full screen background image

இறைவி – சினிமா விமர்சனம்

இறைவி – சினிமா விமர்சனம்

படத்தின் துவக்கத்திலேயே சுஜாதா, கே.பாலசந்தர், பாலு மகேந்திராவின் புகைப்படங்களை காட்டி ‘இவர்களுக்கு இந்தப் படம் காணிக்கை’ என்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

அந்த அளவுக்கு படம் தகுதியானதுதானா என்பதை மேற்கண்ட மூன்று இயக்குநர்களின் படங்களையும் முழுமையாகப் பார்த்தறிந்த ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும். இப்போதைய ரசிகர்களுக்கு இதுவொரு கார்த்திக் சுப்புராஜின் படம். அவ்வளவுதான்.

‘பெண்ணியத்தைப் போற்றியிருக்கிறது’ என்று ஒரு பக்கம்.. ‘அப்படி எதுவும் சொல்லப்படவில்லை. ஆண்களின் அடாவடித்தனத்தை மட்டுமே சுட்டிக் காட்டியிருக்கிறது’ என்று இன்னொரு பக்கம்.. ‘எடுத்திருக்கக் கூடாத படம்’ என்று வேறொரு பக்கமுமாக பல திசைகளில் இருந்தும் போர்க்கணைகளை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

‘ஜிகர்தண்டா’ பட இயக்கத்தின்போது அதன் தயாரிப்பாளர் ‘பைவ் ஸ்டார்’ கதிரேசனுடன் தனக்கேற்பட்ட மோதலைத்தான் எஸ்.ஜே.சூர்யாவின் கதையில் வைத்திருக்கிறார் இயக்குநர் என்று ஒரு சிலரும், ‘மாஸ்கோவின் காவிரி’ படம் தொடர்பாக அதன் இயக்குநர் ரவி வர்மாவுக்கும், தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் அடிப்படைதான் படத்தின் கதை என்று இன்னும் சிலரும் சொல்லி வரும் வேளையில்.. “அதெல்லாம் எதுவும் இல்லீங்கோ.. யார், யாரையோ குத்தம் சொல்லி படமெடுக்குறாங்க.. இதுல தயாரிப்பாளரை குத்தம் சொல்லி எடுத்தால்தான் என்ன..? அது அந்த இயக்குநரின் தனிப்பட்ட விருப்பம். ஒரு படைப்பாளியின் உரிமை…” என்று இன்னொரு பக்கமும் பேச்சுக்கள் தடித்து வரும் சூழலில், உண்மையாகவே படம் என்ன சொல்ல வந்திருக்கிறது.. என்ன சொல்லியிருக்கிறது என்பதை பார்ப்போம்.

பரம்பரை பரம்பரையாக சிலை செய்யும் சிற்பக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ராதாரவி. மனைவி வடிவுக்கரசி. இவரது மூத்த மகனான சூர்யா சினிமா இயக்குநர். ஒரு படத்தை இயக்கிவிட்டு அதன் வெளியீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இரண்டாவது மகன் பாபி சிம்ஹா கல்லூரி மாணவர்.

தயாரிப்பாளருக்கும், சூர்யாவுக்குமான ஈகோ மோதலினால் தயாரிப்பாளர் படத்தைக் கிடப்பில் போட.. இந்தப் பாதிப்பில் முழு நேர குடிகாரனாக மாறுகிறார் சூர்யா. இவரது மனைவியான கமலினி தனது 7 வயது மகளுடன் என்றைக்காவது ஒரு நாள் சூர்யா திருந்திவிடுவார் என்ற எண்ணத்தில் அவரைச் சகித்துக் கொண்டு வாழ்கிறார்.

வாழ்நாள் முழவதும் தனது கணவர் தன்னை அவமதித்தே வந்திருக்கிறார் என்று சொல்லி புலம்பும் வடிவுக்கரசி, அந்த மனத்தாங்கலிலேயே உடல் நலிவுற்று, இப்போது கோமா ஸ்டேஜில் மருத்துவமனையில் இருக்கிறார்.

இவர்களது சிற்பக் கலைக் கூடத்தில் பல ஆண்டுகளாக வேலை செய்து வந்த சீனுவின் அண்ணன் மகன் விஜய் சேதுபதி. இவர் சூர்யா மீது பெரும் மரியாதை வைத்திருக்கிறார். ஏற்கெனவே கல்யாணமாகி கணவரை இழந்த பூஜா என்கிற மாடர்ன் ஓவியம் வரையும் பெண்ணுடன் இவருக்குக் காதல் இருக்கிறது. அது படுக்கைவரையிலும் தொடர்ந்திருக்கிறது.

