full screen background image

“தர்மபுரி’ படத்தில் வடிவேலு ஏன் நடிக்கவில்லை..?” – இயக்குநர் பேரரசு விளக்கம்!

“தர்மபுரி’ படத்தில் வடிவேலு ஏன் நடிக்கவில்லை..?” – இயக்குநர் பேரரசு விளக்கம்!

ஆர்.எஸ்.வி. மூவிஸ் சார்பில் சேலம் ஆர்.சேகர் தயாரிப்பில், ஏ.தமிழ்ச்செல்வன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘இரவினில் ஆட்டம் பார்’.

இப்படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் வெளியீட்டு விழா இன்று காலை பிரசாத் லேபில் நடைபெற்றது. ட்ரெய்லரை இயக்குநர் பேரரசு மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே.ராஜன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது, “முதலில் இந்தப் பட விழாவுக்கு வந்துள்ள நடிகை அஸ்மிதாவைப் பாராட்ட வேண்டும். ஏனென்றால், இப்போது படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் யாருமே அந்தப் படத்தின் விழாக்களுக்கு வருவதில்லை. இவர் வந்திருக்கிறார் என்கிறபோது பாராட்ட வேண்டும். சம்பளம் வாங்கிக்கொண்டு நடித்த நடிகர்கள் எல்லாம் விழாக்களுக்கு வருவதில்லை. ஆனால், சம்பளம் வாங்காத நாங்கள்தான் இந்த விழாக்களுக்கு வருகிறோம்; வாழ்த்துகிறோம். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். அது பற்றி இங்குள்ள கே.ராஜன் சார்தான் பேச வேண்டும்.

இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும்போது இளம் வயதினர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவது, அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து போலீஸ் அழிப்பது பற்றிய கதை போல் தோன்றுகிறது.

’இரவினில் ஆட்டம் பகலில் தூக்கம்’ என்று ’நவராத்திரி’யில் சிவாஜி சார் பாடுவார். அது திருடன் கதாபாத்திரத்தைப் பற்றியது. திருடர்கள்தான் இரவினில் தங்கள் வேலைகளைச் செய்வார்கள். பகலில் தூங்குவார்கள். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. இரவில் நைட் ஷிப்ட் வேலைக்குச் செல்கிறார்கள். திருடர்கள் இரவில் தூங்குகிறார்கள். பகலில் ஆட்டம் போடுகிறார்கள்.

இந்தப் படம் ஒரு போலீஸ் கதையாகத் தோன்றுகிறது. திரைப்படங்களில் போலீஸ் வேடம் என்றாலே விஜயகாந்த் அவர்கள்தான் ஞாபகத்துக்கு வருவார். எல்லா நடிகர்களுக்கும் ஒவ்வொரு படம் போலீஸ் சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களுக்காகப் பேசப்படும். ஆனால் கேப்டன் விஜயகாந்த் நடித்த பல படங்களில் அவர் போலீஸ் பாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படங்கள் வெற்றிப் படமாகவும் அமைந்திருக்கும்.

‘புலன் விசாரணை’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘மாநகர காவல்’, ‘ஊமை விழிகள்’, ‘ஆனஸ்ட் ராஜ்’ என்று சொல்லிக் கொண்டே போகலாம். திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரம் என்றால் அவர் பெயர்தான் நினைவுக்கு வரும் அளவிற்கு நிறைய படங்கள் நடித்திருக்கிறார்.

அவரை வைத்து நான் ‘தர்மபுரி’ படம் எடுத்தபோது வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று அவருக்கு போலீஸ் கதாபாத்திரத்தை நான் கொடுக்கவில்லை. கிராமத்துப் பின்னணியில் கதை அமைத்தேன்.

‘தர்மபுரி’ படத்தில் விஜயகாந்த் அவர்களுடன் வடிவேலு நடிப்பதாகத் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கூறினார். அதற்கு விஜயகாந்த் அவர்களும் ஒப்புக்கொண்டார். ஆனால் படம் முழுக்க வருவது போல் அந்தப் பாத்திரம் அமைந்திருக்கும் என்பதால் நான்தான் எம் எஸ் பாஸ்கரை நடிக்க வைத்தேன். கால்ஷீட் பிரச்சினை வரும் என்பதால்தான் நாங்கள் வடிவேலுவை நடிக்க வைக்கவில்லை. மற்றபடி அவர்களுக்குள் எந்தவிதமான மனக்கசப்புகளும் இல்லை. அப்படி அனைவரையும் அன்போடு பார்ப்பவர்தான் விஜயகாந்த். இந்தப் படம் போலீஸ் கதை என்பதால் அவர் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.

விழாவில் யாத்திசை’ படத்தின் இயக்குநர் தரணி ராஜேந்திரன், ‘டாடா’ படத்தின் இயக்குநர் பாபு கே.கணேஷ், ‘தூக்குதுரை’ இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், சிறு முதலீட்டுப் படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் அன்புச்செல்வன், இசையமைப்பாளர் நல்லதம்பி, படத்தில் நடித்திருக்கும் நடிகை அஸ்மிதா, நடிகர் எம்.ராஜேந்திரன், பாடல் ஆசிரியர் செல்வராஜா, ஒளிப்பதிவாளர் ஜீனோ பாபு, நடிகர் ஜி.எச்.ராஜேந்திரன், பாடகர்கள் அபிஷேக், விஷ்வா, சண்டை இயக்குநர் டான் ஈஸ்வரன், இயக்குநர்கள் அலிகான், முருகன், படத்தின் கதாநாயகன் கே.எஸ்.உதயகுமார், படத்தின் இயக்குநர் ஏ.தமிழ்ச்செல்வன், தயாரிப்பாளர் சேலம் ஆர்.சேகர் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

Our Score