full screen background image

ஊசலாடும் மனதின் கதைதான் ‘இரண்டு மனம் வேண்டும்’ திரைப்படம்

ஊசலாடும் மனதின் கதைதான் ‘இரண்டு மனம் வேண்டும்’ திரைப்படம்

ஒவ்வொரு இயற்கைச் சீரழிவும் பல உயிர்களுக்கு முடிவுரை எழுதினாலும் சில உணர்ச்சிகரமான கதைகளுக்கு முன்னுரை எழுதவும் தவறுவதில்லை.

தமிழ்நாடு சந்தித்த மாபெரும் இயற்கை சீற்றத்திலிருந்து ஒரு நெகிழ்ச்சியான கதையை இழை பிரித்து  ‘இரண்டு மனம் வேண்டும்’ என்கிற திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்.

குழந்தையை மையப்படுத்திய பாசப் போராட்டம்தான் கதை  என்றாலும் காதல், நகைச்சுவையும் கலந்த திரைக்கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை  பிரதீப் சுந்தர் இயக்கியுள்ளார், இவர் மலையாளத்தில் பல முன்னணி இயக்குநர்களிடம் பணியாற்றியவர். இது இவருக்கு முதல் படம். ஹோலிமேன் பிலிம்ஸ் சார்பில் அனில் கொட்டாரக்கரா தயாரிக்கிறார். கதை. திரைக்கதை வசனத்தை சி.ஆர்.அஜய் குமார் எழுதியுள்ளார்.

நாயகனாக சஜி சுரேந்திரன், நாயகியாக சிலங்கா நடித்துள்ளார்கள். மோகன் சர்மா, அழகு, கிரேன் மனோகர், சீமாஜி நாயர், சாய்னா, ரிந்துரவி, அருள்மணி, மணிமாறன், 11 மாத சிறு குழந்தை ப்யோனா ஆகியோரும் நடித்துள்ளார்கள்.  

வி.கே.பிரதீப் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் 3 பாடல்கள். இசை அறிமுகம் முகமது அலி, பாடல்கள் – வேல் முருகன். படத்தொகுப்பு -ரஞ்சித் டச் ரிவர், கலை -ஜோசப் போபின், ஸ்டண்ட்- பயர் கார்த்திக், நடனம்- மதோ ஆர்., தயாரிப்பு மேற்பார்வை- சுகுமார்,  தயாரிப்பு நிர்வாகம்- கார்த்திக்.

படம் பற்றி பேசிய இயக்குநர் பிரதீப் சுந்தர், “இதுவொரு சாதாரண மனிதனின் அசாதாரணமான கதை எனலாம். கடலோரப் பகுதியின் பின்புலத்தில் நிகழும் இக்கதை பார்ப்பவர்களின் மனசோரம் நிச்சயமாக இடம் பிடிக்கும். நம்  அனைவரிடமும் உள்ள  ஊசலாடும் எண்ண ஓட்டமே இரண்டு மனங்கள் எனப் பேச வைப்பவை. அவையே இந்தப் படத்தின் போக்கை நிர்ணயிக்கும்படி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இப்படம் மலையாளத்தைவிட  தமிழில் வரவேற்பைப் பெறும். இப்போது தமிழில் வெறும் சண்டை, அடிதடி, பேய் என்றுதான் படங்கள் வருகின்றன. முழுமையான பாசம், காதல், நேசம் பற்றி தமிழில்  படம் எடுக்க யாரும் முயல்வதில்லை. ஆனால் அப்படிப்பட்ட படங்களை தமிழில் ரசிகர்கள் வரவேற்கத் தயங்கமாட்டார்கள். அந்த நம்பிக்கையில் எல்லாருக்கும் தெரிந்த ஒரு கதையை எடுத்துக் கொண்டு யதார்த்தமாகப் படமாக்கி இருக்கிறோம்…” என்கிறார்.

நாகர்கோவில், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் முப்பது நாட்களில் முழுப் படப்பிடிப்பை முடித்து சரியான திட்டமிட்டலுக்கு உதாரணமாகி இருக்கிறது படக்குழு. ஆகஸ்டு மாதம் படத்தை வெளியிடும் நோக்கில் இப்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

Our Score