பூஜாவை தான் காதலிப்பதாகவும், திருமணம் செய்து வைக்கும்படியும் விஜய் சேதுபதி தன் சித்தப்பா சீனுவிடம் கேட்க.. சீனு, பூஜாவிடம் வந்து பேசுகிறார். பூஜாவோ “எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை” என்கிறாள். “அவள் உறவு வேண்டாம்…” என்கிறார் சீனு. வேறு வழியில்லாமல் பொன்னி என்னும் அஞ்சலியைக் கரம் பிடிக்கிறார் விஜய் சேதுபதி. கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து தனது கணவருடன் வாழத் துவங்குகிறார் அஞ்சலி.

இந்த நேரத்தில் எப்படியாவது சூர்யாவைத் திருத்த நினைத்து முடியாமல் போக.. தயாரிப்பாளருடன் சமாதானம் பேசப் போகிறார்கள் ராதாரவி, கமலினி, சீனு கோஷ்டி. “படத்துக்கான செலவு தொகையை திருப்பிக் கொடுத்திட்டு, படத்தை வாங்கிக்குங்க…” என்கிறார் தயாரிப்பாளர்.

பணத்துக்கு என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். பணம் கொடுக்க தாமதமாகும் நேரத்தில், தயாரிப்பாளர் திடீரென்று சூர்யா இயக்கிய படத்தை தூக்கியெறிந்துவிட்டு, அதே கதையை தனது தம்பியின் இயக்கத்தில் புதிய படத்தைத் தயாரிக்கப் போவதாகச் சொல்கிறார்.

இதனைக் கேட்டு கோப்ப்படும் சூர்யா அந்த நள்ளிரவு நேரத்தில் தயாரிப்பாளரை தேடிப் போகிறார். அங்கே குடிபோதையில் வரும் சூர்யாவை தயாரிப்பாளரும், அவரது தம்பியும் கட்டி வைத்து அடிக்கிறார்கள். அவர்கள் சூர்யாவை சாகடிக்க நினைத்த நேரத்தில் விஜய் சேதுபதியும், பாபி சிம்ஹாவும் வந்து அவரைக் காப்பாற்றுகிறார்கள்.

ஆனாலும் கோபத்தின் உச்சத்தில் இருந்த விஜய் சேதுபதி தயாரிப்பாளரை கொலை செய்கிறார். மனைவி தான் கர்ப்பமாக இருப்பதாகச் சொன்ன அடுத்த அரை மணி நேரத்தில் கொலைகாரனாகிறார் விஜய் சேதுபதி. 7 வருட சிறைத் தண்டனை கிடைக்கிறது.

சூர்யாவின் போக்கு மாறாமல் இருப்பதையடுத்து மனைவி கமலினி தனது குழந்தையுடன் தாய் வீட்டுக்கே சென்றுவிடுகிறார். அஞ்சலியும் கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு சொந்த ஊருக்கே சென்றுவிடுகிறார்.  

ஆனாலும் ராதாரவி, சீனுவின் முயற்சியால் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீன் கிடைத்து வெளியே வருகிறார் விஜய் சேதுபதி. வந்த வேகத்தில் சொந்த ஊருக்கே திரும்பிப் போன மனைவியைத் தேடிச் சென்று பார்க்கிறார். மகளை கொஞ்சுகிறார். திரும்பவும் அவர்களுடன் சென்னை திரும்புகிறார்.

இந்த நேரத்தில் கொலையுண்ட தயாரிப்பாளரின் மனைவி திரும்பவும் ராதாரவி அண்ட் கோ-விடம் வந்து, அந்தப் படத்தை மொத்தமாக சூர்யாவுக்கே தருவதாகவும், செலவு செய்த பணத்தைக் கொடுத்துவிட்டு படத்தின் உரிமையைப் பெற்றுக் கொள்ளும்படியும் சொல்கிறார்.

