களைக் கவர்கிறது. ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் ஒலிக்கும் பாடல்களும் திரைக்கதையை நகர்த்த உதவியிருக்கின்றன.

ஸ்கிரிப்ட்டில் நன்றாக இருக்கும் விஷயங்களை, சினிமாவில் சொல்லும்போது சில நேரங்களில் அது பார்வையாளர்களிடம் சரியாக ரீசாகாமல் போய்விடும். ஆனால் இந்தப் படத்தில் இயக்குநர் யுவராஜ், அதை தெளிவாக கையாண்டு திரையில் கொண்டு வந்துள்ளார்.

இந்தப் படம் குடும்பங்களுக்கு ஒரு நல்லதொரு அட்வைஸரைப்போல் அமைந்துள்ளது. அதேசமயம் ஒரு பிரச்சார படமாகவும் இது இல்லை. படம் பார்ப்பவர்களுக்கு ஏதோ ஒரு இடத்தில் ஒரு சொட்டு கண்ணீராவது வந்து விடும். அந்த வகையில் மூன்று ஜோடிகளின் கதையிலும் கண்ணீரைப் பொங்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

கணவன், மனைவியாக படம் பார்க்க வருபவர்கள் படம் முடிந்து போகும்போது தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளையும் தியேட்டரிலேயே பேசி முடிவுக்கு கொண்டுவந்து விட்டுதான் வீட்டுக்கு செல்வார்கள். அந்த அளவுக்கு ஒரு தாக்கத்தை கணவன்-மனைவிக்குள் இந்தப் படம் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இறுகப் பற்று – தம்பதிகள் எந்த வயதினராக இருந்தாலும் ஒருவரையொருவர் இறுகப் பற்றிக் கொள்ள வைக்கும் ஊன்றுகோல்..!

RATING : 4 / 5

 

Our Score