full screen background image

இரவின் விழிகள் – சினிமா விமர்சனம்

இரவின் விழிகள் – சினிமா விமர்சனம்

மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘இரவின் விழிகள்’.

மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான ‘பங்காரா’ என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர்.

மேலும் முக்கிய வேடங்களில் ‘நிழல்கள்’ ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு ஏ.எம்.அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவை கவனிக்க ‘விடுதலை’ படத்தின் படத் தொகுப்பாளர் ஆர்.ராமர் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. சண்டைப் பயிற்சியை சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா ஆகியோரும், நடனத்தை எல்.கே.ஆண்டனியும் வடிவமைத்துள்ளனர். இப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார்.

இந்தப் படம் சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. ஒருவன் சைக்கோ ஆவதற்கு அவனுக்கென தனிப்பட்ட சொந்த ஒரு காரணம் இருக்கும். இங்கே அப்படி ஒருவன் சைக்கோ ஆவதற்கு இந்த சமுதாயத்தின் மீதான ஒரு கோபமும் ஒரு பொது விஷயமும் காரணமாக இருக்கிறது. அது என்ன என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

படத்தின் தலைப்பை கதை என்ன என்பதை உங்களுக்கு சொல்லி இருக்கும்.. ஆமாம்..  சர்வ சத்தியமாக சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படம்தான் இது.

காதலர்களான மகேந்திரனும், நீம ராயும் யூடியூப் சேனல் வைத்திருக்கிறார்கள். அதில் அதிகப்படியான பார்வையாளர்கள் இருக்க தினந்தோறும் ஏதோ ஒரு வீடியோவை அப்லோட் செய்து கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும், பார்வையாளர்கள் கூடவில்லையே என்ற கவலையும் வியூஸ் அதிகமாக வரவில்லையே என்ற கவலையும் இவர்கள் இருவருக்கும் அதிகமாகவே இருக்கிறது.

இந்த நேரத்தில் ஏற்காடு மலைப் பகுதியில் ஒரு நள்ளிரவில் அந்த வழியாக வரும் ஒரு டூ வீலர் எதிரில் ஒரு மர்ம மனிதன் திடீரென்று வந்து நிற்க.. இதைப் பார்த்து வண்டியோட்டி குடை சாய்கிறான். கீழே விழுந்த அந்தப் பயணியை அந்த மர்ம மனிதன் தனியாக இழுத்து வந்து மரத்தில் கட்டி வைத்து சித்திரவதை செய்து கொலை செய்கிறான்.

இதற்கு அடுத்து இன்னொரு பெண்ணும் அதே போல் அதே நடுக்காட்டில் அதே இரவில் வர.. அவளையும் அதுபோல சித்திரவதை செய்து கொலை செய்கிறான் அந்த மர்ம மனிதன்.

அந்தக் காட்டுப் பகுதியிலேயே பாதுகாப்புக்கு வந்திருக்கும் இன்ஸ்பெக்டர் சேரன் ராஜும், கான்ஸ்டபிள் சிசர் மனோகரும்… அந்த வழியாக ஒரு மோட்டார் பைக்கில் வருபவனை பிடித்து விசாரிக்கிறார்கள்.அந்த பைக் திருடப்பட்ட பைக் என்பது தெரிகிறது எந்த இடத்தில் திருடினாய்.. அதைக் காட்டு என்று சொல்லி அவனை அழைத்து வருகிறார்கள்.

மகேந்திரனும், நீமா ராயும் தங்களுடைய விடுமுறையை என்ஜாய் செய்வதற்காக அந்தக் காட்டுப் பகுதியின் வழியில் ஏலகிரிக்கு வருகிறார்கள். இவர்களையும் அதே மர்ம மனிதன் விபத்துக்குள்ளாக்கி அவர்களை சித்திரவதை செய்கிறான்.

இந்த நேரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன் ராஜூம், சிசர் மனோகரும் அந்தக் காட்டுக்குள் அந்த பைக்கின் உண்மையான உரிமையாளனைத் தேடி உள்ளே வர இரண்டு குழுக்களும் ஓரிடத்தில் சந்திக்கின்றன.

இதன் பின்பு என்ன நடந்தது? அந்த மர்ம மனிதன் யார்..? அவன் எதற்காக இந்த கொலைகளை செய்தான் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

இப்போது உலகம் முழுவதுமே கிராமங்களாக இருந்தாலும் facebook ஐடி என்ன? இன்ஸ்டாகிராம் ஐடி என்ன? ஜிமெயில் ஐடி என்ன என்று கேட்பதுதான் உலக வழக்கமாகி போய்விட்டது. அந்த அளவுக்கு சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் தனியொரு மனிதனின் தின வாழ்க்கையில் பெரும் குறுக்கீடாக இருக்கிறது.

சோறு, தண்ணி இல்லை என்றாலும் பரவாயில்லை. செல்போன் இல்லாமல், நெட் கனெக்சன் இல்லாமல் சமூக வலைத்தளங்களை பார்க்க முடியாமல் ஒரு மனிதனால் இன்றைக்கு இருக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அந்த அளவுக்கு இந்த சமூக வலைத்தளங்கள் மீது பார்வையாளர்கள் அடிக்ட் ஆகி விட்டார்கள் என்றே சொல்லலாம். அதே சமயம் இந்த சமூக வலைத்தளங்கள் மூலமாக பல நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும், இன்னும் நிறைய கெட்ட விஷயங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதில் அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பது பெண்கள்தான். அதுவும் இந்தியாவில் இருக்கும் பெண்கள்தான். எது உண்மை.. எது பொய் என்பதை உணரக்கூட முடியாத அளவுக்கு இருக்கும் அவர்கள், இணையத்தில் எது வந்தாலும் உண்மை என்று நம்பி விடுகிறார்கள்.