இப்போது குடும்பமே உட்கார்ந்து யோசிக்கிறது. பணம் சம்பாதிக்க என்ன வழி என்று பேசும்போது ஏற்கெனவே பழங்கால சிலைகளை கோவிலில் இருந்து திருடிய அனுபவம் கை கொடுக்க, “திருடுவது ஒன்றுதான் சரியான வழி. அதில்தான் சுலபமாக, சீக்கிரமாக பெரும் பணக்காரனாக முடியும்…” என்கிறார் சிம்ஹா.  

ராதாரவி உட்பட அனைவருமே இதற்கு ஒத்துக் கொள்கிறார்கள். இந்த திருட்டுக்காக கேரளாவுக்கு செல்கிறார்கள். அங்கே ஒரு கோவிலில் திருடச் சென்ற நிலையில், தந்திரமாக விஜய் சேதுபதியை மட்டும் போலீஸில் மாட்டிவிட்டு கூட்டாளிகளுடன் தப்பிச் செல்கிறார் பாபி சிம்ஹா.

ஆனாலும் கேரள போலீஸிடமிருந்து தப்பிக்கும் விஜய் சேதுபதி பாபி சிம்ஹாவின் கடைசியாக இதில் இருக்கும் உண்மையைக் கண்டறிகிறார். அதற்குள்ளாக பணம் சூர்யாவின் கைக்கு கிடைத்து படத்தின் உரிமையையும் வாங்கி விடுகிறார்கள். பட வெளியீட்டிற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடக்கும் சூழலில் விஜய் சேதுபதி, குடும்பத்துடன் சென்னையில் இருந்து வெளியேற முடிவெடுக்கிறார்.

ஏன் இந்த முடிவு..? கடைசியில் என்ன ஆனது..? படம் வெளியானதா..? சூர்யா-கமலினி ஒன்று சேர்ந்தார்களா..? இல்லையா..? பாபி சிம்ஹா ஏன் விஜய் சேதுபதியை மாட்டிவிட்டார் என்பதெல்லாம் சொல்லாமல் இருக்க வேண்டிய சின்னச் சின்ன டிவிஸ்ட்டுகள். இதை மட்டுமாவது தியேட்டரில் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்..!

பெண்ணியம்.. பெண்மையை உயர்த்திச் சொல்லியிருக்கிறது.. ஆண்களின் அகம்பாவம் பற்றி கேள்வி எழுப்புகிறது.. ஆண் திமிரை பறை சாற்றியிருக்கிறது என்று விதம்விதமான பாராட்டுக்களில் இந்தப் படத்தை அணுகலாம். இது அவரவர் மனோபாவத்தையும், ரசிப்புத் தன்மையையும் பொறுத்தது.

இந்தப் படம் பெண்மையைப் பெரிதும் போற்றவில்லை. அதே சமயம் ஆணாதிக்க உணர்வை அதிகமாக வெளிப்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை. ஆண்களால் பாதிக்கப்படும் 5 பெண்களின் வாழ்க்கையைத்தான் இந்தப் படம் சொல்கிறது.

மனைவி, பிள்ளை இருந்தும் தன் படம் வெளியாக வேண்டும் என்பதுதான் தனக்கு மிக முக்கியமான கவலை.. விஷயம் என்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

தன்னை நம்பி வந்த அப்பாவி மனைவி கர்ப்பமாகியிருக்கும் சூழலிலும், தனக்கு பாசமான அண்ணனுக்காக கொலை செய்யவும் தயங்க மாட்டேன் என்கிறார் விஜய் சேதுபதி.

தனது அண்ணன் மனைவியாக இருந்தாலும் தனக்குப் பிடித்துப் போயிருக்கிறது. நான் அவளைக் காதலிப்பேன் என்ற கூடா காதல் திமிரில் இருக்கிறார் பாபி சிம்ஹா.

பிள்ளைகள் வளர்ந்த பின்னும், பேத்தியை பார்த்த பின்பும் தன் மனைவியை மதிக்கத் தெரியாத கணவனாக இருக்கிறார் ராதாரவி.

பணத் திமிரில் எப்பேர்ப்பட்ட படைப்பாளியையும் தனது காலை நக்கச் சொல்லும் அளவுக்கு மனிதாபிமானமற்ற தயாரிப்பாளராக இருக்கிறார் விஜய் முருகன்.

