ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘இனிமே இப்படித்தான்’. புதுமுக இயக்குநர்களான இரட்டையர்கள் பிரேம் ஆனந்த், முருகன் ஆகியோர் காமெடியும், காதலும் ஒன்றிணைந்தாற்போல் உருவாகியிருக்கும் இப்படத்தில் ‘முருகானந்த்’ என்ற பெயரில் இயக்கி தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகம் ஆகியிருக்கிறார்கள்.
“சந்தானம் எங்களது நீண்ட கால நண்பர். எங்கள் வசம் இருந்த மூன்று கதைகளும் அவருக்குப் பிடித்திருந்தது, அதில் இருந்து ‘இனிமே இப்படிதான்’ கதையை அவர்தான் தேர்வு செய்தார். மேலும் திடீர் அதிர்ச்சியாக எங்களையே இயக்கவும் சொன்னார்.
எனது ஞாபகம் சரியாக உள்ளதென்றால் ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்பேயே அவரது படத்தில் எங்களை இயக்குநர்களாக அறிமுகப்படுத்துவேன் என்று கூறியிருந்தார் சந்தானம். சொன்ன வார்த்தைக்கு ஒரு எழுத்து குறையாமல் இப்போது நிறைவேற்றியுள்ளார்.“ என்கிறார் இயக்குந இரட்டையரில் ஒருவரான பிரேம் ஆனந்த்.
“இனிமே இப்படித்தான்’ சந்தானத்திற்கு பொருத்தமான ஒரு ரொமாண்டிக் காமெடி படம். அழகான பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் திரியும் வேலையில்லாத இளைஞனாக வருகிறார் சந்தானம். ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். தம்பி ராமையா, பெப்சி விஜயன், பிரகதி, நரேன், V.T.V. கணேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்..” என்கிறார் இயக்குநர் முருகன்.
“V.T.V. கணேஷ் சந்தானத்திற்கு காதல் ஆலோசகராக வருகிறார் இருவரும் இணைந்து நடித்திருக்கும் காட்சிகளும், அவர்களது பஞ்ச் வசனங்களும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். சந்தானம் இப்படத்தில் ரிஸ்கான பல சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார். இதைப் பற்றி கேட்கும்பொழுது ‘இனிமே இப்படித்தான்’ என்று டைமிங்காக சொன்னார் சந்தானம். இது அவரது தன்னம்பிக்கையை காட்டியது.
அனைத்து தரப்பு ரசிகர்களை திருப்திப்படுத்தும் சந்தானத்தின் பல்வேறு முயற்சிகள் இப்படத்தை சிறப்பான ஒன்றாய் மாற்றியுள்ளது. மொத்தத்தில் ஒரு முழு நீள பொழுதுபோக்கு திரைப்படமாக வருகிறது ‘இனிமே இப்படித்தான்’…” என கூட்டாக கூறுகிறார்கள் இயக்குநர்கள் முருகானந்த்.












