‘இறப்பு’ எனும் துயர சம்பவத்தின் பின்னணியை மையப்படுத்தி ‘இறப்பின் ரகசியம்’ எனும் பெயரில் புதிய தமிழ் திரைப்படமொன்று தயாராகி வருகிறது.
ஒரு உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் இந்தப் படத்தை மனோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ராஜா தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் மைம் கோபி, அப்புக்குட்டி, சம்பத்ராம், மணிமாறன், K.P.Y.பாலா, சில்மிஷம் சிவா, ராஜ் தேவ், ஆதாஷ், சபரி, குழந்தை நட்சத்திரம் சஞ்சனா, குமார் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இயக்குநர் இமானுவேல் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கிறார். புதுமுக ஒளிப்பதிவாளர் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். படத் தொகுப்பு பணிகளை செஞ்சி மாதவன் கவனிக்கிறார். இவர் ‘தில்லுக்கு துட்டு-2’, ‘இடியட்’ போன்ற வெற்றிப் படங்களின் எடிட்டர் ஆவார்.
கன்னடப் படமான ‘தேவராகன்சு’, ‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் ‘கருப்பு பல்சர்’, யோகிபாபு நடிக்கும் ‘ஹைகோர்ட் மஹாராஜா’ போன்ற படங்களின் இசையமைப்பாளரான சாண்டி இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.
‘ரூத்ர தாண்டவம்’, ‘பகாசூரன்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’ போன்ற பல வெற்றி படங்களில் சண்டைப் பயிற்சியாளராக இருந்த சண்டை பயிற்சியாளர் ‘மிரட்டல்’ செல்வா இப்படத்தில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார். டாக்டர் லட்சுமி பிரியா இணை தயாரிப்பாளராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். பத்திரிகை தொடர்பு – சிவக்குமார்.
இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் இமானுவேல் பேசும்போது, ”நாம் அனைவரும் பிறப்பின் ரகசியம் குறித்து மருத்துவ ரீதியாக தெரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இறப்பின் ரகசியம்.. இன்றுவரை புரியாத புதிராகத்தான் இருக்கிறது. அதனால்தான் படத்தின் தலைப்புடன் ‘தெரிந்து கொள்ள தைரியம் தேவை’ என்ற டேக் லேனை இணைத்திருக்கிறோம்.
இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்க்கும்போது இறப்பின் ரகசியம் ரசிகர்களுக்கு தெரியும். இது பேய் படம் அல்ல. தமிழகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை தழுவி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
தற்போது இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.