இப்படி இந்த 5 ஆண்களின் முட்டாள்தனமான, அவசரத்தனமான, மூர்க்கத்தனமான செயல்களால் இவர்களது குடும்பத்து பெண்கள் எந்த அளவுக்கு கஷ்டப்படுகிறார்கள் என்பதைத்தான் இந்தப் படத்தின் மூலமாக வெளிக்காட்டியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

சூர்யா என்ற ஒற்றை மனிதன்தான் இந்தப் படம் முழுவதையும் தாங்கியிருக்கிறார். என்ன நடிப்பு அது..? கோபமான குடிகாரன், பாசமான அப்பா, காதலனான கணவன், கர்வம் நீங்காத படைப்பாளி.. குடும்பத்திற்காக இறங்கிச் செல்பவன் என்று அனைத்தையும் ஈடுகட்டி நடித்திருக்கிறார் சூர்யா. பாடல் காட்சிகளில் சூர்யா காட்டியிருக்கும் ஸ்டைல் தற்போதைய பெரிய நடிகர்களிடம்கூட இதுவரையிலும் காணாதது.

“பார்த்துக்கிட்டேயிருங்க.. தலயில பாதி, தளபதில பாதின்னு கலந்து செஞ்ச ஒருத்தன்தான் என்னைத் தேடி வருவான்” என்று பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் பொன்னி, தனக்கு நேர்ந்த அவலத்தை சந்தித்துக் கொள்ளும் பக்குவத்துடன் பேசுவது அழகு.

கிராமத்து வீட்டில் விஜய்யுடன் கோபப்பட்டு பேசிவிட்டு கடைசியாக ஒரு சின்ன சிரிப்பினை உதிர்க்கும்போது தெரிவதெல்லாம் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும். ஒரு மனைவியிடம் கேட்கக் கூடாத அந்தக் கேள்வியைக் கேட்டவுடன் பொங்கியெழுந்துவிட்டு பின்பு காதல் உணர்வுடன் கட்டிக் கொண்டு “அதுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்..” என்கிற காட்சியில் அஞ்சலி மறைந்து பொன்னியே தெரிகிறாள்.. பல இடங்களில் செமத்தியான இயக்கம்தான்.

மலரின் சிரிப்பில் இருக்கும் காந்தமும், பேச்சில் இருக்கும் வசீகரமும் விஜய் சேதுபதியை கவர்ந்திழுத்ததில் ஆச்சரியமில்லை. வெகு நாட்களுக்குப் பிறகு திரைக்கு வந்திருக்கும் சீனு மோகனும் அசத்தியிருக்கிறார். கடைசியில் அஞ்சலியை திரும்பிப் பார்க்காமல் போகும்படி சொல்வதை படம் பார்க்கும் ரசிகர்களின் ஏகோபித்த குரலாக அதனை எடுத்துக் கொள்ளலாம்.

ராதாரவியின் பண்பட்ட நடிப்புக்கு அந்த நர்ஸிடம் சத்தம் போடும் ஒரு காட்சியே போதும். ஒவ்வொரு முறையும் அலுத்துக் கொண்டே செல்லும் அந்த நர்ஸ் கடைசி முறையில் வெளியேற்றப்படுவதுகூட ஆண் என்கிற திமிரால்தான். இயக்குநர் அனைத்துவகைகளிலும் யோசித்து, யோசித்துதான் எழுதியிருக்கிறார் போலும்..!

ஒரு மழை நாளில் துவங்கும் கதை, கடைசியாக ஒரு மழை நாளிலேயே முடிகிறது. அந்த மழைக் காட்சிகளில் மூன்று பெண்களின் கதையையும் தொட்டுத் தொட்டு சொல்லும்போதே படம் சீரியஸ் என்பது புரிந்துவிடுகிறது.

முதல் காட்சியில் மழையில் நனையாமல் இருக்கப் பழகியிருக்கும் அஞ்சலி, கடைசி காட்சியில் தனது மகளிடம் “மழையில் நனையலாமா..?” என்கிறார்.

காதல்வயப்பட்டு பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்யும் கமலினி, கடைசி காட்சியில் தன் மகளை மழையிடமிருந்து காத்துக் கொள்கிறார். மழையில் நனைய வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்.

காலம் முழுக்க தான் அடிமையாக நினைத்த மனைவி, இப்போது படுத்த படுக்கையானவுடன் தன் நிலை புரிந்து மனைவிக்கு பணிவிடை செய்கிறார் ராதாரவி.