அதோடு ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் பெண்களை அவமானப்படுத்துவதற்கும், கேவலப்படுத்துவதற்கும் அவருடைய நிர்வாண உடல் ஒன்றே போதும் என்று நினைக்கிறார்கள்.

இதனாலேயே பெண்களை இழிவுபடுத்தும்விதமாக அநாகரிமான புகைப்படங்களும், வீடியோக்களும் அத்து மீறிய பாலியல் துன்புறுத்தல் வீடியோக்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

இன்னொரு பக்கம். பெண்கள் தாங்களே மனமுவந்து வந்து பணத்திற்காகவோ, அல்லது லைக்ஸூக்காகவும், வியூஸூக்காகவும், பெயர், புகழுக்காகவும் தங்களுடைய உடலை காட்டி ஆண்களை கவர்கிறார்கள்.

இந்தக் கவன ஈர்ப்பு ஒரு கட்டத்தில் அவர்களை பல்வேறு சிக்கல்களில் கொண்டு போய் மாட்டி விடுகிறது. இந்த விஷயத்தைத்தான் இந்தப் படத்தில் இயக்குநர் சொல்ல வந்திருக்கிறார்.

படம் முழுவதும் ஒரே இருட்டிலேயே எடுத்திருக்கிறார்கள்! நடிகர், நடிகைகள் பலருக்கும் குளோசப் காட்சிகளில்கூட கொஞ்சம் அவர்கள் நடிப்பை நமக்கு காட்டுவதுபோல படமாக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மகேந்திரன், நிமா ரேய் இருவரின் பாடல் கட்சியை மட்டுமே உருப்படியாக அழகாக படமாக்கி இருக்கிறார்கள். அதுவும் நீமா ரேய் காட்டிய கொஞ்சூண்டு கவர்ச்சிக்காகவே!

இறுதியில் அந்த மர்ம மனிதன் அரை மணி நேரம் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த துன்பவியல் கதையை சொல்லும்பொழுது நம்மால் உச்சுக் கொட்டக்கூட முடியவில்லை. ஏனெனில், அந்த அளவுக்குத்தான் இந்தப் இடத்தில் இயக்கமும், நடிப்பும் இருந்தது.

மற்றைய நடிகர்களையும் அழகாக நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் இயக்குநரின் திறமை இவ்வளவுதான் என்று சொல்வதைப்போல, ஒவ்வொரு கதாபாத்திரமும் அளவோடு நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

காட்சிகளை படமாக்கியவிதத்திலும் இயக்குநர் ஏதோ அப்ரண்டீஸ் இயக்குநர்போல நமக்குத் தெரிகிறார் .பகல் நேரத்தில் காட்சிகளை எடுத்து அதை இரவு நேர கட்சியாக மாற்றி வைத்திருக்கும்விதம் முதல் காட்சியிலேயே நமக்கு தெரிந்துவிட்டது. இந்த அளவுக்கு குறைபாடுகளுடன் இந்த படத்தை இயக்குநர் எப்படி வெளிக் கொண்டு வந்தார் என்றே தெரியவில்லை.

ஒளிப்பதிவு, இசை, படத் தொகுப்பு என்று பல தொழில் நுட்பங்களும் இந்தப் படத்தில் நமக்கு அல்வாவைத்தான் கொடுத்திருக்கின்றன.

அஸ்மிதாவை வைத்து ஒரு பாடல் கட்சியை கவர்ச்சி கோணத்தில் எடுத்து தள்ளி இருக்கிறார்கள். அதிலும் சென்சார் போர்டின் அறிவுறுத்தலால் அதற்கும் மாஸ்க் போட்டுவிட.. இதை எடுக்காமயே இருந்திருக்கலாமே ஐயா என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

இயக்குநர் சொல்ல வந்த கருத்து நியாயமானதுதான். நிச்சயமாக ஏற்கக் கூடியதுதான். ஆனால் அதை சொன்னவிதம்தான் நம்மை பலி வாங்கிவிட்டது. இன்னமும் சிறந்த கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கலாம்,

ஆனால், இயக்குநர் தனக்குத் தெரிந்தது இவ்வளவுதான் என்று சொன்ன பின்பு நாம் அவருடன் மல்லு கட்ட முடியாது. ஆகவே இயக்குநரின் இந்த சோதனை முயற்சி படத்தை பாராட்டுகிறோம்.

ஆனால், அதே சமயம் இந்த ஒரு படத்தை வெற்றிகரமாக கொடுத்து விட்டோம் என்று நினைத்து இயக்குநர் அடுத்தப் படத்தையும் எடுத்துவிட வேண்டாம்.

அதற்கு முன்பாக அவர் ஏதாவது ஒரு பெரிய இயக்குநரிடம் வேலைக்கு சேர்ந்து துணை, இணை இயக்குநராகப் பணியாற்றி இரண்டு படங்களிலாவது இயக்கத்தை கற்றுக் கொண்டு வந்தால் அவரை வைத்து படமெடுக்கப் போகும் அடுத்த தயாரிப்பாளர்களுக்கு நிச்சயமாக நல்லதாக இருக்கும். தமிழ் திரைப்பட உலகத்துக்கும் ஒரு உதவியாக இருக்கும்.

RATING : 1.5 / 5

Our Score