full screen background image

இன்னமும் எம்.பி. பதவி ஏற்கலை. அதுக்குள்ள கோஷ்டி மாறிய நடிகர் இன்னசென்ட்..!

இன்னமும் எம்.பி. பதவி ஏற்கலை. அதுக்குள்ள கோஷ்டி மாறிய நடிகர் இன்னசென்ட்..!

ஓட்டுப் போட்ட மை காய்வதற்குள் அந்த வேட்பாளர் கட்சி மாறி நிற்பதையெல்லாம் சினிமாக்களைவிட நிஜ வாழ்க்கையிலேயே நாம் இனிமேல் பார்க்கலாம்..! மலையாள குணச்சித்திர நடிகர் இன்னசென்ட் இன்று ஒரு ஸ்டண்ட் அடித்து கேரளத்து இடதுசாரிகளை கோபம் கொள்ள வைத்திருக்கிறார்.

மலையாளத்தில் புகழ் பெற்ற குணச்சித்திர, நகைச்சுவை நடிகர் இன்னசென்ட். அங்கேயிருக்கும் மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பிற்கும் இவர்தான் தலைவர். கடந்த வரும் திடீரென்று தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவச் சிகிச்சை பெற்று நோயையும் வென்றுவிட்டு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியிருந்தார்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சாலக்குடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார் இன்னசென்ட். சுயேட்சையாகப் போட்டியிட்டாலும் அத்தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிப்படையான ஆதரவுடன்தான் போட்டியிட்டார் இன்னசென்ட்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு பல நடிகர், நடிகைகள் ஓடோடி வந்தனர். மலையாள சூப்பர் ஸ்டார்கள் மோகன்லாலும், ம்ம்மூட்டியும் தங்களது ஷூட்டிங்கிற்கு இடையே ஓடி வந்து இவருக்காக பிரச்சாரம் செய்து கொடுத்தார்கள். கலாபவன் மணி தனது வீட்டிற்கு இன்னசென்ட்டை அழைத்து ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ பாடி உற்சாகப்படுத்தினார்.. தேர்தலில் வெற்றியும் பெற்றார் இன்னசென்ட்.

இன்னசென்ட் பெற்ற ஓட்டுக்கள் 3,58,440. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் பிரமுகர் பி.சி.சாக்கோவை 13,944 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தோற்கடித்தார். கேரளாவில் ஒரு சுயேட்சை உறுப்பினர் பெற்ற ஓட்டுக்களில் இதுதான் அதிகம்..!

இயல்பாகவே மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவாளரான இன்னசென்ட் போட்டியிட ஆதரவு கொடுத்து, அவருக்கு தேர்தல் லைனை கிளியர் செய்து கொடுத்தவர் கேரளாவின் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன். வெற்ற பெற்ற கையோடு இடதுசாரிகளுக்கும் தோள் கொடுத்த வலது சாரிகளுக்கும் நன்றி சொன்ன இன்னசென்ட், இன்று விடுத்திருக்கும் ஒரு அறிக்கை நிச்சயம் அவர்களுக்கே பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கும்.

“நரேந்திர மோடி நல்ல கொள்கைகளை உடையவர்.. நல்ல மனிதர். எந்தவிதத்திலும் அவரை ஒரு மதத் தீவிரவாதி என்று சொல்ல முடியாது.. அவர் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார் என்றும் சொல்ல முடியாது. எனது முழு ஆதரவு நரேந்திர மோடிக்கு உண்டு. ஒரு வருடமாவது காத்திருந்துதான் மோடியின் நிர்வாகம் எப்படிப்பட்டது என்று சொல்ல முடியும்.. நான் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தவன். மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவுடன் வெற்றி பெற்றாலும் பல்வேறு விஷயங்களில் எனக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு. கட்சி எனது கருத்துக்களை புரிந்து கொள்ளும்…” என்றும் சொல்லியிருக்கிறார் இன்னசென்ட்.

மார்க்சிஸ்ட் கட்சியின் இது பற்றிய கமெண்ட் இதுவரையில் வெளியாகவில்லை.. பேசாமல் இத்தொகுதியிலும் இடது சாரி கட்சி தனது உறுப்பினரையே நிறுத்தியிருந்தால் கூடுதலாக ஒரு ஆளாவது கிடைத்திருக்கும்.. தோழர்களுக்கு இது தேவையா..?

Our Score