ஊர் முழுக்க கடன் வைத்திருக்கும் சூழலிலும் எடுத்த படத்தை திரைக்குக் கொண்டு வர மாட்டேன் பிடிவாதமாக இருந்து தனது சாவுக்கு பின்பு தனது குடும்பத்தை பெருத்த கடன் சுமையில் தள்ளிவிட்டுப் போயிருக்கிறார் தயாரிப்பாளர். இதனால் அவரது குடும்பமே தெருவுக்கு வந்துவிட்ட நிலையில்தான், இறந்தவரின் மனைவி வேறு வழியில்லாமல் ராதாரவியை தேடி ஓடி வருகிறார்.

நாளைக்கு படம் ரிலீஸ். தன்னுடைய இத்தனையாண்டு கால கஷ்டமும் முடிந்துவிட்டது. வேறு திருமணத்திற்குத் தயாரான தனது மனைவியைக்கூட மீட்டாகிவிட்டது. இத்தனைக்கும் பிறகும் சூர்யா எடுக்கும் அந்த அதிரடி முடிவுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

இதனைக் காட்சிப்படுத்தியவிதம் அழகு என்றாலும், இதன் மூலமாக இயக்குநர் சொல்ல வருவதுதான் நமக்குப் புரியவில்லை. “ஆம்பளை திமிரில்தான் அனைத்தையும் மறந்து கொலை செய்தேன்..” என்கிறார் சூர்யா. இது பொதுவாக ஆண், பெண் இருவருக்குமே இருக்கும் பழி வாங்கும் உணர்வுதான். இதில் எங்கே ஆண், பெண்.. குறில், நெடில் பிரச்சினை..!?

முதலிரவிலேயே “எனக்குப் பிடிக்காமல்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..” என்று விஜய் சேதுபதி சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியாகும் அஞ்சலி அடுத்து செய்வது என்ன..? எல்லாம் சமரசம்தான். ‘இதுதான் வாழ்க்கை. கட்டியாச்சு.. வாழ்ந்து பார்த்திருவோம்’ என்கிற வாழையடி வாழையாக வரும் பழக்கம்தான்.

“எனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தையும் இருக்கு, ஆனா இதுவரை என்னை யாரும் லவ் பண்ணது இல்ல..” என்கிறார் அஞ்சலி. கணவன் ஜெயிலில் இருக்கும்போது வேறொரு ஆண் தன்னிடம் வந்து “ஐ லவ் யூ” சொல்லும்போது எந்தப் பெண் இப்படிச் சொல்லுவார்..? “யோசித்து சொல்கிறேன்…” என்று அஞ்சலி சொல்லும்போதே அவருக்குள் விஜய் சேதுபதியை விட்டு விலக வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது என்றுதானே அர்த்தம்..? இதில் மனைவிக்கான கண்ணியமும், பொறுப்புணர்வும் எங்கே இருக்கிறது..? இவரும் ஒரு சராசரி விஜய் சேதுபதிதானே.?

பிறகு ஏன், “அவன்கூட படுத்தியா..?” என்று விஜய் சேதுபதி சுற்றி வளைத்துக் கேட்கும்போது அப்படியொரு சீன் போட வேண்டும்..? இதற்குப் பின்புதான், “மலர் விஷயம் எனக்கென்ன தெரியாதுன்னு நினைச்சியா..?” என்று கேட்கிறார் அஞ்சலி. ஆக.. கணவனின் திருமணத்துக்கு முந்தைய உறவையும் தெரிந்து வைத்திருந்து கண்டும், காணாமல் இருக்கும் சராசரி பெண்ணாகவே அஞ்சலி தென்படுகிறார்.

இன்னொரு பக்கம் மலர் என்ற பூஜா தேவரியா.. கணவனை இழந்தும் தனக்குப் பிடித்தவனாக இருக்கும் விஜய் சேதுபதியுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் அளவுக்கு பரந்த மனப்பான்மையுடன் இருக்கிறார். “தனக்கு செக்ஸுக்கும், தோழமைக்கும் மட்டுமே ஆண்..” என்று தெளிவாகச் சொல்கிறார். இதில் பெண்மையும், பெண்ணியமும் எங்கே ஒளிர்கிறது என்று யாராவது சொன்னால் தேவலை.

ஆனால் திரைக்கதை டிவிஸ்ட்டாக வேண்டுமென்றே விஜய் சேதுபதியின் சித்தப்பா சீனு மோகனிடம் தன்னைப் பற்றிய உண்மையைச் சொல்லி.. திருமணத்திற்கு மறுதலிப்பதும், திருமணத்திற்கு பின்பு தன்னை நாடி வரும் விஜய் சேதுபதியிடம் தனக்கு வேறொரு ஆள் இருப்பதாக பொய் சொல்லி அவரை அனுப்பி வைப்பதும் ஏன் இயக்குநரே..?

கமலினியின் கதாபாத்திரம்தான் சிறப்பானது.. அவர் படித்த படிப்புக்கும், பார்க்கும் வேலைக்கும் ஏற்ற பக்குவமான வசனங்களுடன், சிறப்பாக நடித்திருக்கிறார் கமலினி.  கொஞ்சம், கொஞ்சமாகத்தான் தனது கணவனைவிட்டு விலகும் முடிவை எடுக்கிறார் கமலினி. அது அத்தனையும் நியாயமானது. கடைசியாக திருமணத்தன்றுகூட காதல் கணவனை மறக்க முடியாமல் ஓடி வந்து கட்டியணைத்து கதறுவதில் இருக்கும் காதலை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இதேபோல் சூர்யா ரயில்வே ஸ்டேஷனில் இருந்து குடித்தவன்போல பேசி தன்னை நிராகரிக்க வைக்க செய்யும் முயற்சியில் கமலியினின் நம்ப முடியாத அதிர்ச்சி கலந்த நடிப்பைப் பார்க்கும்போது, “ஏண்டா அந்தப் பொண்ணை இப்படி படுத்துறீங்க..” என்று ரசிகனையே மனதுக்குள் கேட்க வைத்திருக்கிறார் இயக்குநர். இயக்குநரின் பெண் குரலுக்கான ஒலிப்பு, கமலினி கதாபாத்திரம் மூலமாகவே ஒலித்திருக்கிறது எனலாம்.

விஷயமே தெரியாமல் விஜய் சேதுபதியிடம் “பணத்தை அப்பாகிட்ட வாங்கிக்க..” என்று சொல்லி அட்வைஸை அள்ளிவீசிவிட்டுச் செல்லும் சூர்யா, அடுத்த நாளே மனம் மாறி அவரைக் கொலை செய்யும் அளவுக்கு எப்படிச் செல்கிறார் என்பது நிச்சயம் முரண்பட்ட திரைக்கதைதான்..!

‘நீ எனக்கு தம்பி மாதிரி.. ஆனா அவன் எனக்கு தம்பி’ என்பதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு சினிமா இயக்குநர்.. தன்னுடைய படைப்பு வெளியாக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று சொல்பவர்.. தனது தம்பி எதனால் கொல்லப்பட்டான் என்பதைக்கூட கேட்க விருப்பமில்லாமல் கொலை செய்ய முயல்கிறார் என்றால் இதென்ன அவசரத்தனமான கேரக்டர் ஸ்கெட்ச்.?  செய்துவிட்டு அவர் சொல்லும் அந்த ஆண், பெண், குறில், நெடில் பேச்சு அந்தக் காட்சிக்கு சற்றும் பொருத்தமில்லாதது.

இதுதான் இப்படியென்றால் பாபி சிம்ஹாவின் கதை..! கல்லூரியில் சிலப்பதிகாரம் பாடம் எடுக்கும் பேராசிரியரிடம், “இதேபோல் கண்ணகி யாருடனாவது போய்விட்டு திரும்பி வந்திருந்தால், கோவலன் ஏற்றுக் கொண்டிருப்பானா ஸார்..?” என்று புரட்சிகரமாகக் கேள்வி கேட்கிறார். இதே சிம்ஹாதான் தனது அண்ணன் மனைவி என்று தெரிந்திருந்தும், தன்னுடைய குடும்பத்தால் அவளுடைய வாழ்க்கையை இழந்து தனியே நிற்கிறாள் என்றிருக்கும் சூழலிலும், அவளை தான் காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் சொல்கிறார். முரண்பாடான குணாதிசயமாக இருக்கிறதே..!? ஒரு ஆணின் கோமாளித்தனத்தை காட்டுவதற்கு வேறு திரைக்கதை கிடைக்கலியா இயக்குநரே..?!

மலர், பொன்னி, யாழினி, மீனாட்சி என்று அழகுத் தமிழில் பெண் கதாபாத்திரங்களுக்கு பெயர் வைத்துவிட்டு “தமிழ், தமிழ்ன்னு சொன்னவங்களுக்கு செருப்படி..” என்று எதற்காக வசனத்தை வைத்திருக்கிறார் இயக்குநர் என்பது தெரியவில்லை.

கேரளா போய் கொள்ளையடிக்கும் முடிவுக்கு எஸ்.ஜே.சூர்யா பாபி சிம்ஹாவிடம் ஒப்புதல் அளிக்கும்போது அவர்கள் இருக்கும் இடம் தற்போதைய சேப்பாக்கம் தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், தென் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஜெ.அன்பழகனின் பழக்கடை முன்பாக.. தலைக்கு மேல் தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியின் புகைப்படமும் தென்படுகிறது.. இது என்ன வகையிலான குறியீடு என்று தெரியவில்லை. தி.மு.க.வுடன் மோதும் அளவுக்கு கார்த்திக் சுப்புராஜ் வளர்ந்துவிட்டாரா என்ன..? 

ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவுக்கும், எடிட்டர் விவேக் ஹர்ஷனின் படத் தொகுப்பிற்கும் பாராட்டுக்கள். எடிட்டர்தான் பாவம் மண்டையை பிய்த்துக் கொண்டிருப்பார். இயக்குநர் வந்து கொட்டியதையெல்லாம் எடிட் செய்தே, இத்தனை நீளமென்றால் இவரது உதவியும் இல்லையெனில் படம் எப்படியிருந்திருக்கும்..?

படத்தின் துவக்கத்தில் வரும் குரூப்பிஸ சண்டை. சூர்யாவை மது பழக்கத்தில் இருந்து மீட்க மருத்துவ மையத்திற்கு அனுப்புவது.. அங்கே நடக்கும் அடிதடிகள்.. அடிக்கடி காட்டப்படும் ஹோட்டல் பப்புகளின் காட்சிகள்.. என்று பலவற்றை தயவு தாட்சண்யமே இல்லாமல் நீக்கியிருந்தால், சுமாராக 25 நிமிட காட்சிகளைத் தூக்கியிருக்கலாம். படம் ஓரளவுக்கு கிரிப்பாக இருந்திருக்கும்..!

இந்தப் படத்திற்கு பாடல்களே தேவையில்லை. இல்லாமல் இருந்திருந்தால் சந்தோஷமே.. ஆனாலும் வைத்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணனின் இசையில் ‘ஒண்ணு ரெண்டு’, ‘காதல் கப்பல்’ பாடல்கள் ஓகே. சந்தோஷ் நாராயணனே பாடும் ‘துஷ்டா’ பாடலில் நடனம் அருமை.. பாடல் நஹி.. இதேபோல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘மனிதி’ பாடலும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

பெண்ணியம் பேசுவதென்றால் அதனை பெண்களே பேசுவதுதான் உண்மைத்தனம். இது ஆண்களின் செயல்களின் மூலம் பாதிக்கப்படும் பெண்களின் கதை என்றாகி அதிலும் முரண்பாடான பெண்களின் கதாபாத்திரங்களின் மூலம் அவர்கள் மீதான பரிதாப உணர்வை கொண்டு வர முயன்றிருக்கிறார் இயக்குநர். ஆனால் துரதிருஷ்டவசமாக இதில் பாதியளவு வெற்றி கிடைத்திருக்கிறது என்பதுதான் உண்மை.

‘மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்பாதீர்கள்’ என்று சல்ஜாப்பு சொல்லி தங்களுக்குள்ளேயே விமர்சனங்கள் வைப்பதை கடுமையாக எதிர்க்கும் இந்தத் தமிழ்த் திரையுலகத்தில், தைரியமாக ஒரு தயாரிப்பாளரின் கேரக்டரை வைத்து அதையும் கடுமையாக விமர்சனத்திற்குட்பட செய்திருக்கும் அந்த ஒரு விஷயத்திற்காகவே இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கு நமது சல்யூட்.

முந்தைய படங்களை போலவே இந்தப் படமும் கார்த்திக் சுப்புராஜ் எதிர்பார்க்கும் அனைத்து வகை விமர்சனங்களையும் சந்திக்கப் போவது உறுதி. ஆக.. அவர் எதிர்பார்த்தது நடந்தேறி வருகிறது.

இயக்குநருக்கு நமது வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!

Our Score